Published:Updated:

காலம் கடந்து கைகூடிய கனவு!

கரூர் மணி
பிரீமியம் ஸ்டோரி
கரூர் மணி

திருமணம், அஞ்சு பெண் பிள்ளைகள்னு அடுத்தடுத்து குடும்ப பாரம் கூடியதால, போல் வால்ட் கனவை அடிமனசுல புதைச்சுக்கிட்டேன்.

காலம் கடந்து கைகூடிய கனவு!

திருமணம், அஞ்சு பெண் பிள்ளைகள்னு அடுத்தடுத்து குடும்ப பாரம் கூடியதால, போல் வால்ட் கனவை அடிமனசுல புதைச்சுக்கிட்டேன்.

Published:Updated:
கரூர் மணி
பிரீமியம் ஸ்டோரி
கரூர் மணி

பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவில் போல் வால்ட் தாண்டுதலில் ரெக்கார்டு செய்தவர், குடும்ப வறுமையால் விவசாயியாக மாறிவிட்டார். குடும்பத்துக்காக 38 ஆண்டுக்காலம் உழைத்தவரை, அவரின் மகள்கள் இப்போது மறுபடியும் போல் வால்ட் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்கள். மூத்தோர் தடகளத்தில் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார், கரூர் மாவட்டம் பொய்கைப்புத்தூரைச் சேர்ந்த 59 வயது மணி.

அவரிடம் பேசினேன்.

``வசதி வாய்ப்பு இல்லாத குடும்பம். நான் ஆறாவது படிச்சிட்டு இருந்தப்ப, அங்க பத்தாவது படிச்ச விஸ்வநாதன்ங்கிறவர் போல் வால்ட் தாண்டுறத பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துச்சு. அவரே தன்னோட கம்பைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார். அப்போ ஸ்கூல்ல உடற்பயிற்சி ஆசிரியரா இருந்த வேலுச்சாமி எனக்குப் பயிற்சி கொடுத்தார். ஏழாவது படிக்கும்போது எட்டரை அடி உயரம் தாண்டி மாவட்ட அளவில முதலிடம் வந்தேன். பத்தாவது படிக்கும்போது சென்னை நேரு ஸ்டேடியத்துல மாநில அளவுல நடந்த போட்டியில் கலந்துகிட்டு, 10.7 அடி உயரம் தாண்டினேன். அந்த கேட்டகிரியில அதற்கு 20 வருடத்துக்கு முன்பு அதிகபட்சமா 10.3 அடி உயரம் வரை ஒருவர் தாண்டியிருந்த சாதனையை முறியடிச்சேன். இத்தனைக்கும் சாதாரண போல் வால்ட் கம்பை வச்சுதான் தாண்டினேன். ஃபைபர் கம்பு வாங்க வசதில்லை.

காலம் கடந்து கைகூடிய கனவு!

ஆனா வீட்டுல உள்ளவங்களுக்கு இந்த சாதனையெல்லாம் புரியலே. ‘இ்தெல்லாம் வேணாம்... படிப்பைப் பாரு’ன்னு சொல்லிட்டாங்க. என்னை ஊக்குவிக்க ஆளில்லை. ஐ.டி.ஐ படிச்சேன். மாநில அளவுல போல் வால்ட்ல சாதிச்சதால, விளையாட்டு கோட்டாவுல மாசம் 20,000 சம்பளத்துல மத்திய பாதுகாப்புப் பிரிவுல வேலை கிடைச்சுச்சு. ஐதராபாத்ல வேலை. பல பிரச்னைகளால ஒரே மாசத்துல அந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன்.

திருமணம், அஞ்சு பெண் பிள்ளைகள்னு அடுத்தடுத்து குடும்ப பாரம் கூடியதால, போல் வால்ட் கனவை அடிமனசுல புதைச்சுக்கிட்டேன். எங்களுக்கு இருந்த மூணு ஏக்கர் நிலத்துல வாழை, வெற்றிலை விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். நான் என் கனவை இழந்ததுபோல், என் பிள்ளைகளும் இழக்கக் கூடாதுன்னு அவங்க விரும்பியதைப் படிக்க வச்சேன். நிலத்தை வித்து, கடன்வாங்கி 20 லட்ச ரூபாய் வரை அதுக்காக செலவு செய்ய வேண்டியிருந்துச்சு. என் பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் தங்கமா படிச்சாங்க. பெரிய பொண்ணு பாரதி எம்.சி.ஏ. அதுக்கு அடுத்த பொண்ணு கீர்த்தனா சி.ஏ. மூணாவது பொண்ணு கிருபா பி.இ. நாலாவது பொண்ணு பபிதா பி.எஸ்.சி, பி.எட். அஞ்சாவது பொண்ணு அபினா பி.இ படிச்சாங்க. எல்லாருமே இப்ப நல்ல வேலையில் இருக்காங்க. இரண்டு பொண்ணுங்களுக்கு திருமணமும் முடிச்சுட்டேன்.

காலம் கடந்து கைகூடிய கனவு!

போல் வால்ட் ஆசை வரும்போதெல்லாம் வாழைக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்துற கம்பைத் தரையில் ஊன்றி, வாழைக்கொல்லைக்கு நடுவுல தாண்டி ஆசையைத் தீத்துக்குவேன்.

இப்படியே 38 வருஷம் ஓடுச்சு. வீட்டுல நான் வச்சிருக்கிற மெடல்களைப் பார்த்த பிள்ளைங்க, ‘எங்களுக்காக உங்க கனவை அழிச்சுக்கிட்டீங்களேப்பா'ன்னு வருத்தப்பட்டுக் கேட்பாங்க. இந்த நிலையில்தான் எங்க ஊரைச் சேர்ந்த சேகர், மூத்தோர் தடகளப் போட்டி பத்திச் சொன்னார். எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த கனவு முழிச்சுக்கிச்சு. இரவலா போல் வால்ட் தாண்டுற கம்பை வாங்கி, வாழைக்கொல்லை ஓரமா ரெண்டு நாள் தாண்டிப் பயிற்சி எடுத்துட்டு, அந்தப் போட்டியில கலந்து கிட்டேன். காஞ்சிபுரத்துல நடந்த அந்த மாநில அளவிலான போட்டியில இரண்டாம் இடம் வந்தேன்.

தேசிய அளவிலான போட்டிக்கு செலக்ட் ஆனாலும், அதுக்குப் போய் வர 15,000 ரூபாய் வரை செலவாகும்னு சொன்னாங்க. அந்தக் காசு இருந்தா ஒரு மகளுக்கு பீஸ் கட்டலாமேன்னு தவிர்த்துட்டேன். 2018-ல கரூர் டி.என்.பி.எல் ஆலை மைதானத்துல மாநில அளவிலான போட்டி நடத்தினாங்க. அவங்களே ஃபைபர் போல் வால்ட் கம்பைத் தந்ததால், அப்போ என்னால் மாநில அளவில் முதலிடம் வர முடிஞ்சது. 'தேசிய அளவில் கலந்துகிட்டா, உனக்குத்தான் முதலிடம்'னு சொன்னாங்க. ஆனா, கலந்துக்கலை. சமீபத்துல மதுரையில நடந்த மாநிலப் போட்டியில் கலந்துக்கப் போனேன். பயிற்சியின்போது கம்பு உடைஞ்சிருச்சு. கலந்துக்காம வந்துட்டேன்.

மணி
மணி
காலம் கடந்து கைகூடிய கனவு!

இதையெல்லாம் கேள்விப்பட்ட என் பொண்ணுங்க, ‘இனி நாங்க இருக்கோம். நாங்க செலவு பண்றோம். உலகத்துல எந்த மூலைக்கு வேணும்னாலும் போங்க'ன்னு சொல்றாங்க. ஆனா, `இன்னும் மூணு பிள்ளைங்களுக்குத் திருமணம் நடக்கணும்'ங்கிறதை நினைக்கையில, மனசு ஊசலாடுது. இருந்தாலும் பிள்ளைகள் கொடுக்குற தெம்புல நான் உலக அளவுல சாதிப்பேன்'' என்கிறார், கண்களில் வழியும் கனவோடு!

அவரின் மகள் பபிதா, “நிறைய திறமை இருந்தும், எங்களுக்காகக் கனவைத் தூக்கிப் போட்டுட்டு உழைச்சிருக்கார் அப்பா. நாங்க அவரை மூத்தோர் தடகளத்தில் உலக அளவில் சாதிக்க வைப்போம்'' என்றார் நெக்குருகிப்போய்!

ஐந்து மகள்களின் கரங்களையும் சேர்த்து உங்களுக்கு 12 கரங்கள் மணி.

வானம் வசப்படும்!