நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

“இயற்கை அங்காடி... ஆரம்பத்தில் ரூ.500, இன்று ரூ.30,000..!” - நாகர்கோவிலில் சாதித்த கௌதமன்

கௌதமன்
பிரீமியம் ஸ்டோரி
News
கௌதமன்

நாகர்கோவில், மன்னார்குடியில் இயற்கை பொருள்களை விற்பதுடன் உணவகத்தையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளனர் இருவர்!

நாகர்கோவிலில் செட்டிக்குளத்திலிருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் சற்று உள்புறமாக அமைந்துள்ளது ‘வரப்பிரசாதம் இயற்கை அங்காடி.’ கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பாரம்பர்ய உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டி மாதம் ரூ.15 லட்சம் வரை பிசினஸ் செய்கிறார் கௌதமன். அடுத்தகட்டமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் கௌதமனை அவரது அங்காடியில் சந்தித்தோம்.

“1984-லிருந்து அரிசி ஆலை தொழில் செய்து வந்தோம். அப்ப காளை வண்டியில (மாட்டு வண்டி) நெல்லு வரும். நாஞ்சில் நாட்டுல ஒரு போகத்துல கட்டிச்சம்பா, செந்தி வகை நெல்களைப் போடுவாங்க. இன்னொரு போகம் தட்டார வெள்ள, கொச்சி சம்பா, கொல்லம் சம்பா, சாராடி, வீரடங்கன், கொட்டார சம்பான்னு நெல்லு போடுவாங்க. அப்ப எல்லாம் மில்லுல அரிசியோட சத்துகள் சிதைக்கப்படாம தெளிவா போய்க் கிட்டிருந்தது.

“இயற்கை அங்காடி... ஆரம்பத்தில் ரூ.500, இன்று ரூ.30,000..!” - நாகர்கோவிலில் சாதித்த கௌதமன்

2000 வருஷத்தின் தொடக்கத்தில அரிசி ஆலைகள் நவீனமாச்சு. அரிசியை பாலீஸ் செஞ்சு கடைசியா வரும் சக்கையைச் சாப்பிட்டு நம்ம ஆரோக்கியத்த இழந்திட்டோம். இந்தப் போக்கு சரியில்லன்னு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு. 2007 வாக்குல நெல் விதை களைச் சேகரிக்கிற பொன்னம்பலம் ஐயாவைச் சந்திச்சேன். அதுலயிருந்து நானும் இயற்கை வழியில பயணப்பட்டேன்.

2012 தொடக்கத்துல என்னோட ரைஸ் மில்லுக்குப் பக்கத்துலயே சிறுதானிய ஹோட்டல் ஒண்ணு தொடங்கினேன். நம்மாழ்வார் ஐயாதான் அதைத் திறந்து வச்சார். அங்க வந்து சாப்பிட்டவங்க எல்லாருமே இது நாகர்கோவிலுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம்னு சொன்னாங்க. அதனால கடைக்கு வரப்பிர சாதம்னு பேர் வச்சேன்.

இயற்கை விவசாயத்தில விளைஞ்ச நெல் மற்றும் தானியங்களைக் கொள்முதல் பண்ணுறதுக்கு நம்மாழ்வார் ஐயா குழுக்கள் மூலமா நெல் வாங்குறோம். மேலும், கிரியேட், குடும்பம் போன்ற என்.ஜி.ஓ-க்கள் மூலமாவும், நெல் ஜெயராமன் அமைப்பு மூலமாகவும் பதிவுபெற்ற இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்து அரிசி ஆக்கி விற்பனை செய்கிறோம்.

விலை அதிகமில்லை..!

தவிடு நீக்காத பிரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசியை மக்கள் விரும்பி வாங்குறாங்க. மத்த கடையில சாதாரண அரிசி ஒரு கிலோ ரூ.50-க்கு விக்கிறாங்க. எங்ககிட்ட உள்ள அரிசி ரூ.60. தரத்துக்கேற்ப ரூ.90 வரைக்கும் அரிசி விக்கிறோம். மக்களும் இதனோட பலன் தெரிஞ்சு வாங்கிட்டுப் போறாங்க.

கௌதமன்
கௌதமன்

இயற்கையில் விளைஞ்ச கறுப்பு கவுனி நெல் ஒரு கிலோவுக்கு ரூ.40 கொடுத்து விவசாயிங்ககிட்ட இருந்து வாங்குறோம். மாப்பிள்ளை சம்பா நெல் ரூ.28-க்கும், பூங்கார் சம்பா நெல் ரூ.28-க்கும் வாங்குறோம். ரசாயன உரம் போட்டு வளர்த்த நெல்லுக்கு நாங்க எப்பவும் ஆதரவு கொடுக்கிறதில்லை. எங்க நோக்கத்ததைத் தெரிஞ்சுக்கிட்ட மன்னா ஹெல்த் மிக்ஸ் கம்பெனி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்ககிட்ட அரிசி வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப மாசம்தோறும் 40 டன் கைகுத்தல் பொன்னி அரிசி அவங்களுக்கு சப்ளை பண்ணிட்டு இருக்கோம்.

சிறுதானியங்கள்..!

சிறுதானியங்களை தேனி, பரமக்குடி ஆகிய இடங்களிலிருந்து வாங்கி அதை மதிப்பு கூட்டுறோம். உதாரணமா வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் இந்த மாதிரி சிறுதானியங்களை மாவாக்கித் தர்றோம். உளுந்து, வெந்தயம் சேர்த்து தோசை மாவையும் அறிமுகப்படுத்திவருகிறோம். தண்ணீல கலக்கி எப்பவும் பயன்படுத்துறது மாதிரி தோசை மாவு பாக்கெட் இருக்கிறதுனால பொதுமக்கள்கிட்ட நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கு. சிறுதானியங்கள்ல முறுக்கு, முந்திரிகொத்துன்னு என்னெல்லாம் பலகாரங்கள் செய்ய முடியுமோ, அவற்றையல்லாம் செய்றோம்.

எங்க அங்காடியிலேயே மதியம் சிறுதானிய கஞ்சி, பாரம்பர்ய கஞ்சி கிடைக்கும்.

இதைப் பாத்து கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டுல சில இடங்கள்ல எங்க கிளைகளைத் தொடங்கக் கேட்கிறாங்க” என்றவர், இந்த பிசினஸை லாபகரமாகச் செய்வதன் ரகசியத்தையும் சொன்னார்.

“நாங்க 100% தவிடு உள்ள அரிசியாத்தான் மில்லுல அரைப்போம். சில பேருக்கு முழுசா தவிடுள்ள அரிசி சாப்பிடுறதுல இடர்பாடுகள் இருக்கும். அதனால 10% பாலீஸ் பண்ணுவோம். அது கைக்குத்தல் அரிசி மாதிரியே இருக்கும். கட்டிச்சம்பா, கல்லம்சம்பா, கொச்சி சம்பா, வீரடங்கன், அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா, பூம்புகார், மடு முழுங்கி, காட்டு யானம், கருங்குறுவை, தூயமல்லி, கிச்சடி சம்பா என 12 வகையான அரிசிகளை விக்கிறோம்.

அரிசியிலயிருந்து புட்டுமாவு, இடியாப்பமாவு, டயாபட்டிக் கஞ்சி ரெடி பண்றோம். எங்க புதிய முயற்சிக்கு தகுந்தாப்ல நல்ல வியாபாரம் நடக்குது. கன்னியாகுமரி மாவட்டத்துல வேற சில ஊர்கள்ல எங்க பிராஞ்ச் தொடங்க அனுமதி கேட்டிருக்காங்க. ஈரோடு பகுதியிலயும் ஒருவர் கிளை தொடங்க கேட்டிருக்கிறார்.

ஆரம்பத்துல என்னைத் தவிர, இரண்டு பேர்தான் இங்க வேலை செய்தாங்க. தினமும் 500 ரூபாய்க்கு பொருள்கள் விற்பனை ஆச்சுது. படிப்படியா விற்பனை ரூ.2,000, ரூ.3,000-னு அதிகரிச்சுது. இப்ப இங்க 8 பேர் வேலை செய்யுறாங்க. தினமும் சராசரியா ரூ.25,000 -லிருந்து ரூ.30,000 வரைக்கும் விற்பனை ஆகுது. மற்ற இயற்கை அங்காடிகள்ல பொருள்கள் விற்பனை மட்டும் செய்வாங்க. நாங்க மக்களின் தேவைக்கு ஏற்ப உணவுப் பொருள்களைத் தயாரிச்சுக் கொடுக்கிறதால ஜெயிக்க முடிஞ்சது.

‘‘உலகத்துல எந்த நாட்டுல இருந்து யார் ஒரு கிலோ சம்பா அரிசி கேட்டாலும் நம்ம கடையில இருந்து கொரியர் மூலமா சேர்க்கணும்ங்கிறது எங்க நோக்கம். அதுக்குண்டான வேலைகள் எல்லாம் நடந்திட்டிருக்கு!”

