Published:Updated:

வீடு... கார்... கிரெடிட் கார்டு... தனிநபர் கடன்... நம்மவர்கள் எப்படி?

சர்வே முடிவுகள்!

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும்போதெல்லாம் மக்களிடையே பணப்புழக்கம் குறைவாக இருப்பதும், நுகர்வுக் கலாசாரம் குறைந்திருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பணப் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி, 2019-ம் ஆண்டில் மட்டும் ரெப்போ விகிதத்தை ஐந்து முறை குறைத்திருக்கிறது. ரெப்போ விகிதத்தைக் குறைத்ததன் பலன் மக்களுக்குச் சென்றடைய வேண்டுமென்பதற்காக, வங்கிகள் வழங்கும் கடனின் வட்டிவிகிதத்தைக் குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்திவந்தது. 

வீடு... கார்...  கிரெடிட் கார்டு... தனிநபர் கடன்... நம்மவர்கள் எப்படி?

பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமென்றால், குறைந்த வட்டிக்குக் கடன்கள் எளிதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வங்கிக் கடன்மூலமாக வாகனம் / வீடு வாங்குவது எனத் தங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் செலவு செய்வார்கள். புதிதாக வீடுகள் கட்டப்படும்போது, கட்டுமானப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து உற்பத்தி பெருகும். இப்படிக் கடனை எவற்றுக்கெல்லாம் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்களோ அவற்றுக்கெல்லாம் தேவை அதிகரித்து, நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

கடன் வாங்குவதை அடிப்படையாகக்கொண்டு, பேங்க் பஜார் ஆன்லைன் ஃபைனான்ஷியல் புராடக்ட்ஸ் விற்பனைத்தளம், கடந்த 2019-ம் ஆண்டில் பொதுமக்களின் கடன் வாங்கும் திறன் எப்படி இருக்கிறது என ஓர் ஆய்வு நடத்தியது.

இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதிச் சேவைகளை வழங்குகிறது. கடந்த 2019-ல் மட்டும் இந்த விற்பனைத் தளத்துக்கு சுமார் 3.22 கோடி பேர் வருகை தந்துள்ளனர். இதன்மூலம் கிடைத்த டேட்டாவைக்கொண்டு, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டுகள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரத்தை பேங்க் பஜார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் நம் நாட்டவர்களின் கடன் வாங்கும் திறன், வீடு, வாகனங்கள் வாங்க வாங்கிய கடன்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிவதுடன், நடப்பு 2020-ல் அவர்களின் கடன் வாங்கும் உத்தி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். 

வீடு... கார்...  கிரெடிட் கார்டு... தனிநபர் கடன்... நம்மவர்கள் எப்படி?

“இந்தியாவைப் பொறுத்தவரை தனி நபர்களின் நிதித்தேவைக்கான சந்தை மிகவும் பெரியது. எனவே, அதுபற்றித் தெரிந்துகொள்வது தேவையான ஒன்றாகும். தனி நபர்களுக்கான வங்கிக் கடன் வழங்குவதில் இருக்கும் யதார்த்தச் சூழல் குறித்து அறிந்துகொள்வதில் யாருக்கும் சரியான பார்வை இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

கடந்த ஆண்டில் இதுகுறித்து நாங்கள் வெளியிட்ட அறிக்கையில், 2019-ம் ஆண்டு குறித்து நிறைய கணிப்புகளைக் கூறியிருந்தோம். தற்போது ‘மணிமூட் 2020’ (Moneymood 2020) அறிக்கையில், வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவுகளில் முன்பு கூறிய கணிப்புகள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன” என்கிறார் பேங்க் பஜார் சி.எம்.ஓ அபர்ணா மகேஷ்.

பிரீமியம் வகை கார்டுகளைப் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 30% வரை அதிகரித்துள்ளது.

வீட்டுக் கடன் வாங்குவோர் எண்ணிக்கை உயர்வு

நுகர்வோர் பயன்பாடு குறைந்ததால், 2019-ம் ஆண்டின் முதல் பாதியில் சில்லறை வங்கிக் கடன்களின் வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளைவிடக் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, வங்கிக் கடன் பெற்ற தனிநபர்களின் விகிதம், கடந்த ஆண்டைவிட 16% குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் பொருளாதார மந்தநிலை நிலவியபோதும், நம் நாட்டினர் தங்களது மிகப்பெரிய வாழ்க்கை லட்சியங்களைத் தள்ளிப்போடாமல், மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்
சர்வே முடிவுகள்

வீட்டுக் கடன், வாகனக் கடன் வகைகளில் அதிக மதிப்புகொண்ட கடன்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, குறைந்த மதிப்புகொண்ட கடன்களை வாங்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் பிரிவில், ரூ.30 லட்சத்துக்குக் குறைவான கடன்களை வாங்குவோர் எண்ணிக்கை 72% அதிகரித்திருக்கிறது. முதன்முறையாக வீடு வாங்குபவர்கள் அதிகரித் திருப்பது இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பிரீமியம் வகை கார்டு

வங்கிக் கடன் பெற்றுள்ள வர்களை, மாநகராட்சிப் பகுதி, பிற பகுதிகள் என இரண்டாகப் பகுத்துப் பார்க்கையில், சராசரி தனிநபர் கடன்தொகை, மாநகராட்சியில் ரூ.2.61 லட்சமாகவும், பிற பகுதிகளில் ரூ.2.79 லட்சமாகவும் உள்ளது. ஆக, மாநகராட்சி அல்லாத பிற பகுதிகளில் வாங்கப்பட்டுள்ள தனிநபர் கடன் மதிப்பு கூடுதலாக இருக்கிறது.

வாகனக் கடனைப் பொறுத்தவரை, 2019-ல் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆட்டோமொபைல் துறையின் விற்பனையும், வாகனக் கடனுக்கான தேவையும் சரிவைச் சந்தித்தன.

எனினும், 2019-ம் ஆண்டின் இறுதியில் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மீண்டுவந்தது. நகர்ப் பகுதியில் சராசரி வாகனக் கடன் மதிப்பு ரூ.5.7 லட்சமாகவும், பிற பகுதிகளில் ரூ.5.5 லட்சமாகவும் உள்ளது.

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில், எந்த வகை கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதல் சலுகை பெறலாம் என்பதைப் புரிந்துகொண்டு பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. பிரீமியம் வகை கார்டுகளில் அதிக சலுகைகள் கிடைக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 30% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 26-35 வயதுக்கு உட்பட்ட புதிய தலைமுறையினர் 43.38% கூடுதலாக இந்த வகை கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயர்ந்தது பெண்களின் பங்களிப்பு

வங்கிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு இருப்பது ஆச்சர்யமான ஒரு செய்தியாகும்.

தனிநபர் கடன் பிரிவில், பெண்கள் வாங்கிய சராசரி தனிநபர் கடன் தொகை ரூ.2.55 லட்சமாகவும், ஆண்கள் வாங்கிய சராசரி தனிநபர்கடன் தொகை ரூ.2.67 லட்சமாகவும் உள்ளது.

debt
debt

வீட்டுக் கடன் பிரிவில் பெண்கள் வாங்கிய வீட்டுக் கடன் சராசரி ரூ.25.64 லட்சமாகவும், ஆண்கள் வாங்கிய வீட்டுக் கடன் சராசரி ரூ.23.72 லட்சமாகவும் உள்ளது. இந்தப் பிரிவில் பெண்கள் வாங்கிய தொகை ஆண்களைவிடக் கூடுதலாக உள்ளது.

கிரெடிட் கார்டுகள் பிரிவில் பெண்கள் வாங்கிய கார்டுகளின் எண்ணிக்கை, பெட்ரோல் கார்டுகளில் 49.07%, பிரீமியம் கார்டுகளில் 32.78%, டிராவல் கார்டுகளில் 21.99% அதிகரித்துள்ளது. 

வங்கிக் கடன்கள் குறித்த கணிப்பு

தனிநபர் கடன்களின் வளர்ச்சி விகிதம், வரும் 2024-ம் நிதியாண்டுக்குள் ரூ.13.8 லட்சம் கோடியாக அதிகரிக்குமென்று முன்னணி தனியார் துறை வங்கி கணித்துள்ளது. இதன்மூலம் வங்கிக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட சரிவு சரிசெய்யப்படும் என்று நம்பலாம்.

நிதிமுதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வங்கிக் கடன் வழங்குவதிலுள்ள வெளிப்படைத்தன்மை, அரசாங்கம் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளில் மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் வங்கிக் கடன் பெறுவது அதிகரிக்கும் என்றும் இந்த சர்வே மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

வாகனக் கடன்களைப் பொறுத்தவரை, பணப்புழக்கத் தட்டுப்பாடு மற்றும் பி.எஸ்.6 விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு சவால்மிக்கதாக இருக்கும்.

இரண்டாம் காலாண்டில்தான் வாகனத் தயாரிப்பும், விற்பனையும் உத்வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மூன்றாவது காலாண்டில் வாகனக்கடன்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும்.

பண்டிகைக்கால விற்பனை, கடன் வழங்குவதை எளிமைப்படுத்துவது, வங்கிசாரா நிதிநிறுவனங்களின் நிதிப் பிரச்னையைத் தீர்க்க அரசு எடுக்கும் நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக இந்தத் துறையில் மீட்சி ஏற்படக்கூடும்.

ரெப்போ விகிதக் குறைப்புக்கேற்ப வங்கிகளின் கடன் விகிதங்களையும் குறைக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கி தெரிவித்ததால், கடந்த அக்டோபர் 2019 முதல் வங்கிக் கடன் விகிதங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. வட்டி விகிதம் குறைந்திருப்பதன் காரணமாக, இதுவரை வங்கிக் கடன் பெறுவது குறித்து முடிவெடுக்காமல் இருப்பவர்கள்கூட 2020-ல் வங்கிக் கடன் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் கிரெடிட் கார்டுகள்

வாங்கக்கூடிய விலை வீடுகள் பிரிவில், இதுவரை 4.5 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கூடுதல் வரிச் சலுகைகள், மத்திய அரசுத் தரப்பில் எடுக்கப்படும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக இந்தப் பிரிவில் வீட்டுக் கடனுக்கான தேவை அதிகரிக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் முதல் கிரெடிட் கார்டுடன் திருப்தி அடையாமல், மேலும் சில கிரெடிட் கார்டுகளைப் பெற்று, அவற்றின்மூலமாகப் பொருள்களை வாங்க நினைப்பார்கள். மேலும், கிரெடிட் கார்டு கடன் வரம்புகளை அதிகரிக்கவும் பலர் விரும்புகிறார்கள். இந்த மனப்பாங்கு, 2020-ம் ஆண்டிலும் தொடர்ந்து அதிகரிக்குமென்று தெரிகிறது.

குறிப்பாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள், பிரீமியம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது 2020-ம் ஆண்டில் பணப்புழக்கம் அதிகரிக்க சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆகமொத்தத்தில் 2020-ம் ஆண்டு, வங்கிக் கடன்கள் பெறுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, இந்தியாவின் பொருளாதார நிலையும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சரியான கடன்கள் எப்போதுமே வளர்ச்சியைத்தான் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் கடன் வாங்கத் தயாரா?

மக்கள் கவனமாக இருக்கின்றனர்!

அதில் ஷெட்டி, சி.இ.ஓ., பேங்க் பஜார்

வீடு... கார்...  கிரெடிட் கார்டு... தனிநபர் கடன்... நம்மவர்கள் எப்படி?

“பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் முதலீடு செய்திருப்பது இந்த ஆண்டின் ‘மணிமூட்’மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது. தங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும், நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டுள்ளனர். வரக்கூடிய நாள்களில், பேங்க் பஜார் போன்ற ஆன்லைன் ஃபைனான்ஷியல் புராடக்ட் தளங்கள், வாடிக்கையாளர்களின் புத்திசாலித்தனமான ஃபைனான்ஷியல் பர்ச்சேஸ் முடிவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சரியான நேரத்தில் தகுந்த ஃபைனான்ஷியல் முடிவை எடுப்பதற்கு, வீடியோ மூலமான கே.ஒய்.சி-யை நாங்கள் செயல்படுத்துகிறோம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு