Election bannerElection banner
Published:Updated:

``கல்பனா சாவ்லா போல சாதிக்கணும்!" - ராகுல் காந்தியால் இஸ்ரோ சென்ற மாணவி நெகிழ்ச்சி

மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி
மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி

5-ம் வகுப்பு மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லியை, திருவனந்தபுரம் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ராகுல் காந்தி.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் முளகுமூட்டில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி தண்டால் எடுத்த நிகழ்வு வைரலானது. முளகுமூடு பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக, பரைக்கோடு பகுதியில் ராகுல் சென்று கொண்டிருந்தபோது சில மாணவர்கள் கையில் காமராஜர் போட்டோ மற்றும் பூச்செண்டுகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அந்தச் சிறுவர்களை அழைத்துப் பேசினார் ராகுல் காந்தி. அதில் மாணவர் ஆன்டனி பெலிக்ஸ், தனக்கு ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் இருப்பதாகவும், ஸ்கூலில் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மற்றொரு மாணவரான பெலிக்ஸ் ஜாம், தான் விஞ்ஞானி ஆக விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி சென்ற ராகுல் காந்தி மாணவன் ஆன்டனி பெலிக்ஸுக்கு ஷூ வாங்கி அனுப்பி வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அதே போன்று, மாணவர் பெலிக்ஸ் ஜான் திருவனந்தபுரம் இஸ்ரோவைப் பார்வையிட அனுமதி பெற்றுக்கொடுத்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லியை, திருவனந்தபுரம் இஸ்ரோவுக்கு அனுப்பிவைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதிய கடிதம்
ராகுல் காந்தி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதிய கடிதம்
குமரி: ஃபிட்னெஸ் பற்றிக் கேட்ட மாணவி - ஒற்றைக் கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல் காந்தி!

மார்த்தாண்டம் அருகே காஞ்சாம்புரத்தைச் அடுத்த கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்த பியூலெட் ஜெனி சுபா - ஜெயச்சந்திரன் தம்பதியின் ஒரே மகள் ஜிஃபா ஜெ.பிரிட்லி (Jifa J Bridly). மார்த்தாண்டம் குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி. திருவனந்தபுரம் இஸ்ரோவுக்குச் சென்று வந்தது பற்றி ஜிஃபா ஜெ.பிரிட்லியின் தாய் பியூலட் ஜெனி சுபா கூறுகையில், ``நான் முளகுமூடு ஆண்கள் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கிறேன். ராகுல் காந்தி முளகுமூடு பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாட வந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். அப்போது ராகுல் காந்தி ஒரு மாணவருக்கு, திருவனந்தபுரம் இஸ்ரோவை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கிக்கொடுப்பது பற்றி பேசினார்.

அந்த நிகழ்ச்சியை வீட்டில் இருந்து லைவ்வாக பார்த்துக்கொண்டிருந்த என் மகள் எனக்கு போன் செய்து, ``இஸ்ரோவை சுற்றிப் பார்க்க எனக்கு அனுமதி கேட்டுப் பாரும்மா" என்றாள். நானும் ராகுல் காந்தியிடம், ``உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று கோரிக்கை வைத்தேன். அவர் நேரம் ஒதுக்கித் தந்தார்.

ராகுல் காந்தியிடம், ``என் அப்பா விவசாயி. என் கணவரும் விவசாயிதான். நான் முதல் பட்டதாரி. எனக்கு ஒரு மகள். அவள் மூன்று வயதிலிருந்தே விண்வெளி துறை மீது மிகவும் ஆர்வமாக இருக்கிறாள். இப்போது உங்கள் புரோகிராமை லைவ்வாக பார்த்துக்கொண்டிருக்கிறாள். `எனக்கும் இஸ்ரோ செல்ல வாய்ப்பு பெற்றுத் தர முடியுமா?' என்று கேட்கிறாள். வாய்ப்பு கிடைக்குமா?" என்று கேட்டேன்.

மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி
மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி

அதற்கு அவர், ``இஸ்ரோவைப் பார்ப்பதற்கு முன் நிறைய மாணவர்கள் அதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், பார்த்துட்டு வந்த பிறகு, அந்தத் துறையில் ஆர்வம் குறைந்து போவார்கள். இருந்தாலும் உங்கள் மகள் சென்று வரட்டும்" என்றவர், தன் பி.ஏ-விடம் விவரத்தைச் சொன்னார். உடனடியாக என்னிடம் ஆதார் போன்ற ஆவணங்கள் கேட்கப்பட, நாங்களும் கொடுத்தோம்.

பிறகு அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் விரைவாகச் செய்தார்கள். கடந்த மார்ச் 22-ம் தேதி திருவனந்தபுரம் இஸ்ரோவுக்குப் போனோம். அங்குள்ள விஞ்ஞானிகளிடம் என் பெண், ``நானும் வளர்ந்து விஞ்ஞானி ஆகி ராக்கெட்டுல பறந்து விண்வெளிக்குப் போவேன்" என்றாள். அதற்கு அவர்கள், ``மேல பறந்துதான் போகணும்னு இல்ல, கீழ இருந்தே ஆய்வு பண்ணலாம்" என்றார்கள். ``இல்ல நான் மேல போய்தான் ஆய்வு பண்ணுவேன்" என்றாள் என் மகள். அவர்கள் இவளுடைய உறுதியான பேச்சைப் பார்த்து ஆச்சர்யமாகி சிரித்தார்கள்" என்றார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

சிறுமி ஜிஃபா ஜெ.பிரிட்லியிடம் பேசினோம். ``எனக்கு மூணு வயசா இருக்கும்போது நிலாவைப் பார்த்து, அது அடிக்கடி உருவம் மாறுவதைப் பத்தி அம்மாகிட்ட கேட்பேன். வளர்ந்தப்போ, யாராவது ராக்கெட்டுல நிலாவுக்குப் போயிருக்கிறாங்களான்னு கேட்டேன். நீல் ஆம்ஸ்ட்ராங் போயிருக்காங்கனு சொன்னாங்க. விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா பத்தி அம்மாவும் ஸ்கூலயும் மிஸ்ஸும் சொன்னப்போ, அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. கல்பனா சாவ்லா பத்தி நெட்ல படிச்சு நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். இதெல்லாம் எனக்கு விண்வெளி ஆய்வு மேல ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.

இஸ்ரோ போனப்போ, அப்துல் கலாம் ஐயா வேலை பண்ணின இடங்களை எல்லாம் பார்த்தேன். அதெல்லாம் எனக்கு இன்னும் ஆர்வத்தை அதிகரிச்சிருக்கு. ராகெட்டுல விண்வெளிக்குப் போகணும், இந்தியாவுக்காக சாதிக்கணும்னு எண்ணம் ஏற்பட்டிருக்கு. மேல போய் ஸ்பேஸ்ல ரிசர்ச் பண்ணனும். கல்பனா சாவ்லாதான் என்னோட ரோல் மாடல். இந்தப் பெரிய வாய்ப்பையும், அனுபவத்தை எனக்குக் கொடுத்த ராகுல் காந்தி அங்கிளுக்கு எவ்ளோ நன்றி சொல்றதுனு தெரியல" என்றவர்,

மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி
மாணவி ஜிஃபா ஜெ.பிரிட்லி

``என்ன நீங்க இந்தியாவுக்காக கொடுப்பீங்க இல்ல மம்மி? ப்ளஸ் டூ முடிச்சதும் என்னை விட்டுடணும். நான் கல்பனா சாவ்லா மாதிரி பஞ்சாப் யுனிவர்சிட்டிக்கு படிக்கப் போவேன். இஸ்ரோல சேர்வதுதான் என் லட்சியம்'' என்று ஜிஃபா சொல்ல, அவர் அம்மா ஜெனி சுபா முகத்தில் மகிழ்வும் பெருமையும்.

கனவு நிறைவேறட்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு