நாகை: சொந்த நாட்டிற்குச் செல்ல தயாராகும் பறவைகள்... இன்று கணக்கெடுப்பு பணி தொடக்கம்!
இந்தாண்டு கோடியக்கரையில் அதிகளவு மழை பெய்து மழை நீர் தேங்கியுள்ளதால், ரஷ்யாவிலிருந்து பூநாரை உள்ளிட்ட 47 வகையான பறவைகள் வந்து குவிந்துள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தாண்டு பருவமழை அதிகம். எனவே ரஷ்யா நாட்டிலிருந்து லிட்டில்சென்ட் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.
இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து அங்கு நிலவும் குளிரிலிருந்து தப்பிக்க, பறவைகள் இங்கு வருவது வழக்கம். ரஷ்யா, சைபீரியா இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 247-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் இப்படி வந்து செல்வது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டு கோடியக்கரையில் அதிகளவு மழை பெய்து மழை நீர் தேங்கியுள்ளதால், ரஷ்யாவிலிருந்து பூநாரை உள்ளிட்ட 47 வகையான பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்தப் பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலுள்ள நண்டுபள்ளம், சிறுதலைக்காடு, நெடுந்தீவு, கோவை தீவு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்தப் பறவைகள் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் வரை எடை உடையவை. அளவில் மிகச்சிறியவையாகவும் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் ரஷ்ய நாட்டிலிருந்து கோடியக்கரைக்கு இடைவிடாது பறந்து வந்துள்ளன.
இந்த சிறிய பறவைகள் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாக தண்ணீரில் புழு, பூச்சிகளை உண்பதைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகளும், பறவை ஆர்வலர்களும் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இதுபற்றி மும்பை பறவைகள் ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரனிடம் பேசினோம்.
``சீசன் முடியும் நேரம் வந்துவிட்டதால் பறவைகள் இங்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிகளவில் காணப்படும் லார்வா புழு பூச்சிகளைத் தின்று, தங்களது உடலில் கொழுப்பு சத்தை நிறைந்துவிட்டன. தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விடும்" என்றார்.
வெளிநாடு திரும்பவுள்ள பறவைகள் எத்தனை என்பதை தனியார் கல்லூரி மாணவர்களுடன் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.