Published:Updated:

குழந்தைகளின் சந்தோஷத்தைப் பறிக்கிறதா சம்மர் கேம்ப்?

குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகள்

அந்தக் காலத்துல கோடை விடுமுறைவிட்டாலே குழந்தைங்க சொந்த ஊருக்குப் போயி அங்கே நாள் முழுக்க விளையாட்டுலயே பொழுதைப் போக்குவாங்க.

குழந்தைகளின் சந்தோஷத்தைப் பறிக்கிறதா சம்மர் கேம்ப்?

அந்தக் காலத்துல கோடை விடுமுறைவிட்டாலே குழந்தைங்க சொந்த ஊருக்குப் போயி அங்கே நாள் முழுக்க விளையாட்டுலயே பொழுதைப் போக்குவாங்க.

Published:Updated:
குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகள்

கோடை விடுமுறை வந்தால் தாத்தா-பாட்டிக்கு வீடுகளுக்குச் சென்றது அந்தக் காலம். சம்மர் கேம்ப் செல்வது இந்தக் காலம். கொரோனா பயம் பெருமளவில் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், சம்மர் கேம்ப்களுக்கான அறிவிப்புகள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன. பாட்டு, டான்ஸ், விளையாட்டு, யோகா என்று வழக்கமான சம்மர் கேம்ப்களோடு சரியான ஆங்கில உச்சரிப்பு, தவறில்லாமல் தமிழ் வாசித்தல், கதை சொல்ல கற்றுத்தருதல் போன்றவற்றுக்கான வித்தியாசமான கேம்ப்களையும் தற்போது அதிகம் காண முடிகிறது.

குழந்தைகளின் சந்தோஷத்தைப் பறிக்கிறதா சம்மர் கேம்ப்?
Jatinder Arora

கோடையில், ஒரு மாதம் கிடைக்கிற விடுமுறையிலும் பிள்ளைகளை சம்மர் கேம்ப் அனுப்ப வேண்டுமா; இது காலத்தின் மாற்றம் என்றால் இதன் பலன்கள் என்ன; இதை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பன போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பல வருடங்களாக சம்மர் கேம்ப் நடத்தி வருகிற பார்வதி நவீன், வாசுகி ராம் மனோகர், இல்லத்தரசி பானு, குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் ஜெயந்தினி மற்றும் குழந்தைகள்நல ஆர்வலர் பர்வதவர்த்தினி ஆகியோரிடம் இது குறித்துப் பேசினோம்.

ஒரு கேம்ப்தான்; ஒரு மணி நேரம்தான்!

தஞ்சாவூரைச் சேர்ந்த இல்லத்தரசி பானு, ‘`என் பையன் நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டான். அவன் ஸ்கூல்லயும் நீச்சல் சொல்லித் தர்றாங்கனாலும், சம்மர் கேம்ப்லதான் நீச்சல் கத்துக்க சேர்த்திருக்கேன். அப்போதானே நான் பக்கத்துலேயே இருக்க முடியும். பிள்ளைய கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு ஒரேயொரு கேம்ப்ல மட்டும்தான் சேர்த்திருக்கேன். அதுவும் ஒரு மணி நேரம்தான்’’ என்கிறார் தெளிவாக.

வாசுகி
வாசுகி

ஹாலிடே சந்தோஷத்தைக் கெடுக்கிறதில்ல!

‘`எங்க சம்மர் கேம்ப்ல தமிழ், ஆங்கிலம்னு ரெண்டு மொழிகள்ல கதை சொல்லச் சொல்லித் தர்றோம். குழந்தைகளையும் கதை சொல்லத் தூண்டுறோம். இதனால குழந்தைகளோட வாசிப்பு பழக்கம் வளரும்; மொழி மேம்படும்; கற்பனைத்திறன் அதிகமாகும். செஸ், சிலம்பம், கராத்தேனு விதவிதமா ஸ்போர்ட்ஸும் சொல்லித்தர்றாங்க. எதிர்கால எழுத்தாளரோ, இயக்குநரோ, ஒலிம்பிக் சாம்பியனோ உருவாக சம்மர் கேம்ப்பும் உதவலாமே... மத்தபடி, சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு வாரமோ, பதினஞ்சு நாளோதான், அதுலயும் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம்தான் கிளாஸ் எடுக்கிறோம். குழந்தைகளுக்குக் கிடைக்கிற சம்மர் ஹாலிடே சந்தோஷத்தை நாங்க எந்த வகையிலும் கெடுக்கிறதில்லை’’ என்கிறார் வாசுகி ராம் மனோகர்.

ஜெயந்தினி
ஜெயந்தினி

இந்தக் காலத்துக்கு ஓகேதான்!

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி பேசுகையில், ‘`அந்தக் காலத்துல கோடை விடுமுறைவிட்டாலே குழந்தைங்க சொந்த ஊருக்குப் போயி அங்கே நாள் முழுக்க விளையாட்டுலயே பொழுதைப் போக்குவாங்க. இன்னிக்கு பல குடும்பங்கள் நகரங்கள்ல செட்டிலாயிட்டதால, இன்றைய குழந்தைகள் பலருக்கும் அந்த வாய்ப்பே கிடைக்கிறதில்லை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால குழந்தைகளை டூர் கூட்டிட்டுப் போகவும் வாய்ப்புகள் குறைவு. பல வீடுகள்ல ஒற்றை குழந்தைதான். இதனால தூங்குற நேரம் தவிர மத்த நேரத்துல டி.வி, செல்போனே கதியா இருக்காங்க குழந்தைகள். இதையெல்லாம் பார்த்து கண்களையும் மனசையும் கெடுத்துக்கறதுக்கு பதில் சம்மர் கேம்புக்கு அனுப்பலாம். சம்மர் கேம்புக்கு செலவழிக்க முடியும், பிள்ளைகளுக்கும் விருப்பம் இருக்குன்னா சேர்க்கலாம்... கட்டாயப்படுத்தி மட்டும் அனுப்பாதீங்க’’ என்கிறார்.

பார்வதி நவீன்
பார்வதி நவீன்

ஸ்கிரீன் டைமை குறைக்குது!

‘`சரியான ஆங்கில உச்சரிப்பு ரொம்ப முக்கியம்கிற விழிப்புணர்வு இன்னிக்கு எல்லாருக்கும் வந்துட்டதால எங்க சம்மர் கேம்புக்கு ஏ,பி,சி,டி கத்துக்குற குழந்தைங்க மட்டுமல்லாம ஏழாவது, எட்டாவது படிக்கிற பிள்ளைங்ககூட வர ஆரம்பிச்சிருக்காங்க. முப்பது, நாப்பது குழந்தைங்க இருக்கிற ஒரு வகுப்பறையில 45 நிமிஷ ஆங்கில வகுப்புல ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியா கவனிச்சு ஆங்கிலம் பேசறதுல, படிக்கிறதுல, எழுதறதுல உள்ள பிரச்னையை சரி செய்யுறது டீச்சர்ஸுக்கு ரொம்ப கஷ்டம். ஆனா, குறைவான பிள்ளைகளுக்குச் சொல்லித் தர்ற எங்களால ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா கவனம் கொடுத்து சொல்லித்தர முடியும். ‘வீட்ல இருந்தா டி.வி., செல்போன்னு பார்த்துக்கிட்டிருக்காங்க. சம்மர் கேம்ப்ல பிள்ளைங்களோட ஸ்கிரீன் டைம் குறையுது’னு சொல்லி பேரன்ட்ஸ் சந்தோஷப்படுறாங்க... நல்லதுதானே’’ என்கிறார் பார்வதி நவீன்.

பர்வதவர்த்தினி
பர்வதவர்த்தினி

பிள்ளைகளின் விருப்பமே முக்கியம்!

மதுரையைச் சேர்ந்த குழந்தைகள்நல ஆர்வலர் பர்வதவர்த்தினியோ, ‘`கோடை விடுமுறை குழந்தைகளுக்கான ஓய்வுக்காலம். ஒரு மாசமோ, ஒன்றரை மாசமோ அவங்க ஓய்வு எடுத்தாதான் அடுத்த வருடம் உற்சாகமா அவங்களால படிக்க முடியும். அப்போதும் கிளாஸ் அனுப்பினா குழந்தைகள் உளவியல்ரீதியா பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பிருக்கு. விடுமுறை நாள்கள்ல சம்மர் கேம்ப்புக்கு போறதுல குழந்தைகளுக்கு விருப்பமிருக்கான்னு எத்தனை பெற்றோர் கேட்கிறாங் கன்னு தெரியலை. பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறா, தங்களுடைய வசதிக்காக சம்மர் கேம்ப்கள்ல சேர்த்துவிடுற பெற்றோர் பலர் இருக்காங்க. அந்த மனநிலை மாறினா நல்லது’’ என்கிறார் அக்கறையோடு.

சம்மர் கேம்ப்... நம் குழந்தைகளின் ஓய்வுக்காலத்தைப் பறிக்காமல் பார்த்துக்கொள்வோமாக..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism