Published:Updated:

மூன்று பெண்களால் கிடைத்த வெற்றி இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்
ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்

மனதில் உறுதி வேண்டும்

பிரீமியம் ஸ்டோரி
ன் குடும்பத்துக்காகவும் சகோதரிகளின் நலனுக்காகவும் போராடிய ஓர் ஆண், தொழிலதிபராக உயர்ந்த கதை இது. இவரின் வெற்றிக்கு மூன்று பெண்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

அவர்களில் முதல் பெண்ணான நந்தினி, இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரம்தான். இந்த ஆச்சர்யத்துடன், அந்த ஆணின் வெற்றிக் கதையையும் தெரிந்துகொண்டால் நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.

அந்த ஆண், ரவிச்சந்தர். கைவசம் வேலை ஏதுமின்றி தவிப்பில் இருந்தவருக்குப் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளது ‘நந்தினி’ கதாபாத்திரம். எனவே, உணவகத் தொழில் தொடங்கியவர் அடுத்தடுத்து தொடங்கிய எல்லா உணவகத்துக்கும் அந்தப் பெயரையே வைத்திருக்கிறார். பெங்களூரில் முன்னணி ஆந்திர உணவகமான ‘நந்தனா பேலஸ்’ குழும உரிமையாளராகப் புகழ்பெற்றுள்ளார். குடும்பத்துக்காக ஆரம்ப காலங்களில் இவர் எதிர் கொண்ட சிரமங்கள் குறித்து விவரிக்கிறார் மனைவி சரளா ரவிச்சந்தர்.

“ராணிப்பேட்டை, சோளிங்கர் பக்கத்துல இருக்கும் போடப்பாறை கிராமம்தான் கணவரின் பூர்வீகம். ஏழ்மையான விவசாய குடும்பம். இவருக்கு இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை. அப்பா உடல்நலம் சரியில்லாதவர். சொல்லிக்கிற அளவுக்குப் பெற்றோருக்கு விவசாய வேலையில் வருமானம் இல்லை. அதனால கிராமத்து விவசாயிகள்கிட்ட நெய், நாட்டுக்கோழி முட்டையை வாங்கி, அதைச் சோளிங்கருக்கு நடந்தே போய் கடைகளில் விற்பனை செய்வார். இதன் மூலம் தன்னோட படிப்புச் செலவுகளைக் கவனிச்சுக்கிட்டு, குடும்பத்துக்கும் உதவியா இருந்திருக்கார்.

பத்தாம் வகுப்பு வரை சொந்த ஊரில் படிச்சவர், பெங்களூரில் மூத்த அக்காவின் வீட்டில் தங்கினார். அங்கு ப்ளஸ் டூ முடிக்கும்வரை சாயந்திரத்துல மைசூர் சாண்டல் சோப்பு கம்பெனியில வேலை செய்தார். பிறகு, பி.காம் படித்துக்கொண்டே பகுதி நேரமா தனியார் வங்கியில் வேலை பார்த்தார். அதன்பிறகு வங்கியில் முழுநேர வேலை கிடைச்சாலும், இவர் மனசு முழுக்கவே பிசினஸ் கனவுதான்.

ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்
ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்

அதை இவரின் தாய்மாமா கண்டு பிடிச்சு ஊக்கப்படுத்த, ஒரு ஹோட்டலில் கணக்காளரா வேலைக்குச் சேர்ந்தார். பல்வேறு உணவகங்கள் சூழ்ந்த பகுதியில் வேலை செய்தவர், தானும் உணவகம் ஆரம்பிக்க ஆசைப்பட்டார். சிறுகச் சிறுக பணம் சேர்த்தார். ஒரு கட்டத்துல என் கணவருடன் மூணு நண்பர்கள் சேர்ந்து ஓர் உணவகத்தை ஆரம்பிச்சாங்க. நண்பர்களின் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால, அந்த உணவகத்தை ஒரு வருஷத்துக்குள் மூடவேண்டிய நிலை.

கைவசம் எந்த வேலையும் சேமிப்பும் இல்லை. இரண்டாவது அக்காவின் கல்யாண வாழ்க்கையில பிரச்னை. தங்கைக்குக் கல்யாணம் செய்யணும், பெற்றோருக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யணும். அடுத்து என்ன செய்வதுன்னு தவிப்பில் இருந்தவர், ரிலாக்சேஷனுக்காக ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் பார்க்கப் போயிருக்கார். தியேட்டரிலிருந்து திரும்பி வரும்போது இவருக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கு” என்கிற சரளாதான், கணவரின் வெற்றிக்குக் காரணமான இரண்டாவது பெண்.

