Published:Updated:

T23 புலியைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடக்கும் மசினகுடியில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்காதது ஏன்?

மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி வரும் காயம்பட்ட ஆண் புலியை மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்துறை தேடிவரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவருவது ஆபத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக காட்டைவிட்டு வெளியேறி, கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கிவரும் T23 என்ற ஆண்‌ புலியைப் பிடிக்க, மசினகுடி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்பநாய்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், மூன்று கால்நடை மருத்துவர்கள், தமிழக வனத்துறை, கேரள வனத்துறை எனப் பெரும் படையாக மொத்தம் 300 பேர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

மசினகுடி
மசினகுடி

இந்தத் தேடுதல் வேட்டைக்கு ஒத்துழைக்கும்விதமாகவும், அடுத்ததாக அந்தப் புலி யாரையும் தாக்காமல் இருக்கவும், இரவு நேரத்தில் மசினகுடி மக்கள் வெளியில் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் மசினகுடி மக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், மறுபுறம் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்டுவருவது ஆபத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

ஆபரேஷன் 'T23': எட்டிப்பார்க்காத வனத்துறை அமைச்சர்; கொதிக்கும் நீலகிரி மக்கள்!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஊட்டி ஜனார்த்தனன், ``மசினகுடி பகுதியில் உலவிவரும் அந்தப் புலி, அடுத்து யாரைத் தாக்குமோ என்ற அச்சத்துடன் மக்களும் வனத்துறையினரும் இருக்கின்றனர். அதேநேரம், சுற்றுலாவுக்குத் தடை அறிவிக்கப்படாததால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் படையெடுத்துவருகின்றனர். இன்னும் சில சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோதமாக தனியார் ஜீப்பில் சஃபாரி செல்கின்றனர். காட்டை ஒட்டிய ரிசார்ட்டிலும் பயணிகளைத் தங்கவைத்துவருகின்றனர். இதனால் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புலியைப் பிடிக்கும் வரை முதுமலையில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.

மசினகுடி
மசினகுடி

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கொரோனாவால ஏற்கெனவே பல மாசமா சுற்றுலாவுக்குத் தடை இருந்தது. கால்நடைகளையும் உறவுகளையும் பறிகொடுத்த இந்த மக்கள், வனத்துறைமீது கடுமையான கோபத்துல இருக்காங்க. இப்படிப்பட்ட சூழல்ல சுற்றுலாவைத் தடை செஞ்சா, மக்களின் கோபம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கு. அதனாலதான் தடை விதிக்காமல் இருக்கோம்" என்றார்.

நிலைமை இப்படியிருக்க, ``புலியைச் சுட்டுப்பிடிக்க எந்தத் திட்டமும் இல்லை. உயிருடன் பிடிக்கவே முயன்றுவருகிறோம்” என வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு