தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பிரிவுக்குத் தயாராகும் தம்பதியர்... ஜீவனாம்சம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
News
தம்பதியர்

விவாகரத்து பெறும் தம்பதிகள், ஃபைனான்ஷியல் பிரிவை சுமுகமாக முடிக்க... செய்ய வேண்டிய விஷயங்கள்!

ஆணும் பெண்ணும் விவாகரத்து மூலம் பரஸ்பரம் பிரிந்துபோகும் உரிமையை நம் இந்திய திருமணச் சட்டங்கள் அனுமதித்தாலும், பொருளாதார ரீதியான சிக்கல்கள் பலருக்கும் தடையாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் பெரும்பாலான தம்பதியர் வேலைக்குப் போய் சம்பாதித்து, இருவரும் சேர்ந்தே குடும்பத்தின் நிதி நிலைமையைக் கவனித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்தே சொத்துகளை (வீடு, நிலம், தங்கம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் உள்ளிட்டவை) உருவாக்குகிறார்கள். சேர்ந்தே முதலீடுகளையும் மேற்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், யாராவது ஒருவர் பெயரில் மட்டுமே அதிக அளவில் சொத்துகளை உருவாக்கி வைத்திருப்பது, விவாகரத்தின்போது சிக்கலை ஏற்படுத்துகிறது.

பில்கேட்ஸ் - மெலிண்டாவைப் போல, பரஸ்பர விவாகரத்து மூலம் முடிவெடுக்கும் தம்பதிகள் பொருளாதார ரீதியாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள், முன்னெச்சரிக்கையாக என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டோம். முதலில், சட்ட ரீதியான விஷயங்கள் குறித்துப் பேசினார், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் வழக்கறிஞர் அ.பானுமதி.

பிரிவுக்குத் தயாராகும் தம்பதியர்... ஜீவனாம்சம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

“விவாகரத்துடன் ஜீவனாம்சம் பெறுவது தொடர்பான வழக்கில், தம்பதி இருவரும் மனமுவந்து சுமுக முடிவுக்கு வந்தால், அதிகபட்சம் ஆறு மாத காலத்திலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிடும்.

இடைக்கால ஜீவனாம்சம், நிரந்தர ஜீவனாம்சம் என ஜீவனாம்சத்தில் இரண்டு வகை உண்டு. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட விவாகரத்து வழக்கு முடியும்வரை, இந்த இடைக்கால ஜீவனாம்சத்தைத் தன் கணவரிடமிருந்து ஒரு பெண் பெறலாம். அதாவது, மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவது.

ஒருகட்டத்தில் இருவரும் உடன்பட்டு ஒப்புக்கொண்ட நிரந்தர ஜீவனாம்சத் தொகையின் அடிப்படையில், தம்பதியின் விவாகரத்து வழக்கின் இறுதித் தீர்ப்பு கூறப்படும். அப்போது, அதுவரை வழங்கி வந்த இடைக்கால ஜீவனாம் சத்தை ரத்து செய்துவிட்டு, நிரந்தரமாக ஒரு தொகையை ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.

இது தவிர, ஒருமுறை தீர்வு (One time settlement) என்கிற ஆப்ஷன் ஒன்று இருக்கிறது. சுமுகமாகப் பிரியும் தம்பதிகள், இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். ஏனெனில், இந்த ஆப்ஷனில் வழக்கின் ஆரம்பத்திலேயே, தம்பதியின் வசதிக்கேற்றாற்போல ஜீவனாம்சத் தொகை நிர்ணயம் செய்யப் படும். இது வழக்குக்கு வழக்கு, மனுதாரர்களின் நிதி வசதிகளைப் பொறுத்து வித்தியாசப்படும். பணமாக இல்லாமல், அசையும்/அசையா சொத்துகளைக் கூட கணவரிடமிருந்து ஒரு பெண் ஜீவனாம்சமாகப் பெறலாம். இதன்படி, கணவரோ, மனைவியோ நீதிமன்றம் வாயிலாக ஒருமுறை ஜீவனாம்சம் வாங்கிவிட்டால், அதற்குப் பின்னர் கணவர் மனைவியிடமோ, மனைவி கணவனிடமோ மீண்டும் ஜீவனாம்சம் கேட்க முடியாது.

அ.பானுமதி
அ.பானுமதி

சொத்துகள் இருவர் பெயரில் இருந்தால்..!

இன்றைய நிலையில், தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்வதால், முதலீடுகள் மற்றும் கடன் சார்ந்த நடவடிக்கைகளைச் சேர்ந்தே செய்கிறார்கள். இப்படிச் செய்யும்போது, இருவரின் பெயரில் சரிசமமாகத் தனித்தனியாக சொத்துகளை உருவாக்கி வைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், இருவருடைய சம்பாத்தியத்தைப் பொதுவாக வைத்து, கணவர் பெயரில் மட்டும் அல்லது மனைவி பெயரில் மட்டும் அதிக அளவில் சொத்துகளை வாங்கிப் பதிவு செய்திருந்தால், விவாகரத்து நடவடிக்கையின்போதும், விவாகரத்துக்குப் பிறகும் அவை யார் பெயரில் இருக்கின்றனவோ, அவருக்கே அந்தச் சொத்துகள் அனைத்தும் சொந்தமாகும். இது மாதிரியான வழக்குகளில் தான் பிரச்னை உருவெடுக்கிறது. சொத்து மற்றும் இதர முதலீடுகளை எப்போதுமே இருவரின் பேரில் தனித்தனியாக அல்லது இருவரின் பேரில் கூட்டாக வாங்கி வைப்பது நல்லது.