குடும்ப பாரங்களையும் பிரச்னைகளையும் தனியாளாக எதிர்த்துப் போராடும் அந்த நந்தினி கதாபாத்திரம், துவண்டுபோய் இருந்த ரவிச்சந்தருக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாள்கள் இடைவெளியில் மீண்டும் இரண்டு முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பாசிட்டிவ் எனர்ஜியுடன், ரவிச்சந்தருக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் வசமாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்பிக்கையுடன் பேசும் ரவிச்சந்தர், “அந்த 1987-ம் ஆண்டு, முதலீட்டாளர் ஒருவர் என்னைத் தேடிவந்தார். உணவகத் தொழில்ல எனக்கு அனுபவம் இருந்ததால, ‘உணவகம் தொடங்க ஆசைப்படறேன். எனக்குப் போதிய அனுபவம் இல்லை. நாம இணைஞ்சு பிசினஸ் பண்ணலாம்’னு சொன்னார். நந்தினி கேரக்டர் தாக்கத்தால், புதிய உணவகத்துக்கு ‘நந்தினி ஹோட்டல்’னு பெயர் வெச்சோம். ஆந்திர உணவு வகைகளுக்குப் பெரிய வரவேற்பு இருந்ததால, அடுத்தடுத்து தொடங்கிய எல்லா உணவகத்துலயும் ஆந்திர உணவு வகைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். பிசினஸ் வேகமா வளர்ந்துச்சு. அக்காவின் குடும்பப் பிரச்னைகளைச் சரிசெய்து மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினேன். தங்கைக்குக் கல்யாணம் செய்துவெச்சேன். சகோதரிகளுக்கு நான்தான் பெற்றோர் ஸ்தானத்துல இருந்தேன். எனக்கும் கல்யாணமானது.

2004-ம் வருஷம்வரை நல்லபடியா போயிட்டிருந்த பிசினஸ்ல திடீர்னு பிளவு ஏற்பட்டது. பெரிய சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டேன். எனக்கு மூணு உணவகங்கள், பார்ட்னருக்கு ஏழு உணவகங்கள்னு பிரிச்சுக்கிட்டு இருவரும் தனித்தனியே பிரிந்தோம். பொருளாதார ரீதியா சிரமம் ஏற்பட்டது.

‘இப்படி ஆகிடுச்சே’ன்னு கலங்கினேன். ‘கைவசம் எதுவுமே இல்லாம இருந்தப்போவே புதுசா தொழில் தொடங்கி மீண்டு வந்தீங்க. அதைவிட, இப்ப இருக்கிற நிலைக்கு உங்களால பல மடங்கு வளர்ச்சியை அடைய முடியும்’னு என் மனைவி ஊக்கம் கொடுத்தாங்க. என்னுடைய உணவகங்களை நல்லபடியா கவனிச்சுக்கிட்டேன். எங்க உணவகங்கள்ல குவாலிட்டி கன்ட்ரோலை என் மனைவி கவனிச்சுக்கிட்டாங்க. பிசினஸ் மறுபடியும் வேகமெடுக்க, `நந்தினி ஹோட்டல்' என்கிற பெயர்லயே புது உணவகத்தைத் தொடங்கினோம்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பிரச்னை. அப்போ அதே பெயர்ல இயங்கிய முன்னாள் பார்ட்னரின் உணவகங்கள் சரியா செயல்படலைனு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துச்சு. நந்தினிங்கிற பெயர்ல இருந்த உணவகங்கள்ல எது என்னுடையது, எது அவருடையதுன்னு மக்களுக்குக் குழப்பம் உண்டாச்சு. கண்டுக்காம இருந்திருந்தா என்னுடைய உணவகங்களுக்கும் மதிப்பு குறைஞ்சிருக்கும். எனவே, பிரச்னைக்கு உடனடியா தீர்வுகாண வேண்டிய கட்டாயம். என்ன பண்றதுன்னு குழப்பத்துல இருந்தேன்” என்கிறவருக்கு, மூத்த மகள் ஸ்வேதா பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்தான் அந்த மூன்றாவது பெண்.

