நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில், பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 புத்தாண்டு வரவிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகாராஷ்டிரா அரசாங்கம், மும்பையில் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இந்தநிலையில், தனது ஓய்வுக்குப் பிறகு பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் தொடருக்குத் தன்னைத் தயார்ப்படுத்திவருகிறார். இதற்காக, கடந்த சில நாள்களாக மும்பையில் தங்கியிருக்கும் இவர், மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று, மும்பையிலுள்ள டிராகன்ஃபிளை கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சுரேஷ் ரெய்னா. அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பாடகர் குரு ரந்தவா (Guru Randhawa), பாலிவுட் பிரபலம் சுசானே கான் (Sussanne Khan) மற்றும் ரெய்னாவின் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்போது, டிராகன்ஃபிளை கிளப்பில் சோதனை மேற்கொண்ட மும்பை போலீஸார், கோவிட் விதிமுறைகளை மீறியதாக கிளப்பின் ஏழு ஊழியர்கள் உட்பட மொத்தம் 34 பேரைக் கைதுசெய்துள்ளனர். சுசானே கான், குரு ரந்தாவா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சஹார் காவல் நிலைய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்திருக்கும் மும்பை காவல்துறையினர், ``இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை நடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கிளப்பைத் திறந்து வைத்திருந்தது, சமூக விலகல், முகக்கவசம் அணிதல் என கோவிட் தடுப்பு விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இருந்தது எனப் பல குற்றங்களுக்காக, இந்திய தண்டனைச் சட்டம் 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தனர். பிறகு ரெய்னா, குரு ரந்தவா ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.