Published:Updated:

`கட்அவுட், பாலாபிஷேகம் கிடையாது; மரக்கன்றுதான் கொடுப்போம்!'- தியேட்டரில் அசத்திய சூர்யா ரசிகர்கள்

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான `காப்பான்' படம் நேற்று ரிலீஸானது. கரூரில் `காப்பான்' படம் வெளியான தியேட்டரில் ஃப்ளெக்ஸ்களைத் தவிர்த்த அவரது ரசிகர்கள், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அசத்தியிருக்கிறார்கள்.

மரக்கன்றுகள் வழங்கும் சூர்யா ரசிகர்கள்
மரக்கன்றுகள் வழங்கும் சூர்யா ரசிகர்கள் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்ட சூர்யா தலைமை ரசிகர் மன்றம் சார்பில், கரூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் வெளியான சூர்யா நடித்த `காப்பான்' திரைப்பட முதல் காட்சிக்கு வருகை தந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, திரைப்படம் வெளியானதை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். டிரம்ஸ் செட்டுகள் அடித்து வீதியுலா வந்தனர்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்
நா.ராஜமுருகன்
Vikatan

இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி கூறுகையில், ``சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சென்னையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் பலியானார். இந்த நிலையில், `திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா, திரைப்படம் வெளியாகும் நாள்களில் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது' என்று நடிகர் சூர்யா உட்பட முன்னணி நடிகர்கள் வலியுறுத்தியிருந்தனர். எனவே, சூர்யா நடிப்பில் வெளியான `காப்பான்' திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, பொதுமக்களுக்கு இலவசமாகப் பயன்தரும் மரக்கன்றுகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

கல்வி உதவிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இயற்கை வளங்களைப் பேணிக்காக்க மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்துவோம். சூர்யாவுக்கு கட் அவுட் வைப்பது, அந்த கட்அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, ஊரெங்கும் மக்களுக்கு இடையூறு செய்யும்வகையில் ஃப்ளெக்ஸ்கள் வைப்பது என எந்தத் தவறான செயல்களிலும் ஈடுபடமாட்டோம்.

டிரம்ஸ் அடித்து கொண்டாட்டம்
டிரம்ஸ் அடித்து கொண்டாட்டம்
நா.ராஜமுருகன்

`காப்பான்' படத்தைப் பார்க்க வரும் பொதுமக்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் மூன்று நாள்கள் வரை மரக்கன்றுகள் தர இருக்கிறோம். மரக்கன்றுகள் வழங்குவதை சூர்யா திரைப்படம் வெளியாகும்போது மட்டும் செய்யாமல், வருடம் முழுக்க செய்யலாம்னு இருக்கோம். `சூர்யாவால நன்மையேயொழிய, எந்தக் கெடுதலும் இல்லை'னு மக்கள் பெருமைப்படும்விதமா, எங்களோட செயல்பாடுகள் இனி ஆக்கபூர்வமானதாக மட்டுமே இருக்கும்" என்று கூறினார்.