`‘வேறு பெயர்ல நம்ம உணவகங்களை நடத்தலாம். குவாலிட்டியான உணவு கொடுத் தால் போதும். மக்கள் நம்மைத் தேடிவருவாங்க. கவலைப்பட வேண்டாம்பா’ன்னு பொண்ணு சொன்னா. அது மிகப்பெரிய ரிஸ்க்தான். ஆனாலும், துணிச்சலோடு ‘நந்தனா’னு எங்க உணவகங்களுக்குப் பெயர் மாத்தினோம். எங்க பொண்ணுங்க என் உயிருக்கும் மேலானவங்க. நந்தனாங்கிற பெயருக்கு மகள்கள்னு அர்த்தம். எங்க உணவகங்களுக்கு அந்தப் பெயரை வெச்சப்பிறகு, இப்போவரை வெற்றிதான். அதே பெயர்ல புதுசா நிறைய உணவகங்களைத் தொடங்கினோம்” - ரவிச்சந்தரின் முகம் பரவசத்தால் ஒளிர்கிறது.

இவருக்குச் சொந்தமான 15 ரெஸ்டா ரன்ட்டுகளும், இரண்டு மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆறும் பெங்களூரில் செயல்படுகின்றன. 1,200 ஊழியர்களுக்கு முதலாளியான ரவிச்சந்தர், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார். மூத்த மகள் ஸ்வேதா, பிரபல ‘அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ்’ நிறுவன குடும்பத்தின் மருமகள். இளைய மகள் ரம்யா, பிரபல ‘சங்கீதா மொபைல்ஸ்’ நிறுவன குடும்பத்தின் மருமகள். கடைசி மகள் ரவீணா பள்ளி மாணவி. மூத்த மகள்கள் இருவரும் அப்பாவின் தொழிலிலும் கவனம் செலுத்தி, ஊக்கம் கொடுக்கின்றனர்.

“எங்க உணவகங்களுக்குப் பெயர் மாத்தும்போது, ‘இது தவறான முடிவு. ரிஸ்க் எடுக்க வேண்டாம். பொண்ணுங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டு தொழிலில் இருந்து விலகிடுவது நல்லது’ன்னுதான் பலரும் சொன்னாங்க. நானும், எங்க மூணு பொண்ணுங்களும் இவருக்குப் பக்கபலமா இருந்தோம். கணவர் துணிச்சலுடன் இப்போ வரை தொழிலை நல்லபடியா நடத்தறார். பலருக்கும் கல்வி, மருத்துவத் தேவைகளுக்கு அமைதியான முறையில் உதவுவார். அவருக்கு உறுதுணையா இருந்தது மட்டும்தான் நாங்க. மத்தபடியே எல்லாமே அவருடைய உழைப்புதான்” என்று முடிக்கும் சரளாவின் கரங்களைப் பற்றிக்கொள்கிறார் ரவிச்சந்தர்.

சுஹாசினி என்ன சொன்னார்?

சுஹாசினி
சுஹாசினி

“ ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தைப் பார்த்ததில் இருந்து, அந்தப் படத்தின் நாயகி சுஹாசினியை நேரில் பார்த்துப் பேசணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு அமையவேயில்லை. எங்க உணவகங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக வருவாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்பு எங்க உணவகத்துக்கு யதேச்சையா சுஹாசினி மேடம் சாப்பிட வந்தாங்க. அவங்க சாப்பிட்டுட்டு இருக்கும்போது அவங்களை நானும் யதேச்சையா பார்த்தேன். எனக்கு இன்ப அதிர்ச்சி. அவர்கிட்ட என் தொழில் வளர்ச்சிக்குக் காரணமான, ‘நந்தினி’ கேரக்டர் பத்திச் சொன்னேன். ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. ‘இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டா, என்னைவிட கே.பாலசந்தர் சாரின் மகள் புஷ்பா கந்தசாமி ரொம்பவே சந்தோஷப்படுவாங்க’ன்னு சொன்னாங்க. எங்க உணவகத்தின் புதிய கிளையைச் சென்னையில் விரைவில் திறக்கப்போறோம். சுஹாசினி மற்றும் புஷ்பா மேடம் இருவரின் தலைமையில்தான் திறப்பு விழா நடக்கும்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவிச்சந்தர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு