Published:Updated:

ராதாபுரம்: கல் குவாரி வெடியால் குழந்தை பலியான சம்பவம்; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் அனுமதி பெற்று சில கல் குவாரிகள், அனுமதி பெறாமல் சில கல் குவாரிகள் இயங்கிவருகின்றன. இங்கு வைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகளால் வீடுகள் உடைந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கல் குவாரி செயல்பட்டுவருகிறது. இங்கு கிடைக்கும் கற்கள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆழ்கடலில் துறைமுகம் அமைக்கும் பணிக்காகவும் நான்குவழிச் சாலைகள் அமைக்கும் பணிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

கல் குவாரி
கல் குவாரி

ராதாபுரம் அருகேயுள்ள சீலாத்திகுளம் பகுதியில் செயல்பட்ட குவாரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பகல் நேரத்தில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டது. இந்த வெடியால் முருகன் என்பவரின் வீட்டுக் கூரை இடிந்து விழுந்தது. அதில் அவருடைய மூன்று வயது மகன் ஆகாஷ் உயிரிழந்தார். மேலும் அந்தக் கிராமத்திலுள்ள 10-க்கும் அதிகமான வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டது.

கல் குவாரிகளிலிருந்து இரவும் பகலும் ஏராளமான வாகனங்கள் ஊருக்குள் சென்று வரும்போது விபத்துகள் ஏற்படுவதால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த பொதுமக்கள், குழந்தை இறந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் கோபமடைந்தனர். அதனால் கல் குவாரியை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிருப்தியில் பொதுமக்கள்
அதிருப்தியில் பொதுமக்கள்

பொதுமக்களிடம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கல் குவாரிகளை மூடக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில், இன்று சீலாத்திகுளம் கல் குவாரியை சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல் குவாரியில் வெடிவைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட அவர், குவாரியில் விதிமீறல்கள் நடந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்தார். குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான கல் குவாரியை விசாரணை முடியும் வரை மூடுமாறு அவர் உத்தரவிட்டார்.

கல் குவாரில் சப்கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு
கல் குவாரில் சப்கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு

கல் குவாரியில் வெடிவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குவாரியின் உரிமையாளர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், ‌கூடங்குளம் அருகிலுள்ள சுச்சிகுளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல் குவாரி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். சப் கலெக்டரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு