Published:Updated:

ஊரடங்கு துயரங்கள்! - கிழிந்து தொங்கும் தையல் கலைஞர்களின் வாழ்க்கை!

தையல் கலைஞர்
பிரீமியம் ஸ்டோரி
தையல் கலைஞர்

‘‘கடைகளைத் திறந்துவிட்டோம். ஆனால், ஊரடங்குக்கு முன்பாக வந்த துணிகளைத் தைத்து ரெடியாக வைத்திருந்தும், அதை வாங்கிச் செல்ல உரியவர்கள் வரவில்லை

ஊரடங்கு துயரங்கள்! - கிழிந்து தொங்கும் தையல் கலைஞர்களின் வாழ்க்கை!

‘‘கடைகளைத் திறந்துவிட்டோம். ஆனால், ஊரடங்குக்கு முன்பாக வந்த துணிகளைத் தைத்து ரெடியாக வைத்திருந்தும், அதை வாங்கிச் செல்ல உரியவர்கள் வரவில்லை

Published:Updated:
தையல் கலைஞர்
பிரீமியம் ஸ்டோரி
தையல் கலைஞர்

‘மனிதனை தையல்காரன்தான் தயாரிக்கிறான்!’ என்கிறது இங்கிலாந்துப் பழமொழி. அப்படிப்பட்ட தையல் கலைஞர்கள் வாழ்க்கையைக் கிழிந்துபோகச் செய்திருக்கிறது இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலம்!

தமிழ்நாட்டில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில், ஒன்றிரண்டு மெஷின்களுடன் கூலிக்கு ஆள்வைத்து தையல் கடை நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு தையல் மெஷினை மட்டுமே நம்பிப் பிழைப்பவர்கள் அதிகம். கடை என்றுகூடச் சொல்ல முடியாத அளவுக்கு, ஒரு நாற்காலியும் ஒரு மெஷினும் மட்டுமே வைக்கக்கூடிய அளவுக்கான கடைகள் ஏராளம் உண்டு. ஏராளமான பெண்கள் வீட்டில் இருந்தவாறு தையல் தொழில் செய்கிறார்கள். அவர்களில், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள் போன்ற துயர வாழ்க்கை வாழ்பவர்கள் அதிகம். ஒரே ஒரு தையல் இயந்திரத்தின் மூலம், தங்கள் வாழ்க்கையையே முன்னேற்றிக்கொண்ட தையல் கலைஞர்களும் ஏராளம்.

எம்.ஐடா ஹெலன்,  கோவிந்தசாமி
எம்.ஐடா ஹெலன், கோவிந்தசாமி

ஆயத்த ஆடைகளை வாங்கி உடுத்தும் கலாசாரம் தலையெடுத்ததற்குப் பின்னால், பாரம்பர்ய தையல் தொழிலாளர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியது. அதேசமயம், தையல் கடையில் கொடுத்து தன் விருப்பப்படி தைத்து ஆடைகளை அணியும் மனநிலைகொண்ட சொற்பமான ஆட்களால்தான் இந்தத் தொழில் கொஞ்சமேனும் இன்னும் உயிர்த்திருக்கிறது. சிறிய கடைகள் வைத்திருந்த பலரும், ஒற்றைத் தையல் இயந்திரத்துடன் வீதி வீதியாகச் சென்று கிழிந்த ஆடைகளை தைத்துக்கொடுக்கும் தொழிலாளர்களாக மாறி உழைத்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கொரோனா பெருந்தொற்று பல தையல் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கியிருக்கிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டெல்லாவுக்கு 35 வயது. 15 வயதில் ஒரு மாற்றுத்திறனாளி மகன், 10 வயதில் ஒரு மகள். கணவர் காலமாகிவிட, தனிமரமான ஸ்டெல்லாவுக்கு எத்தனையோ துயரங்கள், சோதனைகள். ஆனாலும், இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது தையல் தொழில்தான். வீட்டிலேயே தையல் தொழிலை நடத்திவந்த ஸ்டெல்லாவுக்கு, மற்றொரு சோதனையாக கொரோனா ஊரடங்கு வந்தது. இப்போது துளி வருமானமின்றி தவித்துவருகிறார். இது போன்ற துயரக் கதைகளுக்குத் தமிழகத்தில் இப்போது பஞ்சமே இல்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், தொழில் மீண்டுவருகிறதா என்று சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தையல் தொழிலாளியான கோவிந்தசாமியிடம் கேட்டோம். ‘‘கடைகளைத் திறந்துவிட்டோம். ஆனால், ஊரடங்குக்கு முன்பாக வந்த துணிகளைத் தைத்து ரெடியாக வைத்திருந்தும், அதை வாங்கிச் செல்ல உரியவர்கள் வரவில்லை. எங்களுக்கு வருமானமும் இல்லை. திருமண நிகழ்ச்சிகள், காதணி விழாக்கள், கிரகப்பிரவேசம், கோயில் திருவிழாக்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள், பள்ளிகள் திறப்பு போன்ற நேரங்களில்தான் எங்களுக்கு வருமானம். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் இல்லை. இந்தச் சூழலில், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். நிறைய பேர் கடைகளை மூடிவிட்டார்கள். பலர் வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள். பெண் தையல் தொழிலாளர்கள் நிறைய பேர் மருத்துவமனைகளில் துப்புரவுப் பணியாளர் வேலையில் சேர்ந்து விட்டார்கள். பலர் தெருவோரத்தில் இட்லிக்கடை, சூப் கடை என ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்றார் வேதனையுடன்.

வாழ்வாதாரம் இழந்த தையல் தொழிலாளர்களுக்கு, அரசு உதவிகள் செய்திருக்க வேண்டும். ‘அரசு உதவி கிடைத்ததா?’ என்ற கேள்வியைத் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ) மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ஐடா ஹெலன் முன்பாக வைத்தோம். ‘‘கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, தையல் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், விண்ணப்பித்த பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. அதற்காக, சென்னையில் நல வாரிய அலுவலகம் முன்பாக மூன்று முறை ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனாலும், ஒரு பலனும் இல்லை.

ஊரடங்கு துயரங்கள்! - கிழிந்து தொங்கும் தையல் கலைஞர்களின் வாழ்க்கை!

கோடிக்கணக்கில் முதலீடு செய்து, ரெடிமேட் துணிகளைத் தைக்கும் தொழிலதிபர்களுக்குப் பிரச்னை இல்லை. சிறிய கடைக்காரர்களின் வாழ்க்கைதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் ஏராளமான சிறிய தையல் கடைகள் மூடப்பட்டன. எங்களைப் பாதுகாக்க அரசு உதவி செய்யவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்டுவந்த மின் கட்டண சலுகையைக்கூட நிறுத்திவிட்டார்கள். கடை வாடகை, வீட்டு வாடகை கொடுக்கக்கூட முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, கொரோனாவால் நலிவுற்றிருக்கும் தையல் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களின் முக்கியக் கோரிக்கை. பாதிப்புகளிலிருந்து மீண்டுவர எங்களுக்கு வட்டியில்லா வங்கிக் கடன் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றுக்கு இருப்பதுபோல, தையல் தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள். மனிதர்களுக்கு கம்பீரமூட்டும் ஆடைகளைத் தைப்பவர்களின் வாழ்க்கை இவ்வளவு நைந்துபோயிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிஜம். தங்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்தக் கலைஞர்கள்!

ஊரடங்கு துயரங்கள்! - கிழிந்து தொங்கும் தையல் கலைஞர்களின் வாழ்க்கை!

ரியாக்‌ஷன்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களின் துயரங்கள் குறித்து, ‘‘தவணைகட்ட முடியல... தற்கொலைக்கு தள்ளப்பட்டோம்!’’ என்ற தலைப்பில் 14.07.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதை முன்னிட்டு, தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக’ அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism