தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“தரத்துல நாங்க நம்பர் 1... தைரியமா சவால் விடுவோம்!”

பால்
பிரீமியம் ஸ்டோரி
News
பால்

- பால் தொழிலில் கிராமத்து குடும்பத்தின் விஸ்வரூப வெற்றி!

தஞ்சாவூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் திருமானூரை கடந்து செல்பவர்கள், காற்றில் கலந்து வரும் `ராஜா பால் பண்ணை’ பால்கோவாவின் வாசனையை மூக்கு வழியே உள்ளிழுத்து நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொள்வது வழக்கம். சொல்லப்போனால், திருமானூர் என்றாலே பால்கோவா நினை வுக்கு வரும் அளவுக்கு, மக்களை ஆட் கொண்டிருக்கிறது அதன் மணமும், சுவையும், மற்றும் அசுர வளர்ச்சியும். ஒற்றை நபரால் தொடங்கப்பட்ட பால் பண்ணையை இன்று 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் மிகப் பெரிய பால்கோவா பண்ணையாக்கியிருப் பவர், ராஜேந்திரன்.

“எல்லாத்துக்கும் காரணம் என் மனைவியும், நண்பரும்தாங்க…” என்றபடியே, பால்கோவா ஃபேக்டரிக்கு அருகிலிருந்த தன் வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார் ராஜேந்திரன். அங்கே அவர் மனைவி சாந்தி, மகன்களுடன், சிறிது நேரத்தில் வந்து இணைந்துகொண்டார் ராஜேந்திரனின் நண்பரான கி.ராஜேந்திரன் (நண்பரின் பெயரும் அதுவே).

“தரத்துல நாங்க நம்பர் 1... தைரியமா சவால் விடுவோம்!”

``திருச்சி மாவட்டம், லால்குடிக்கு பக்கத்துல இருக்குற மணக்கால்தான் எனக்குச் சொந்த ஊரு. கறவைக்காரரான எங்கப்பா, 1970-ம் வருஷம் பஞ்சம் பொழைக்கிறதுக்காக திரு மானூர் வந்தார். சுத்தி இருக்கிறவங்க வளர்க் குற மாட்டுல இருந்து ஒரு நாளைக்கு அஞ்சாறு லிட்டர் பால் கறந்து, அதை வீடுகளுக்கும் டீக் கடைக்கும் வித்துட்டு, மாட்டுக்காரங்களுக்கு போக மீதமுள்ள காசை வெச்சுத்தான் சாப் பிடணும். அதனால, எஸ்.எஸ்.எல்.சியோட படிப்பை முடிச்சிட்டு அப்பாவுக்குத் துணையா நானும் பால் கறக்க இறங்கிட்டேன். மூணாவது தலைமுறையா இப்போ என் பையன் ராஜ்குமார் தொழிலை கவனிச்சுக் கிறாரு.

இன்னிக்கி திருமானூரைச் சுத்தி இருக்கிற 24 கிராமங்களுக்கு நாங்களே நேர்ல போயி, கிட்டத்தட்ட 2,900 மாட்டுல இருந்து தினமும் 3,250 லிட்டர் பாலை கறந்து இங்கே கொண்டு வர்றோம். வரவு, செலவு கணக்கு முதல் மாசாமாசம் மாட்டுக்காரங்களுக்கு பால் காசு எடுத்து வைக்கிறது வரைக்கும் அத்தனை விஷயத்தையும் பார்த்துக்கிறது என் மனைவி தான்’’ என்றபோது பசும்பாலில் போட்ட டிகிரி காபியை பரிமாறியவாறு பேச ஆரம்பித் தார் சாந்தி.

``நாங்க இப்போ, பக்கத்துல இருக்கிற வல்லம், தஞ்சாவூர், பாபநாசம், கும்ப கோணம்னு பல ஊர்களுக்கும் பால் கொண்டு போயி டீக்கடைகள் முதல் பெரிய பெரிய ஸ்வீட் கடைகள் வரை சப்ளை செய்யுறோம். ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி பாக்கெட் பால் கலாசாரம் தொடங்கி, பால் வியாபாரம் கார்ப்பரேட் கைக்குள்ளே நுழைஞ்சப்போ, நாங்க கஷ்டப்பட்டப்போ எங்களுக்குக் கைக் கொடுத்த மாட்டுக்காரங்ககிட்டயும் கறவையை நிப்பாட்ட முடியாம, கறந்த பாலை முழுசா விக்கவும் முடியாம லட்சக்கணக்கில் நஷ்டமாகிப் போனோம். எங்களுக்கு எந்த பிரச்னையா இருந்தாலும் இந்த ராஜேந்திரன் அண்ணா கிட்டதான் (கணவரின் நண்பர்) ஐடியா கேப்போம். அப்போ அவர் காட்டின புதிய பாதைதான் எங்களை இந்த வெற்றி திசையில பயணிக்க வெச்சது’’ என்றவர், இப்போது சொல்லப்போவது ஒரு ‘நட்புக்காக’ அத்தியாயம்...

 கி.ராஜேந்திரன்
கி.ராஜேந்திரன்

``ராஜேந்திரன் அண்ணாகிட்ட, மீத மாகுற பாலையெல்லாம் கூலிங் பண்ண மெஷின் இருக்கானு கேட்டோம். அவரும் என் கணவரும் பல ஊர்களுக்கு போயி விசாரிச்சு, கூலிங் மெஷின் வாங்கிட்டு வந்தாங்க. அடுத்த கட்டமா, பாலில் இருந்து க்ரீம் எடுக்கிற மெஷின், மற்றும் பனீர், வெண்ணெய், கோவா, ஸ்வீட் பால்கோவா செய்யுற டெக்னிக்னு எங்க வீட்டுக்காரரை பல ஊர்களுக்கும் அழைச்சிட்டுப் போயி அதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க வெச்சி, அதுக்குத் தேவையான இயந்திரங்களை வாங்குறது வரை ஒவ்வொண்ணுக்கும் அண்ணாதான் சாமி மாதிரி துணையா நின்னாரு” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“எங்களை பொறுத்தவரை லாபத்தை விட தரமும் சுவையும்தான் ரொம்ப முக்கியம். அதனாலதான் பொதுமக்களும், கஸ்டமர்களும் சேர்ந்து எங்க தொழிலை இந்த ஒசரத்துக்குக் கொண்டு போயிருக்காங்க. அதேபோல பால், தயிர், வெண்ணெய், நெய், கோவா, ஸ்வீட் பால்கோவானு எல்லா பொருளையுமே தமிழ் நாட்டிலேயே குறைவான விலையில் விக்கிற தும் நாங்கதான். எங்க உணவுத் தயாரிப்புகளை பதப்படுத்த எந்த செயற்கை பொருள்களையும் பயன்படுத்துறதில்லை’’ என்ற ராஜேந்திரன், அதற்கு சொன்ன காரணம் சிறப்பு.

“தரத்துல நாங்க நம்பர் 1... தைரியமா சவால் விடுவோம்!”

