Published:Updated:

மதுரை : கர்ப்பிணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

கர்ப்பிணி
கர்ப்பிணி

கர்ப்பிணி பெண்களில் யார் தொற்றுக்கு ஆட்படுவார்கள்? அல்லது பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்? என்பதை கணிப்பது கடினம். அதனால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

`` கொரோனா பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் நலன் குறித்தும், அவர்கள் மீது தனி கவனம் செலுத்தவும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்ப்பிணி -Representational Image
கர்ப்பிணி -Representational Image

இதுபற்றி அவரிடம் பேசினோம், ``தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி, கொரோனா மூன்றாம் அலை மக்களை பெருமளவில் தாக்காமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நாடு நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், கர்ப்பிணி பெண்களின் நலன் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே தனி கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள்.

கர்ப்பிணி பெண்களில் யார் தொற்றுக்கு ஆட்படுவார்கள்? அல்லது பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்? என்பதை கணிப்பது கடினம். அதனால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தற்போது நம்மிடம் உள்ள தடுப்பூசிகள், கர்ப்பிணி பெண்களில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான தெளிவான வரையறை இதுவரை நம்மிடம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது பாதுக்காப்பானது என சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.

வாய்ப்பு இருந்தால் MRNA வகையை சேர்ந்த ஃபைசர் தடுப்பூசிகளை பெற்று கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஃபைசர் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு பாதுகப்பானது என பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கர்ப்பிணிகள் அரசாங்கத்தில் பதிவு செய்கின்றனர். அவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

எனவே முதல் மூன்று மாதங்களிலயே அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முயலலாம். முதல் மூன்று மாதங்களைக் கடந்தும் தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவது கட்டாயம். FOGSI மற்றும் FIGO போன்ற அமைப்புகள் கர்ப்பிணிகளின் தடுப்பூசிகள் குறித்து கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கின்றன.

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செப்டம்பர் மாத மத்தியில் மூன்றாம் அலை தாக்கும் என்று எச்சரித்திருக்கும் சூழலில், கர்ப்பிணிகள் மீது அதிக கவனம் செலுத்துவது முக்கியம். கர்ப்பிணியோடு கருவிலிருக்கும் சிசுவிற்கும் பாதுகாப்பு அளிப்பது முக்கியமாகும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போல, கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆதலால் உடனடியாக தமிழகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை அனுப்பித்தந்திட வேண்டும் என்று, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளேன் " என்றார்.

அடுத்த கட்டுரைக்கு