அலசல்
சமூகம்
Published:Updated:

சினை முட்டை, வாடகைத்தாய், குழந்தை விற்பனை... சேலத்தில் சிக்கிய வில்லங்க கும்பல்!

கைது
பிரீமியம் ஸ்டோரி
News
கைது

கஸ்தூரிக்குப் பிறந்த குழந்தையின் போட்டோவை சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய கும்பல், 6 லட்சம் ரூபாய்க்கு விலைபேசியிருக்கிறது.

பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை, சேலத்தில் 5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பலை, கடந்த 8-11-2022 அன்று சுற்றிவளைத்திருக்கிறார்கள் போலீஸார். அவர்களிடம் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்துப் பேசுகிற போலீஸார், ‘‘திருவாரூரைச் சேர்ந்த கஸ்தூரிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக கர்ப்பமாகியிருக்கிறார். சந்தேக புத்தி கொண்ட கணவர் ராமராஜ் அவரை அடித்து உதைத்திருக்கிறார். கொடுமை தாங்க முடியாமல், நாமக்கல்லில் இருக்கும் தன் அக்காள் வீட்டுக்கு வந்துவிட்டார் கஸ்தூரி. அங்கே, குழந்தை விற்பனைக் கும்பலைச் சேர்ந்த மதியழகன், வளர்மதி, லதா ஆகியோரின் தொடர்பு கஸ்தூரிக்குக் கிடைத்திருக்கிறது.

சினை முட்டை, வாடகைத்தாய், குழந்தை விற்பனை... சேலத்தில் சிக்கிய வில்லங்க கும்பல்!

கஸ்தூரியை வாடகை வீட்டில் தங்கவைத்து, இந்தக் கும்பலே உணவளித்து குழந்தையைப் பெற்றெடுக்க வைத்திருக்கிறது. அதே வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட மற்றொரு கர்ப்பிணியும் இருந்திருக்கிறார். கஸ்தூரிக்குப் பிறந்த குழந்தையின் போட்டோவை சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய கும்பல், 6 லட்சம் ரூபாய்க்கு விலைபேசியிருக்கிறது. முன்பணமாக 38 ஆயிரம் வாங்கிய அவர்கள், குழந்தையைக் கொடுத்து, மீதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது பிடிபட்டனர். இந்த நெட்வொர்க்கின் பின்னணியில், கவிதா, காயத்ரி என இன்னும் பலர் இருக்கின்றனர்.

மதியழகன், வளர்மதி
மதியழகன், வளர்மதி
சினை முட்டை, வாடகைத்தாய், குழந்தை விற்பனை... சேலத்தில் சிக்கிய வில்லங்க கும்பல்!

குழந்தையை விற்க முயன்று பிடிபட்ட லதா, வளர்மதி இருவரும் ஏற்கெனவே சினை முட்டை விவகாரத்திலும் ஏஜென்ட்டாக செயல்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதே நெட்வொர்க்கில் இவர்கள் இருந்ததால், கருத்தரிப்பு மருத்துவ மையங்களில் ஆரம்பித்து கருமுட்டை தானம் செய்வோர், குழந்தையில்லாத தம்பதியர் வரை தொடர்பில் இருந்துள்ளனர். எனவே, அப்பாவிப் பெண்களிடம் பணத்தாசை காட்டி, கருமுட்டை தானம் செய்யவைப்பது, வாடகைத்தாயாக மாற்றி, குழந்தைகளைப் பெற்றெடுத்து விற்பனை செய்வதுவரையிலாக பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மதியழகன் வளர்மதி, லதா மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்’’ என்றனர்.

லாவண்யா
லாவண்யா

மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசியபோது, “குழந்தை விற்பனை கும்பலின் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் முழுவதையும் பிடிப்பதற்காக, தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை மருத்துவர் ஆலோசனையின்பேரில் அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்றார்.