``சுத்தமான பால் 4 மணி நேரத்துல கெட்டுப் போயிரும். கூலிங்ல இருந்தா 8 மணி நேரம் தாங்கும். அதுக்கு மேல கெட்டுப் போயிரும். தயிருக்கு 2 நாள், வெண்ணெய்க்கு 2 வாரம், சுத்தமான நெய் 2 மாசம் தாங்கும். அதனால, அதுக்கேத்த மாதிரி கொள்முதல், தயாரிப்பு, விற்பனை ஆகிய மூன்றையும் ஒரே நேர் கோட்டுல கொண்டு போறதால, பாலில் இருந்து பால்கோவா வரை பதப்படுத்துறதுக்காக நாங்க எந்த வித கெமிக்கலையும் சேர்க்கவே மாட்டோம். அதனால, தரத்துல எங்களை அடிச்சுக்க ஆளே இல்லையினு தைரியமா நாங்க சவால் விடுவோம். அதே போல, ஒவ்வொரு தடவையும் பொருளை தயாரிச்ச உடனேயே அதை நாங்க டேஸ்ட் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம்தான் விற்பனைக்கே அனுப்புவோம். டேஸ்ட்ல சின்ன மாற்றம் தெரிஞ்சாலும், பொருள் வெளியே போகாது. எங்ககிட்டே வேலை பாக்குறவங்களும் அர்ப் பணிப்புடனும் வேலைபார்ப்பாங்க. அதோட, குடும்பத்துல ஒருத்தர் மாதிரி எங்க வெற்றிக் காக உழைக்கிறவங்க அவங்க’’ என்று அவர் சொல்ல, தொடர்ந்தார் அவர் மகன் ராஜ்குமார்.

“தண்ணி கலக்காத தரமான 100 கிராம் எடையுள்ள பாலில் இருந்து வெண்ணெய் பிரிச்சு, நெய் காய்ச்சுனா 78 கிராம் கிடைக்கும். அது குறைஞ்சதுனா தரம் இல்லைனு அர்த்தம். அதனாலதான், டெல்டா மாவட்டங்களில இருக்கிற பாம்பே ஸ்வீட்ஸ், முராரி ஸ்வீட், வெங்கட் ரமணானு புகழ்பெற்ற ஸ்வீட் கடைக்காரங்க இந்த மூணு தலைமுறையா எங்களோட கஸ்டமரா இருக்காங்க. அவங் களுக்கு இனிப்பு சேர்க்காத கோவா சப்ளை பண்றோம். வீட்டுலயே டெய்லி 60 - 80 கிலோ பால் கோவா சேல்ஸ் ஆகிடும். இந்த துணிப் பையை தவிர இதுவரைக்கும் எந்த விளம்பர முமே நாங்க பண்ணினது கெடையாது” என்றவர் நம்மை பால்கோவா ஃபேக்டரிக்கு அழைத்துச் சென்றார். ஒரு பக்கம் சுடச்சுட பால்கோவா, அந்தப் பக்கம் கூலிங் ரூம், இந்தப் பக்கம் தயிரிலிருந்து வெண்ணெய் பிரிக்கும் இயந்திரம் என அந்த கிராமத்தில் இருந்த டெக்னாலஜி தொழிற்சாலையை நமக்கு சுற்றிக்காட்டிய ராஜ்குமார் எம்.பி.ஏ. முடித்தவர். அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.

 மனைவி சாந்தி, மகன் ராஜ்குமாருடன் ராஜேந்திரன்
மனைவி சாந்தி, மகன் ராஜ்குமாருடன் ராஜேந்திரன்

ராஜேந்திரனின் இந்த கனவுத் தொழிற் சாலைக்கு காரணியாய் இருந்த அவரின் நண்பர் ராஜேந்திரன், “40 வருசத்துக்கு முன் னாடி பால் சொசைட்டியில் நான் சூப்பர் வைசரா இருக்கும்போது கறவைக்கு வந்தவர் தான் ராஜேந்திரன். இவரோட தொழில் பக்திதான் எங்க நட்பு உருவாகக் காரணம். கொரோனா காலத்துல லட்சக்கணக்குல நஷ்டம் வந்தபோதுகூட, இவரை நம்பி இருந்த யாரையும் கைவிடல. இன்னிக்கும், மாடு வச்சிருக்கிறவங்க ஒவ்வொருத்தரு வீட்டுக்கா போயி நலம் விசாரிச்சு, நிறைகுறைகளைக் கேட்டுட்டு வருவாரு. ஒரு நியாயவானுக்கு நட்பா இருக்கிறதே பெரிய சுகந்தானேங்க..” என்றார் பெருமிதத்துடன்.

நிஜத்தில் ஒரு நிறைவான சூப்பர் ஹிட் குடும்பப் படம் பார்த்த அனுபவம்!