Published:Updated:

`தாமிரபரணி நதிக்கரையில் கதையாடல் நிகழ்வு!' - குழந்தைகளுக்கான புதிய பண்பாட்டு முயற்சி

தாமிரபரணி நதிக்கரையில் நடந்த கதையாடல் நிகழ்ச்சி
News
தாமிரபரணி நதிக்கரையில் நடந்த கதையாடல் நிகழ்ச்சி

``தாமிரபரணி பண்பாட்டை மீட்கும் நிகழ்வில் குழந்தைகளையும் ஈடுபடுத்த முயன்றிருக்கிறோம். சிறு குழந்தைகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தாமிரபரணியின் பெருமைகளைப் புரிய வைக்கவே இந்த முயற்சி." - கதையாடல் நிகழ்வு பற்றி ஒருங்கிணைப்பாளர்கள்

நெல்லையின் பாரம்பர்ய அடையாளம், தாமிரபரணி ஆறு. பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி 128 கி.மீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. ஆற்றின் வழிநெடுக கருங்கல் மண்டபங்கள் ஏராளமாக இருக்கின்றன.

குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி
குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி

நெல்லை குறுக்குத்துறையில் உள்ள படித்துறை மற்றும் கல் மண்டபங்கள் நீண்ட பாரம்பர்யத்துக்குச் சொந்தமானவை. புதுமைப்பித்தன் உள்ளிட்ட பல்வேறு இலக்கியவாதிகளும், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளும் மகிழ்ந்து சிலாகித்த இடம் என்பதால் அதன் தொன்மையைப் பாதுகாக்க பல்வேறு அமைப்புகளும் களமிறங்கியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குறுக்குத்துறை கல் மண்டபம் மற்றும் படித்துறை குறித்து பொதுமக்களுக்கும் சிறுவர், சிறுமியருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்,வகையில் `நாற்றங்கால்' அமைப்பு, பிரமிள் நூலகம், த.மு.எ.ச.க உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன. குறுக்குத்துறை பகுதியில் சூழ்ந்து கிடக்கும் சீமைக் கருவேல முள்செடிகளை அகற்றுவது மற்றும் அந்தப் பகுதியைச் சுத்தமாகப் பாதுகாப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

கதையாடல் நிகழ்வு
கதையாடல் நிகழ்வு

அதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு வாரமும் கதையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். முதல் வாரத்தில் புதுமைப்பித்தனின் `சாயங்கால மயக்கம்’, `விநாயக சதுர்த்தி’ ஆகிய இரு சிறுகதைகளை எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் வாசித்தார். பின்னர் அந்தக் கதைகள் குறித்து நதிக்கரை கல்மண்டபத்தில் அமர்ந்து விவாதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சிறுவர், சிறுமியரிடம் நதிக்கரையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `ஊஞ்சல்', `முற்றம்', `குருத்து', `நல்லதைப் பகிர்வது நம் கடமை', `கலை பண்பாட்டு மன்றம்' ஆகிய அமைப்புகள் இணைந்து கதையாடல் நிகழ்ச்சியை நடத்தின. தாமிரபரணி மதியழகன் கோமாளி வேடமணிந்து வந்து குழந்தைகளைப் பரவசப்படுத்தியதுடன், கதைசொல்லியாகச் செயல்பட்டார்.

வித்தியாசமாக வேடமணிந்து கதை சொல்லல் நிகழ்ச்சி
வித்தியாசமாக வேடமணிந்து கதை சொல்லல் நிகழ்ச்சி

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதியழகன், கதை சொன்னதுடன் பாடல்களையும் பாடி சிறுவர்களை மகிழவைத்தார். நிகழ்ச்சியின்போது குழந்தைகள் இயற்கையின் அழகையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து சமூக ஆர்வலர் ரமேஷ்ராஜா, எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் கூறுகையில், ``தாமிரபரணி நதி அழகானது. குறுக்குத்துறை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்த இடத்தின் முக்கியத்துவம் தெரியாததால் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியே புதர் மண்டிக் கிடக்கிறது. மக்களே இந்தப் பகுதியை அசிங்கப்படுத்துகிறார்கள்.

ஆர்வத்துடன் கதை கேட்ட குழந்தைகள்
ஆர்வத்துடன் கதை கேட்ட குழந்தைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல் மண்டபங்கள், படித்துறைகள் கொண்ட இந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதைப் பொதுமக்களுக்குப் புரியவைக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் கதையாடல் நிகழ்ச்சியை இங்கு வைத்து நடத்துகிறோம். அதைப் பார்க்கும் இப்பகுதி மக்கள் இந்த இடத்தை அழகாகப் பராமரிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

மக்களின் பயன்பாட்டில் இருந்த போதிலும் சேதமடைந்து கிடக்கும் இந்தப் பகுதியைச் சீரமைத்து தாமிரபரணி நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். இதில் பல்வேறு அமைப்புகளும் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் இந்த முயற்சிக்கு மாவட்ட நிர்வாகமும் உதவ முன்வந்திருக்கிறது.

கதை சொன்ன சுட்டிக் குழந்தை
கதை சொன்ன சுட்டிக் குழந்தை

தாமிரபரணி பண்பாட்டை மீட்கும் நிகழ்வில் குழந்தைகளையும் ஈடுபடுத்த முயன்றிருக்கிறோம். சிறு குழந்தைகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தாமிரபரணியின் பெருமைகளைப் புரிய வைக்கவே இந்த முயற்சி. இந்தப் பகுதியில் உள்ள யானைக்கல் பாலம் இடிந்து கிடக்கிறது. அதையும் பழைமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

தாமிரபரணி படித்துறை கல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர். தலைமுறைகள் தாண்டி கடத்தப் படட்டும் வரலாறு!