Published:Updated:

முத்தமிழ்க் கலை... அரையர் சேவை!

சுதா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
சுதா லட்சுமி

பரதத்தைத் தன் மூச்சாகப் பயில்வதோடு ஶ்ரீகிருஷ்ண சிலம்பம் என்னும் பெயரில் மயிலாப்பூரில் ஒரு நடனப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

அது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம். ஒரு சபாவில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

நாட்டியமாடிய பெண்மணி குசேலராகவும் கிருஷ்ணராகவும் மாறிமாறி நடனமாடிக் கொண்டிருந்தார். அன்பும், நட்பும், கருணையும் நிறைந்த அந்தக் காட்சியைக் கண்டு அந்த அவை சிலிர்த்துப்போனது!

நிகழ்ச்சி முடிந்ததும் நடனக் கலைஞரை ஒரு வெளி நாட்டுப் பெண்மணி வந்து சந்தித்தார்.

நடனமணியின் கைகளைப் பற்றிக்கொண்ட வெளி நாட்டுப் பெண் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

முத்தமிழ்க் கலை... அரையர் சேவை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“கிருஷ்ணருக்கும் குசேலருக்குமான நட்பை நீங்கள் நிகழ்த்திக் காட்டியபோது, அவர்களுக்கு இடையேயான அன்பை உள்ளூர உணர முடிந்தது. பேரன்பைக் கலையாக தரிசித்த தினம் இன்று” என்று கண்ணீரோடு கூறினார்.

கலையால் அந்த அற்புத்தை நிகழ்த்திய பெண்மணி சுதா லட்சுமி. பழம்பெரும் இசைக்கலைஞர் பத்மபூஷண் மதுரை என்.கிருஷ்ணன் அவர்களின் பேத்தி. நடனமாமணி, யுவகலாபாரதி ஆகிய விருது களுக்குச் சொந்தக்காரர்.

பரதத்தைத் தன் மூச்சாகப் பயில்வதோடு ஶ்ரீகிருஷ்ண சிலம்பம் என்னும் பெயரில் மயிலாப்பூரில் ஒரு நடனப்பள்ளியும் நடத்தி வருகிறார். 2017-ம் ஆண்டு ஶ்ரீராமாநுஜரின் 1000-வது ஆண்டு ஜயந்தி விழாவை ஒட்டி, திருவரங்கத்தமுதனார் எழுதிய ஶ்ரீராமாநுஜ நூற்றந்தாதியின் சில பாசுரங்களை மெட்டமைத்து அதற்கு நடனமும் செய்தார்.

தமிழகத்தின் பாரம்பர்யக் கலைகளில் ஆய்வு செய்ய விரும்பிய சுதாலட்சுமியின் கருத்தைக் கவர்ந்தது, அரையர் சேவை. பெருமாளுக் குக் கைங்கர்யமாகச் சமர்ப்பிக்கப்படும் இந்தக் கலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாசார மையத்தில் விண்ணப் பித்தார். ஆய்வுக்குரிய களமாக அதை கலாசார மையம் அங்கீகரிக்க, தற்போது அந்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். அரையர் சேவை குறித்த அவரின் ஆய்வுகுறித்து அவரிடம் கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“பெருமாளுக்கு அத்யயன உற்சவ காலங்களில் நிகழ்த்தபடுவது அரையர் சேவை. திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது.

மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் ஆகிய தன் இரண்டு மருமகன்களுக்கும், நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் நாதமுனிகள் கற்பித்ததாகவும், அவர்களின் வழி வந்தவர்களும் அவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள்.

முத்தமிழ்க் கலை... அரையர் சேவை!

முதன் முதலில் இச்சேவை திருவரங்கத்தில் தொடங்கப் பட்டது. பின்பு ஶ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி, மேல்கோட்டை ஆகிய தலங்களிலும் அரையர் சேவை நடைபெற்று வருகிறது.

அபிநயத்துடனும் தாள ஒலிகளுடனும் திவ்ய பிரபந்தங் களைப் பாடி ஆடுவதே அரையர் சேவை.

அரையர் என்பவர், கோயில் மூலவருக் கான பலவித சேவைகளில் தினசரி ஈடுபட்டாலும் பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயன உற்சவங்களில் இறைவன் முன்பாக அரையர் சேவை நிகழ்த்துவதைக் கட்டாயமாக்கியுள் ளனர்.

இந்த அதிஅற்புத சேவையில் ஈடுபடும் அரையர்கள், பஞ்சகச்சம் அணிந்திருப்பர். மேலும் ‘அரையர் குல்லாய்’ அல்லது ‘சிகாமணி’ எனப்படும் தலைப்பாகை, இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலை ஆகியவற்றுடன் வைணவச் சின்னங்களையும் அணிந்திருப்பர். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். சங்கு, சக்கரம், நாமம் ஆகிய சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.

முத்தமிழ்க் கலை... அரையர் சேவை!

கைகளில் குழித்தளம் எனப்படும் தாளத்தை இசைத்தபடி பாடுவார்கள். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். அதற்குக் கர்ணபத்ரம் என்று பெயர். சேவை தொடங்குவதற்கு முன்பாக பெருமாளுக்குச் சூட்டிய மாலை, சுருளமுது ஆகியவற்றை வழங்கி பரிவட்டம் கட்டி அரையர்களுக்கு மரியாதை செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உற்சவருக்கு முன்பாக நிகழ்த்தப்படும் இந்த சேவை, மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒன்று, பிரபந்தத்தைப் பாடுவது. இரண்டா வது பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது, மூன்றாவது பிரபந்தத்தின் உட்பொருளை விளக்கிக் கூறுவது. கட்டுவிச்சியை அழைத்துக் குறிகேட்பது போன்ற நாடக அம்சங்களும் இவற்றில் இருக்கும். ஒருவகையில் அரையர் சேவையை முத்தமிழ்க் கலை என்றே சொல்லலாம்.