சீதனமாகப் போட்ட நகைகள்...

திருமணத்தின்போது, மனைவிக்கு சீதனமாக போட்ட நகைகளைக் கடன் அடைப்பதற்கு அல்லது தொழில் பயன்பாட்டுக்கு அல்லது சொத்து உருவாக்கத்துக்கு என கணவர் அடமானம் வைப்பது வாடிக்கையான விஷயம்தான். நகைகள் அடமானத்தில் இருக்கும் காலகட்டத்தில், விவாகரத்துக்கு முடிவெடுக்கும் தம்பதிகள், மற்ற விஷயங்களைப் போல இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், தன்னுடைய மொத்த நகைகளையும் திருப்பிக் கேட்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. உதாரணமாக, ஒரு பெண்ணுக்குச் சொந்தமான 50 பவுன் நகை அடமானத்தில் இருந்து, அதில் 30 பவுன் நகை மட்டுமே செட்டில்மென்ட் நேரத்தில் கணவர் திருப்பித் தந்தால், மீதித் தங்கத்துக்கு இணையான இதர சொத்துகளைக் கேட்டு வாங்கும் உரிமையும் பெண்ணுக்கு உண்டு.

கடனிலும் சமபங்கு உரிமை...

சொத்து மற்றும் முதலீடுகளை இருவரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்வது போல, கடனிலும் இருவருக்கும் பங்கு இருக்கிறது. உதாரணமாக, தம்பதிகள் ஒரு வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பித்து, அதன் வாயிலாக வீட்டுக்கடன் வாங்கி, வீடு வாங்கி யிருந்தால், அந்தக் கடன் கட்டும் காலம் வரையும் அது இருவருக்குமானதுதான். இந்தக் கடனை இருவருமே தொடர விருப்பம் இல்லை எனில், கடனில் இருக்கும் அந்த வீட்டை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்கலாம் அல்லது அந்த வீட்டுக்கடனை ஒருவர் கட்ட முடிவெடுக்கும்பட்சத்தில், கடன் கட்டுபவர் மற்றவரை அதிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங் களையும் இரு தரப்பினரும் முறையாக முடித்து, அதற்கான ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்த பிறகே விவாகரத்து வழக்கானது முடிவுக்கு வரும். விவாகரத்து பெற நினைக்கும் தம்பதிகள், இப்படி சுமுகமாகச் செயல்பட்டால் எதிர்காலத்தில் சட்ட ரீதியான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்” என்றார் தெளிவாக.

விவாகரத்து என்பது வேதனை தரும் விஷயம் என்றாலும், தனக்கு நியாயமாகச் சேர வேண்டியதை எந்தப் பெண்ணும் கேட்காமல் விட்டுவிடக் கூடாது!

பிரிவுக்குத் தயாராகும் தம்பதியர்... ஜீவனாம்சம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நாமினி மாற்றம் முக்கியம்!

விவாகரத்து முடிவுக்கு விண்ணப்பிக்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதை நிதி ஆலோசகர் வித்யா பாலா விளக்கினார்... ``விவாகரத்துக்கு விண்ணப்பித்த தம்பதிகள், அவர்களுக்கு நம்பிக்கையான நிதி ஆலோசகர்களை அணுகி, சொத்து மற்றும் இதர நிதி சார்ந்த விஷயங்களைச் சொல்லி, சரிசமமாகப் பிரித்துக்கொள்ளத் திட்டமிடுவது முக்கியம். அப்போதுதான் முதலீடுகளை, கடன்களைப் பிரிக்கும் விஷயத்தில் யார் யாருக்கு, என்னென்ன போய்ச் சேர வேண்டும் என்பதில் தெளிவு கிடைக்கும்.

விவாகரத்து பெறும் தம்பதிகள் குறிப்பாக, நாமினி விஷயங்களை மறந்துவிடுவார்கள். தனது வங்கிச் சேமிப்புக் கணக்கு அல்லது எஃப்.டி கணக்குக்கு நாமினியாக மனைவி, கணவர் பெயரையும் கணவர், மனைவி பெயரையும் கொடுத்து வைத்திருப்பது வழக்கம். அதே போல, டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ், எண்டோமென்ட் பாலிசி களுக்கும் நாமினியாகக் கொடுத்து வைத்திருப் பார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கும் நாமினியாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம். சொத்து மற்றும் கடன் சார்ந்த நடவடிக்கை களைக் கவனத்தில் வைத்துச் செயல்படுவது போல, நாமினி பெயர் மாற்றும் விஷயத்தையும் விவாகரத்துக்கு முன்பாக முடித்துக்கொள்வது நல்லது” என்றார்.

வேலை பார்க்கும் பெண் ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

‘`வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும் விவாகரத்து செய்யும்போது தன் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும். கணவன் தரப்பிலிருந்து, ‘தன் மனைவி தன்னைவிட அதிகம் சம்பளம் பெறுகிறார்’ என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால்’ அப்போது, அந்த மனைவிக்கு ஜீவனாம்சமாக எவ்வளவு கொடுக்கலாம் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். விவாகரத்து பெறும் தம்பதிக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருந்து, அவர்கள் தாயிடம் வளர்வதாக முடிவானால், அதிக சம்பளம் பெறும் மனைவியாக இருந்தாலும் தன் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் இதரச் செலவுக்காக ஜீவனாம்சம் பெறலாம். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது மொத்தமாக ஒரு தொகையை குழந்தைகளின் பராமரிப்புக் காக அவர் ஜீவனாம்சமாகப் பெற்றுக் கொள்ளலாம்’’ என்கிறார் அ.பானுமதி.