Published:Updated:

“சிலம்பத்தைக் கையில பிடிச்சதுமே எனர்ஜி கிடைக்கும்!” - சிலம்பம் சுட்டி சுகித்தா

 குடும்பத்தினருடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்தினருடன்...

சாதனைச் செல்வி

திருச்சியில் சிறுமி சுகித்தாவை தெரியாத வர்கள் இல்லை. மூன்றடி உயரமுள்ள சுகித்தா, ஆறடி சிலம்பத்தைக் கையில் எடுத்துச் சுற்ற ஆரம்பித்தால் அனல் பறக்கிறது. அவர் வைக்கும் அடிமுறையும் சிலம்பம் சுற்றும் வேகமும் எதிராளியை மிரள வைக்கின்றன. சிலம்பத்தில் பல வெற்றிகள், பல பதக்கங்கள், இரண்டு முறை உலக சாதனை எனக் கலக்கி வரும் 12 வயதுச் சிறுமி சுகித்தா, சமீபத்தில் ஆன்லைனில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.

சுகித்தா
சுகித்தா

``அந்த ஆன்லைன் சிலம்பப் போட்டியில இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்னு மூணு நாடுகள்ல இருந்தும் 246 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகிட்டாங்க'' என்று ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார், பிரின்டிங் பிரஸ் வைத்திருக்கும் சுகித்தாவின் அப்பா மோகன்.... `` `மலேசிய சிலம்ப கோர்வை கழகம்', `சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழகம்', `உலக இளைஞர் சம்மேளனம்' இவங்க எல்லாம் சேர்ந்து நடத்தின போட்டி அது. ஐந்து பேர் கொண்ட நடுவர் குழுவுக்கு போட்டியாளர்கள் வீடியோ எடுத்து அனுப்பணும். அடிமுறை உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்களின் அடிப்படையில வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதுல ஆண்கள் பிரிவுல திருச்சி நவல்பட்டு பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த காவலர் அரவிந்த் தங்கப்பதக்கம் வாங்கினார். அவர்தான் பாப்பாவுக்கு மாஸ்டர். பெண்கள் பிரிவுல தங்கப்பதக்கம் வாங்கினது, நம்ம சுகித்தா குட்டி. சிங்கப்பூர்ல `சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம்' நடத்தின பாராட்டு விழாவுல பாப்பாவுக்கு 'சிலம்பத் தங்கமகள்' விருதையும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தின பாராட்டு விழாவுல 'முன்னோடிப் பெண்மணி' விருதையும் கொடுத்தாங்க. பாராட்டுகள் தொடர்ந்துட்டே இருக்கு'' என்றார் பெருமையுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`அங்கிள்... நான் பெருசா சாதனைலாம் பண்ணல...’’ என்று துடுக்குடன் பேச ஆரம்பித்தார் சுகித்தா. ‘ஒருநாள் எங்கப்பாகூட ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தப்போ, அங்க சில அக்காக்கள் சிலம்பம் சுத்தினதைப் பார்த்தேன். அசந்தே போயிட்டேன். எனக்கும் அதைக் கத்துக்கணும்னு ஆசை வந்துச்சு. எங்கம்மா, பாட்டிகிட்ட சொன்னேன். அப்பா உடனே என்னை சிலம்பம் கிளாஸ்ல சேர்த்துவிட்டுட்டாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் சிலம்பத்தை கையில பிடிச்சதுமே ரொம்ப எனர்ஜி கிடைச்சது மாதிரி இருந்தது’’ என்பவர்,

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

‘‘நான் சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்சு மூணு மாசம் இருக்கும். எங்க அரவிந்த் மாஸ்டர், ‘இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கைனு ஆறு நாடுகள் கலந்துக்கிற சிலம்பம் போட்டி நடக்குது. அதுல நம்ம பாப்பாவை கலந்துக்க வைக்கலாம்’னு எங்கப்பாகிட்ட கேட்டார். அதுக்கு எங்கப்பா, ‘மூணு மாசமாதான் பிராக்டீஸ் பண்ணுறா, எப்படி மெடல் வாங்குவா... மாஸ்டரும் ஸ்டூடன்ட்டும் காமெடி பண்றீங்களானு சிரிச்சாங்க. ஆனா மாஸ்டர்தான் விடாம, ‘நிச்சயமா இவ மெடல் அடிப்பா பாருங்க’னு சொல்லி என்னை அதில் கலந்துக்க வெச்சார்