முத்தமிழ்க் கலை... அரையர் சேவை!

அவர்கள் பாடும்போது அவர்களின் கவனம் பெருமாள் மேலேயே இருக்கும். பாடும்முறையும் வழக்கமாக நாம் கச்சேரிகளில் கேட்கும் இசைமுறை அல்ல. அது பெருமாளுக்காக மட்டுமே பாடும் முறை. அதனால்தான் அதைக் காணும்போது நமக்குள் தெய்விக உணர்வு ஏற்படுகிறது. சுற்றியிருக்கும் மனிதர்களை மறந்து அவர்கள் இசைக்கும் தேவகானம் காண்போரையும் மெய்ம்மறக்கச் செய்யும்!

நான் ஶ்ரீவில்லிபுத்தூரில் இந்த அரையர் சேவையைக் கண்டேன். அப்போது அங்கு பக்தர்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி சுமார் நாலரை மணி நேரம் நடந்தது. நாலரை மணி நேரம் தொடர்ந்து நடனமும் பாட்டும் விளக்கமுமாக ஒரு நிகழ்ச்சியை நடத்த எவ்வளவு ஸ்டாமினா தேவை என்பதை ஒரு நடனக் கலைஞராக என்னால் அறியமுடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக சுற்றியிருந்தவர்கள் அந்தக் கலையில் காட்டிய ஈடுபாடு, வியக்க வைத்தது. மக்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுப் பழைமை ஆன அந்தக் கலையில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு ஆர்வத்துடன் கவனித்தனர். ஒருகட்டத்தில் நாம் ஆழ்வார்கள் காலகட்டத்துக்கே சென்றுவிட்டோமோ என்ற உணர்வு நிலைகூட ஏற்பட்டது.

அதை அமைதியாக அமர்ந்து அனுபவிப்பதுதான் அந்தக் கலைஞர்களுக்கு நாம் தரும் மரியாதை என்று தோன்றுகிறது. சாதாரணமாக இதைக் கலை என்று அவர்கள் சொல்வதில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் இது கடவுளுக்குச் செய்யும் சேவை. பல ஆண்டு பயிற்சிக்குப் பின்னரே அவர்கள் சேவை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அருங்கலையை நாதமுனிகள் தொடங் கியதாகச் சொல்கிறோம் அல்லவா அதன் பின்னால் ஒரு நிகழ்ச்சி உண்டு.

காட்டுமன்னார்கோவிலில் நாதமுனிகள் இருந்தபோது (கும்பகோணம் சார்ங்கபாணி சந்நிதியில் என்றும் கூறுவர்) அடியவர்கள் இருவர், ‘ஆராவமுதே அடியேன் அருளாமே...’ என்று தொடங்கும் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட நாதமுனிகள், மற்ற பாசுரங்களையும் தனக்குக் கூறியருளுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

ஆனால் அவர்களோ, தங்களுக்குப் பத்து பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்றும் ஒருவேளை திருக்குருகூர் சென்றால் மேலும் பாசுரங்கள் கிடைக்கலாம் என்று சொல்லினர்.

நாதமுனிகளும் திருக்குருகூர் சென்று பராங்குசதாசரின் வழிகாட்டலுடன், நம்மாழ் வாரின் அனுக்கிரஹத்தால் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் கிடைக்கப்பெற்றார்.

இவ்வாறு பெரும் முயற்சிக்குப்பின் கிடைத்த அந்தப் பொக்கிஷத்தைக் காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யும் ஒரு முயற்சியாகவே, நாதமுனிகள் இந்தக் கலைவடிவை உருவாக்கி அதைக் கோயில் ஆராதனைகளோடு இணைத் திருக்கலாம் என்பது என் கருத்து.

போன ஆண்டு ஶ்ரீவில்லிபுத்தூர் சென்று அரையர் சேவையைக் கண்டு, அதை நிகழ்த்தும் பெருமக்களோடு பேசி அந்தக் கலை குறித்து மேலும் அறிந்துகொண்டேன். இந்த ஆண்டு ஶ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் தாத்தா, நாலாயிரம் திவ்யபிரபந்தங்களுக்கு இசையமைத்துப் பாடியவர். அதனால்தானோ என்னவோ எனக்கு இயல்பாகவே இந்த ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் எல்லா முயற்சிகளுக்கும் என் குடும்பம் துணை நிற்கிறது. அதேபோன்று இறையருளும் கூடவே இருக்கிறது. அந்தப் பெருமாள் அருளால் ஆய்வினை நல்ல முறையில் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்” என்று சொல்லி வணங்கினார் சுதா லட்சுமி.

இறையருள் என்றென்றும் துணைநிற்க நாமும் பிரார்த்தித்துக்கொண்டோம். அரையர் சேவை, இறை வழிபாட்டோடு சேர்ந்து ஆழ்வார்களின் பாசுர அமுதத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அற்புதச் சேவை. பிரதிபலன் பாராமல் அந்தச் சேவையில் ஈடுபடும் அரையர்களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டவர்கள்.