Published:Updated:

நிர்வாண போட்டோ... பகிரங்க மிரட்டல்... கடன் செயலிகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்!

கைது செய்யப்பட்ட வடமாநில கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
கைது செய்யப்பட்ட வடமாநில கும்பல்

தற்கொலை செய்துகொண்டவர்களில் பலர், ஆடம்பரத்துக்காகக் கடன் வாங்கியவர்கள் இல்லை. அவசரத்துக்கு வாங்கியவர்கள்தான்.

நிர்வாண போட்டோ... பகிரங்க மிரட்டல்... கடன் செயலிகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்!

தற்கொலை செய்துகொண்டவர்களில் பலர், ஆடம்பரத்துக்காகக் கடன் வாங்கியவர்கள் இல்லை. அவசரத்துக்கு வாங்கியவர்கள்தான்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட வடமாநில கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
கைது செய்யப்பட்ட வடமாநில கும்பல்

“ஒரு பேப்பரும் தர வேண்டாம்... நேரிலும் வர வேண்டாம்... ஒரு நிமிடத்தில் கடன்” என்ற கவர்ச்சி விளம்பரத்தில் விழுந்து உயிரை இழந்துகொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். வட இந்தியாவைக் கலக்கிய ‘கடன் செயலி’கள் இப்போது தமிழ்நாட்டிலும் வேட்டையைத் தொடங்கியிருக்கின்றன. தலைநகர் சென்னையிலேயே பாண்டியன் என்ற இளைஞர் வெறும் 5,000 ரூபாய் கடனுக்காகத் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்வாண போட்டோ... பகிரங்க மிரட்டல்... கடன் செயலிகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்!

தற்கொலையும் தனிப்படையும்!

‘எந்த ஆவணமும் தர வேண்டாம்... உடனடிக் கடன்’ என்று சொல்லும் நிறுவனங்கள், உண்மையில் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை ஹேக் செய்து, அதிலுள்ள எண்கள், புகைப்படங்கள் போன்ற தரவுகளைத் திருடுகின்றன. `கடன் வாங்கியதை நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் சொல்லிவிடுவோம்’, `உறவினர்களுக்குத் தெரியப்படுத்திவிடுவோம்’ என்று மிரட்ட ஆரம்பித்து, திருடப்பட்ட படங்களை நிர்வாண மாக இருப்பதுபோல் மார்பிங் செய்து அனுப்புவது வரையில் தொல்லை கொடுக்கிறார்கள். இவ்வாறு கடன் செயலியால் அவமானப்படுத்தப்படுவோர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன.

அதனால்தான் சென்னையில் கடன் செயலி களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, சைபர் க்ரைம் பிரிவின் துணை கமிஷனர் கிரண் ஸ்ருதி, கூடுதல் துணை கமிஷனர் சாஜிதா ஆகியோர் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

இந்த டீம், கடன் செயலி மோசடிக் கும்பல் குறித்த தகவல்களைச் சேகரித்தது. அதனடிப் படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலெக்‌ஷன் ஏஜென்ட் தீபக்குமார் பாண்டே, ஹரியானாவைச் சேர்ந்த இன்னொரு கலெக்‌ஷன் ஏஜென்ட் ஜித்தேந்தர் தன்வர், அவரின் சகோதரியான டீம் லீடர் நிஷா, டீம் மேனேஜர் டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா என நான்கு பேரைக் கைதுசெய்தது. அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள், ஏழு லேப்டாப்கள், 19 சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நிர்வாண போட்டோ... பகிரங்க மிரட்டல்... கடன் செயலிகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்!

கந்துவட்டியை மிஞ்சும் கொடுமை!

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகை யில், ``கடன் செயலிகளை டௌன்லோடு செய்து, கடனுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு சில நொடிகளிலேயே ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை கடனாகக் கொடுக்கப்படுவதால் செயலியின் விதிமுறைகளைப் பெரும்பாலான வர்கள் படிப்பதில்லை. அங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. கடன் தொகையைக் குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் முதலில் போனில் எச்சரிப்பார்கள். பின்னர் எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டல் தகவல்களை அனுப்புவார்கள். அதன் பிறகும் பணத்தைச் செலுத்தவில்லையென்றால், அவரின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண போட்டோக்களை குடும்பம், உறவினர்களுக்கு அனுப்பி அவமானப் படுத்துவார்கள். கடன் தொகைக்கு பிராசஸிங் கட்டணமாக 40 சதவிகிதம் வரை வசூலிக்கப் படுவதால், வாங்கிய கடனில் பாதிதான் கைக்கே வரும். கந்துவட்டிக் கும்பலைவிட மோசமான கும்பல் இது. கேட்ட தொகையில் பாதியை மட்டுமே கடனாகத் தருபவர்கள், மூன்று, நான்கு நாள்களுக்குப் பிறகு, கடனாகக் கொடுத்த தொகையை மூன்று மடங்காகத் திருப்பித் தர வற்புறுத்துகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் இன்னொரு ஆப்பில் கடன் வாங்கி இதை அடைப்பது என்று சிக்கல் மேல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் அப்பாவிகள்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை டார்கெட்வைத்து கடன் வசூலித்திருக் கிறார்கள். ஐடி நிறுவனம்போல கலெக்‌ஷன் ஏஜென்ட், டீம் லீடர், டீம் மேனேஜர், டீம் ஹெட் என இந்த மோசடிக் கும்பல் செயல்பட்டுள்ளது. கடன் செயலியை நிர்வகிக்க ஒரு டீமும், கடன் வாங்கியவர்களை மார்பிங் மூலம் அவமானப் படுத்தும் போட்டோஷாப் வேலைக்கென இன்னொரு டீமும் செயல்பட்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியே மொபைல் எண்ணைப் பெற்றிருப்பதால், இவர்களைப் பிடிப்பது சிரமமாக இருக்கிறது. ஒரே ஆள் 10, 15 செல்போன் எண்களைக்கூடப் பயன் படுத்துகிறார்கள். அடுத்து இவர்களெல்லாம் ஒரே இடத்திலும் இருப்பதில்லை. இருந்தாலும், இந்தக் கும்பலைக் கொத்தாகப் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றனர்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் பேசினோம். ``கடன் செயலிகள் மூலம், நாளொன் றுக்கு நாடு முழுவதும் 45 ஆயிரம் மோசடிகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. இந்த மோசடிக் கும்பல், கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க UPI வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திவந்துள்ளனர். மேலும் போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்குகளை தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மோசடியில் சிக்கும் கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் கண்டறிந்து, அவற்றை கூகுள் மூலம் தடை செய்கிறோம். இப்படி சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மட்டுமே 37 கடன் செயலிகளைத் தடை செய்திருக்கிறார்கள். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே மற்றொரு பெயரில் புதிய கடன் செயலியைத் தொடங்கிவிடுகிறார்கள். எனவே அங்கீகரிக்கப் படாத கடன் செயலிகளில் கடன் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அதே நேரத்தில் கடன் செயலியால் பாதிக்கப்படுவோர், அவமானத்துக்கு அஞ்சாமல் துணிந்து புகார் கொடுக்க முன்வர வேண்டும்” என்றார்.

தற்கொலை செய்துகொண்டவர்களில் பலர், ஆடம்பரத்துக்காகக் கடன் வாங்கியவர்கள் இல்லை. அவசரத்துக்கு வாங்கியவர்கள்தான். ‘முறையான வங்கிக் கடன்பெறத் தகுதியற்றவர்கள்’ என்று வங்கிகளால் நிராகரிக்கப்படும் சாதாரணமானவர்களே மோசடிக்காரர்களின் இலக்கு என்பது அடுத்த சோகம்!