கோவாவில நடந்த அந்தப் போட்டி, நான் கலந்துகிட்ட முதல் இன்டர் நேஷனல் போட்டி. அதுல நான் கோல்டு அடிச்சப்போ, எல்லாருக்கும் ஆச்சர்யம். அப்புறம், திருச்சியில 12 மணிநேரம் சுழற்சி முறையில சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைச்சேன். அதே நாள்ல,

3 மணி நேரம் இடைவெளி இல்லாம சிலம்பம் சுற்றி இன்னொரு உலக சாதனையும் படைச்சேன். அடுத்ததா, மதுரையில ஆறு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைச்சேன்’’ என்று அடைமழைபோல விடாது பேசும் சுகித்தா, இதுவரை13 கோல்டு, 4 சில்வர், 3 வெண்கலம் மெடல்களை வென்றுள்ளார்.

சுகித்தாவின் பாட்டி ஜெயலட்சுமி நம்மிடம், ``நானும் அவங்க அம்மாவும்தான் அவளை எங்க போட்டி நடந்தாலும் கூட்டிட்டுப் போவோம். முன்னயெல்லாம் பயந்த சுபாவமா, கூச்ச சுபாவமா இருந்தா. ஆனா, சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, ரொம்ப தைரியமான பொண்ணா ஆகிட்டா. ஒருநாள் துணை ஜனாதிபதி ஆபீஸ்லயிருந்து என் பையனுக்கு போன் பண்ணி, ‘சுகித்தாவை வெங்கைய நாயுடு சார் பார்க்கணும்னு சொல்றாங்க, அவசியம் கூட்டிட்டு வாங்க’னு சொன்னப்போ, எங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சியாகிடுச்சு. அவர் ரூம்குள்ள போனப்போ எங்களுக்கெல்லாம் ஒரே தயக்கம், பதற்றம். ஆனா, சுகித்தா அவர்கிட்ட ரொம்ப இயல்பா, தைரியமா பேசினதைப் பார்த்தப்போ அவ்வளவு பெருமையா இருந்துச்சு’’ என்றார் பேத்தியைக் கட்டிக்கொண்டு.

சுகித்தாவின் அம்மா இல்லத்தரசி பிரகதா, ‘‘ஓ.பி.எஸ் சார், நல்லகண்ணு ஐயா, ரயில்வேதுறை எஸ்.பி செந்தில்குமார் சார்னு பலரும் சுகித்தாவின் திறமையை கவனிச்சுப் பாராட்டினப்போ, அவளுக்கும் எங்களுக்கும் ரொம்ப ஊக்கமா இருந்தது. இன்னிக்கு பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு நடக்குற வன்முறைகள் எல்லாம், அவங்க எல்லாரும் ஒரு தற்காப்புக் கலையை கத்துக்க வேண்டியது அவசியம்ங்கிறதை அழுத்தமா உணர்த்துது. பாரம்பர்யக் கலையான சிலம்பம், குழந்தையோட தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் எந்தளவுக்கு வளர்க்கும் என்பதை, சுகித்தா விஷயத்தில் நாங்க கண்கூடா பார்த்திருக்கோம். நீங்களும் உங்க குழந்தைகளுக்கு ஒரு தற்காப்புக் கலையில் ஆர்வத்தை உண்டாக்குங்க’’ என்றார்.

‘‘அங்கிள்... பாய்ஸ் சேட்டை பண்ணினா என் சிலம்பம்தான் அவங்களுக்கு பதில் சொல்லும்’’ என்ற சுகித்தா, சட்டென காற்றைக் கம்பால் கிழித்து செய்துகாட்டிய அடிமுறைகள்... மிரட்டல்!