Published:Updated:

‘சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டு சுறாக்கள்!’ - அதிரவைக்கும் கடத்தல் பின்னணி

சுறாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுறாக்கள்

கடல் அட்டைகள், சுறா துடுப்புகள் கடத்தப்படுவதும், அதை நாங்கள் தடுப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன

‘சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டு சுறாக்கள்!’ - அதிரவைக்கும் கடத்தல் பின்னணி

கடல் அட்டைகள், சுறா துடுப்புகள் கடத்தப்படுவதும், அதை நாங்கள் தடுப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன

Published:Updated:
சுறாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுறாக்கள்

ஆகஸ்ட் 23, ராமநாதபுரம் மாவட்ட க்யூ பிராஞ்ச் அதிகாரிகளுக்கு அவசர அழைப்பொன்று வருகிறது. `சார்... திருப்புல்லாணி சல்லித்தோப்பு கடற்கரை பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்புல, அரசாங்கத்தால தடைசெய்யப்பட்ட `அந்த’ உயிரினத்தையெல்லாம் பதுக்கிவெச்சுருக்காங்க. நீங்க உடனே வந்தா...’ என்றபடியாக அந்த அழைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்த கணமே சல்லித்தோப்பு கடற்கரைக்கு விரைந்த க்யூ பிராஞ்ச் அதிகாரிகள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அங்கு ஒரு தென்னந்தோப்பில் கரையேற்றிவைக்கப்பட்டிருந்த ஃபைபர் படகில் மூட்டை மூட்டையாகச் சுறாமீன் துடுப்புகளும், பதப்படுத்தப்பட்ட அட்டைகளும் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயினர். பல கோடி மதிப்பிலான சுமார் 1,000 கிலோ கடல் அட்டைகள் இருந்த 23 மூட்டைகளையும், `சுறா பீலிகள்’ என்றழைக்கப்படும் 250 கிலோ சுறா துடுப்புகள் இருந்த 13 மூட்டைகளையும், 10 டீசல் கேன்களையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்தடுத்த விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் பகுதியைச் சேர்ந்த செல்வம், ரஞ்சித் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, கீழக்கரை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வனத்துறை நடத்திய தீவிர விசாரணையில் கடல் அட்டைகள், சுறாத் துடுப்புகள் இலங்கைக்குக் கடத்த வைத்திருந்ததாகவும், அங்கிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவை கொண்டு செல்லப்படும் என்றும் கூறி அதிரவைத்திருக்கின்றனர். அதற்கு முந்தைய நாள், மண்டபம் வேதாளை கடற்கரை அருகே வேனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 450 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த ஜூலை மாதமும், உச்சிப்புளி இருமேனி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்தவிருந்த 450 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டோரைக் கைதுசெய்தனர்.

அப்படி சுறா துடுப்புகளிலும், கடல் அட்டைகளிலும் என்னதான் இருக்கிறது... அவை ஏன், எதற்காக, எங்கு கடத்தப்படுகின்றன?

‘சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டு சுறாக்கள்!’ - அதிரவைக்கும் கடத்தல் பின்னணி

சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டுச் சுறாக்கள்!

சீனர்களின் மரபுவழி மருத்துவ உணவுப் பட்டியலில், கடல் அட்டைகள் பிரதானமானவை. கீழ்வாத நோய், மலச்சிக்கல், மூட்டுவலி, அதீதச் சோர்வு போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்குக் கடல் அட்டையால் தயாரிக்கப்படும் உணவே மருந்தாக உட்கொள்ளப்படுவதால் கடல் அட்டைக்கு மிக அதிக அளவில் அங்கு வரவேற்பு இருக்கிறது. அந்த வரிசையில் சுறாக்களின் துடுப்புகளும் சீனர்களின் மருத்துவப் பசிக்கு இறையானதுதான் மற்றுமோர் அதிர்ச்சி செய்தி. கடல் அட்டையைப்போலவே சுறாக்களின் துடுப்புகளையும் ஆண்மைக் குறைவு மற்றும் இதயநோய்க்கான அருமருந்தாகக் கருதி அவற்றை சூப் செய்து குடிக்கின்றனர். சீனா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் இந்தச் சுறாத் துடுப்புகளில் தயாரிக்கப்படும் சூப்புக்குத்தான் அதிக கிராக்கி. அதன் பின்னணியில் புழங்கும் பணத்துக்காகத்தான் அரிய வகை சுறாக்களின் வாழ்விடமாக இருக்கும் மன்னார் வளைகுடா தற்போது இலக்காகியிருக்கிறது.

இந்தியா டு இலங்கை டு சீனா!

ஒருகாலத்தில் கடல் அட்டைகளும், சுறாக்களின் துடுப்புகளும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுதான்வந்தன. ஆனால், வணிக நோக்குக்காக அவை அதிக அளவில் பிடிக்கப்பட்டதால், பிடிக்கப்படும் வேகத்துக்கும், அவை இனப்பெருக்கம் செய்யும் வேகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து, எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அதையடுத்து, கடந்த 2001-ல் கடல் அட்டைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க இந்திய அரசால் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல, 2015-ல் சுறா மீன் துடுப்புகளையும் ஏற்றுமதி செய்ய தடைவிதித்து, வன உயிரினச் சட்டத்தில் திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

‘சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டு சுறாக்கள்!’ - அதிரவைக்கும் கடத்தல் பின்னணி
‘சீனர்களின் சூப்புக்கு தமிழ்நாட்டு சுறாக்கள்!’ - அதிரவைக்கும் கடத்தல் பின்னணி

இருப்பினும் கோடிகளில் புரளும் இந்த வணிகத்தைக் கைவிடாத வியாபாரிகளும், சில பெரு முதலாளிகளும் திரைமறைவில் இருந்தபடி சட்டவிரோதக் கடத்தலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, ``மீனவர்கள் வலையில் தவறுதலாகச் சிக்கும் கடல் அட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து, பதப்படுத்தி அவற்றை நாட்டுப்படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்துகின்றனர். சிலர் கடத்தலுக்காக வேண்டுமென்றே கடல் அட்டைகள், சுறாக்களைக் குறிவைத்துப் பிடிப்பதும் உண்டு. இதில், சுறாக்களைப் பிடித்து அதன் துடுப்புகளை வெட்டி எடுப்பதால், அவை தடைசெய்யப்பட்ட வகையைச் சேர்ந்ததா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறு பிடிக்கப்படுபவை கடல்வழியாக இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன. இலங்கையில் தூண்டில் மூலம் கடல் அட்டை பிடிப்பது, பண்ணையில் வளர்ப்பது போன்றவற்றுக்குச் சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. அதன் பிறகு, இலங்கை வழியாக சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு எளிதாக வணிகம் செய்யப்படுகிறது” என்கிறார்கள் விவரமறிந்த மீனவர்கள். மேலும், ``நிலத்தின் வளத்துக்கு மண்புழுக்கள் எப்படியோ அதேபோலத்தான் கடல்வளத்துக்குக் கடல் அட்டைகள் முக்கியம். கடல்வாழ் உயிரிகளின் உணவுச்சங்கிலியில் முக்கியமான இடத்தில் இருப்பவை சுறாக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால், ஒட்டுமொத்தக் கடல் சூழலே பாதிக்கப்படும்” என வேதனை தெரிவிக்கிறார்கள்.

இரா.சின்னசாமி
இரா.சின்னசாமி

இந்தக் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, கடலோர காவல் கண்காணிப்பாளர் இரா.சின்னசாமியிடம் பேசினோம். ``கடல் அட்டைகள், சுறா துடுப்புகள் கடத்தப்படுவதும், அதை நாங்கள் தடுப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கடத்தல்களைத் தடுக்க கடலோர காவல் குழுமம் பல்வேறு புதிய ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. மீனவ கிராமங்களில் எங்களின் இன்ஃபார்மர்களை அதிகப்படுத்தியிருக்கிறோம். பழைய குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடலோரத்தில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடல்வாழ் அரிய உயிரினங்கள் குறித்து விளக்கவும் புதிதாகத் தன்னார்வலர்களைச் சேர்த்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

கடல் என்பது பூமியின் கருவறை. அதைச் சூறையாடுவது நம்மையே அழித்துக்கொள்வதற்குச் சமம்!