இந்திய தலைநகர் டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்திலிருக்கின்றனர்.

நேபாளத்தை மையமாகக்கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சரியாக இன்று மதியம் 2:28 மணியளவில், டெல்லி, என்.சி.ஆர் (National Capital Region) பகுதியில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரிக்டர் அளவில் 5.8-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
மேலும் இது பற்றி வெளியான அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையில், பூமியின் மேற்பரப்பிலிருந்து 25.2 கி.மீ ஆழத்தில், 5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், நேபாளத்தின் ஜும்லா நகருக்குத் தென்கிழக்கே 62 கி.மீ தொலைவிலும், தார்ச்சுலாவிலிருந்து வடமேற்கே 109 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
திடீரென நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்திலிருப்பதாகக் கூறப்படுகிறது.