தாஜ்மஹால் விரைவில் `ராம் மஹால்’ எனப் பெயர் மாற்றப்படும் - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயில் இருந்தது. முஸ்லிம் படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் என பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைக் கருத்து.
இந்தியாவின் வரலாற்று நினைவுச்சின்னமான ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், விரைவில் `ராம் மஹால்’ என்று பெயர் மாற்றப்படும் என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் சுரேந்தர் சிங். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர்.
இவர் கடந்த சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ``இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், உலக அதிசயங்களில் ஒன்றான டெல்லி, ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் விரைவில் `ராம் மஹால்’ எனப் பெயர் மாற்றி அறிவிக்கப்படும். ஏனெனில், தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயில் இருந்தது. முஸ்லிம் படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியிருக்கிறார்கள்” என்றார்.

மேலும்,`` யோகி ஆதித்யாத் சிவாஜியின் வாரிசு. அவரின் ஆட்சியிலேயே தாஜ்மஹால், ராம் மஹால் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும், சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசத்தில் உள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடம் இளம்பெண் ஒருவர் ஹத்ராசில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது, ``பெண்கள் சம்ஸ்கிருதம் கற்றால் இது போன்ற பாலியல் வன்கொடுமை நிகழாமல் தடுக்கலாம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இப்போது தாஜ்மஹால் பற்றி அவர் கூறிய சர்ச்சைக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துவருகிறது.