இப்ப எங்க அங்காடியில் மாதம் 6 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்பனை நடக்குது. இதுபோக வெளிய மொத்த வியாபாரத்துல ரூ.10 லட்சத்துக்கு பிசினஸ் நடக்குது. வருசத்துக்கு ரூ.1.80 கோடிக்கு வியாபாரம் பண்றோம். இதுல எல்லா செலவும் போக 10% லாபமா நிக்கும்.

முன்னாடி ஒரு நாளைக்கு 100 மூட்டை, 200 மூட்டை வித்தாலும் மனசு கவலைப் பட்டுக்கிட்டே இருக்கும். இன்னைக்கி ஆரோக்கியமான அரிசியை ரெண்டு மூட்டை, மூணு மூட்டை வித்தாலும் சந்தோஷமா இருக்கோம். ஒரு மாசத்துல 15 டன் அரிசியை பல வகையான உணவுகளாக மாத்தி விற்பனை பண்ணுறோம். வெளி நிறுவனம் மூலமா மாசம் மூணு நாலு லட்சம் ரூபாய்க்கு மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசிகள் ஏற்றுமதி செய்றோம்.

சம்பாவுல ஒத்த அவிப்பு சம்பா கைக்குத்தல் அரிசி பரவலா போகுது. நாங்களே நேரடியா ஏற்றுமதி பண்ணுறதுக்கு எக்ஸ்போர்ட் லைசென்ஸும் வாங்கியிருக்கோம். இனி உலகத்துல எந்த நாட்டுலயிருந்து யார் ஒரு கிலோ சம்பா அரிசி கேட்டாலும் நம்ம கடையில இருந்து கொரியர் மூலமா சேர்க்கணும்ங்கிறது எங்க நோக்கம். அதுக்குண்டான வேலைகள் எல்லாம் நடந்திட்டிருக்கு” என்றார்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படும் கெளதமனைப் போல, மற்றவர்களும் செயல்பட்டு நல்ல லாபம் சம்பாதிக்கலாமே!

“70,000 வருமானம், 10 பேருக்கு வேலை...’’ அசத்தும் மன்னார்குடி இளைஞர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி அருண் ரவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் தொடங்கிய இயற்கை அங்காடியோடு இணைந்த சிற்றுண்டிக் கடை தற்போது மன்னார்குடியில் புகழ்பெற்ற பாரம்பர்ய உணவகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மன்னை உழவன் சிறுதானிய உணவகம் & இயற்கை அங்காடியில் காலை தொடங்கி இரவு வரை எல்லா நேரங்களிலும் மக்கள் தேடிவந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள். அருண் ரவியுடன் பேசினோம்.

“இயற்கை அங்காடி... ஆரம்பத்தில் ரூ.500, இன்று ரூ.30,000..!” - நாகர்கோவிலில் சாதித்த கௌதமன்

‘‘எங்க அப்பா மன்னார்குடியில 75 வருஷமா மளிகைக் கடை நடத்திக்கிட்டு இருக்கார். சொந்தமா விவசாய நிலங்கள் எல்லாம் இருக்கு. ஆனா, நான் எம்.பி.ஏ படிச்சிட்டு, பெரிய பிசினஸ்மேனா ஆகி கைநிறைய சம்பாதிக்கணுங்கறதுதான் என்னோட கனவா இருந்துச்சு. எம்.பி.ஏ முடிச்சதும் சென்னையில ஒரு ஷேர் புரோக்கிங் நிறுவனத்துல டீம் லீடரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பதான் விவசாயமும் இப்ப வளர்ந்து வரக்கூடிய தொழிலாக இருக்குங்கிறதைத் தெரிஞ்சு கிட்டேன். யாரிடமும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை. நாம வேலை பார்த்துக்கிட்டு இருக்கக்கூடிய நிறுவனத்துல எவ்வளவுதான் உழைச்சாலும் பெரிசா சம்பாதிக்க முடியாது. வொர்க் டென்ஷனும் அதிகம். இந்த உண்மைகளைப் புரிஞ்சிகிட்டவுடனே சொந்த ஊருக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன்.

இதுக்கு இடையிலதான் விவசாயம் சார்ந்த ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதுல சாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது பொதுமக்களோட உடல்நலன் சார்ந்த தொழிலாகவும் இருக்கணும்னு நினைச்சி ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்தேன். சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி, கருப்பட்டி, செக்கு எண்ணெய் இவை யெல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லதுங்கிற விழிப்புணர்வு இப்ப மக்கள்கிட்ட அதிகரிச்சிக்கிட்டு இருந்தாலும்கூட, பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள்லதான் இவையெல்லாம் நல்லா விற்பனை ஆகுது. தஞ்சாவூர், மன்னார்குடி மாதிரியான ஊர்கள்ல ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான ஆர்கானிக் ஷாப்கள் சக்சஸா போகலை.

‘ஆர்கானிக் ஷாப் வேண்டாம் மாப்பிள்ள... நஷ்டம் வந்துடும்’னு என்னோட நண்பர்கள் என்னை எச்சரிக்கை செஞ்சாங்க. ஆனா, நான் இதுல உறுதியா இருந்தேன். ஏன் இது தோல்வி அடையுதுங்கற காரணத்தைத் தேட ஆரம்பிச்சேன். ஆர்கானிக் ஷாப் நடத்தி மூடினவங்களை சந்திச்சி, அவங்களோட அனுபவங்களைக் கேட்டு நான் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்தேன்.

இதுமாதிரியான உணவுப் பொருள்கள் விலை அதிகம்ங்கிற எண்ணம் மக்கள் மனசுல பதிஞ்சிக் கிடக்கு. குறிப்பா, ஏழை, நடுத்தர மக்கள், இயற்கை அங்காடிகளைப் பார்த்தாலே மிரண்டு ஓடுறாங்கனு தெரிஞ்சுது. இதுல சமைக்குறது சுவையா இருக்குமாங்குற தயக்கம்; இதை எப்படி சமைக்குறதுங்கற சந்தேகம் எல்லாம் சேர்ந்து கிடந்தது. இவற்றையெல்லாம் மனசுல வச்சு கடையோடு இணைந்த சிற்றுண்டி கடையைத் தொடங்கினேன்.

ஒவ்வொரு தொழிலுக்கும் அதுக்கேத்த பிரத்யேகமான சூழல் இருக்கணும். ஆனா, பெரும்பாலும் இயற்கை அங்காடிகளை சாதாரண மக்களுக்கு அந்நியப்பட்ட தோற்றத்துல நவீனமயபப்படுத்தி சொகுசு பண்ணி வச்சிருப்பாங்க. அங்க என்ன விக்கிறாங்கன்னு மக்களுக்கு சந்தேகமா இருக்கும். அப்படியே தெரிஞ்சாலும் அங்க போகத் தயங்குவாங்க. ஆனா, நான் இதுல கவனமா இருந்தேன். சாதாரண மக்களுக்கும் பரிச்சயமான, உழவன் இயற்கை அங்காடிங்கற பேர்ல போர்டு வச்சு, கீற்றுக்கொட்டகையில ஆற்று மணலை பரப்பி, இரண்டே அலமாரி, ஒரே ஒரு ஸ்டாண்டிங் ரவுண்ட் டேபிள், ஒரு அடுப்பு, ஹீட்டரோடு இந்தக் கடையைத் தொடங்கினேன். பழைமையான கிராமச் சூழல்களை ஓவியங்களா சுவர்கள்ல வரைஞ்சோம். ஏர்கலப்பை, திண்ணை, மண்பானைனு சாமான்ய மக்கள் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் வந்துட்டுபோற மாதிரியான சூழலை உருவாக்கினேன். குறைவான லாபம் கிடைச்சாலும் பரவாயில்லைனு, ஸ்டோர்ல உள்ள பொருள்களோட விலையை முடிஞ்ச அளவுக்குக் குறைச்சேன். சமைத்த சிற்றுண்டி உணவா, நவதானிய சுண்டல், சிறுதானிய கஞ்சி, வரகரிசி கீரை வடை, மூலிகை தேநீர் விற்பனை செய்யத் தொடங்கினோம். இதையும் குறைவான விலையிலதான் விற்பனை செஞ்சோம்.

கடை தொடங்கி நாலஞ்சு மாசம் லாபமே கிடைக்கலை. அதுக்குப் பிறகு, மக்கள் கூட்டம் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது. பாரம்பர்ய உணவுப் பொருள்கள்ல காலை டிபன், இரவு உணவுனு விதவிதமா அதிகப்படுத்தி 40 விதமா உணவுகளைத் தர்றோம். மதியச் சாப்பாடும் உண்டு. குறைஞ்ச முதலீட்டுல தொடங்கின கடை, இன்னைக்கு 10 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய நிறுவனமா வளர்ந்துருக்கு. மாசம் ரூ.70,000-க்கு மேல லாபம் கிடைக்குது. அடுத்தகட்ட முயற்சியாக, சென்னையில எங்களோட மன்னை உழவன் சிறுதானிய உணவகம் மற்றும் அங்காடியோட கிளையைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கேன். அடுத்த சில ஆண்டுகள்ல தமிழ்நாட்டுல பல கிளைகளைத் தொடங்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. என் ஆசை நிச்சயம் நிறைவேறும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

- கு.ராமகிருஷ்ணன்

படம்: ம.அரவிந்த்