Published:Updated:

தாலிபன் ஆட்சி எனும் நரகம்... கொடூரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. காபூல், ஹெராட், மஸர் இ ஷரீஃப் உள்ளிட்ட வர்த்தக நகரங்கள் ஸ்தம்பித்துப்போயுள்ளன.

தாலிபன் ஆட்சி எனும் நரகம்... கொடூரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. காபூல், ஹெராட், மஸர் இ ஷரீஃப் உள்ளிட்ட வர்த்தக நகரங்கள் ஸ்தம்பித்துப்போயுள்ளன.

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

தாலிபன்களின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள், கடும் வறட்சி, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி, கொரோனா பெருந்தொற்று எனப் பல்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இதுவரை சந்தித்திராத ஒரு மனித அவலத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்துக்கொண்டிருக்கிறது!

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு செய்தியும் நம்மைப் பதைபதைக்கச் செய்கிறது. மூன்றே முக்கால் கோடி மக்கள்தொகை கொண்ட ஆப்கானிஸ்தானில், பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. அங்கு, லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் பரிதவிக்கிறார்கள். போதுமான உணவுப்பொருள்கள் இல்லாததால், 98 சதவிகித மக்கள் மிகக் குறைந்த அளவு உணவை உட்கொண்டு உயிர்பிழைத்துவருகிறார்கள் என்று ‘உலக உணவுத் திட்டம்’ என்ற தன்னார்வ அமைப்பு கூறுகிறது. தாலிபன்களின் ஆட்சியில் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள் பலவும் இந்த அவலநிலை குறித்துக் கவலை தெரிவித்துவருகின்றன.

தன் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை என்பதால், தலைநகர் காபூலில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளை வீதியில் விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதே காபூலில், ‘வாங்கிய கடனை மரியாதையாகத் திருப்பிக்கொடு. இல்லையேல் உன் வீட்டையே கொளுத்திவிடுவேன்’ என்று மிரட்டிய நபரிடம், ‘என்னிடம் பணம் எதுவுமில்லை. கடனுக்கு பதிலாக என் மகளை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தன் 7 வயது மகளை அனுப்பிவைத்திருக்கிறார் ஒரு கடனாளித் தந்தை. இதுபோல பல ஜீரணிக்க முடியாத சம்பவங்கள் ஆப்கன் மக்களின் வறுமையை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

தாலிபன் ஆட்சி எனும் நரகம்... கொடூரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மக்கள்!

‘அமெரிக்காவும் தாலிபனும்தான் காரணம்!’

ஆசிரியர்களாகப் பணியாற்றிய பலர் தற்போது துப்புரவுப் பணியாளர்களாகவும், தினக்கூலித் தொழிலாளிகளாகவும் மாறியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் பலர் வீதிகளில் பிச்சையெடுக் கிறார்கள். கிராமப்புற மக்கள் உணவுப்பொருள்கள் வாங்குவதற்காகச் சொத்துகளையெல்லாம் விற்கிறார்கள். குழந்தைகள் விற்பனையும், உடல் உறுப்புகள் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. ‘ஆப்கானிஸ்தானின் இந்த நிலைக்குக் காரணம் அமெரிக்காவும் தாலிபனும்தான்’ என்று சாடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா, கடந்த ஆண்டு அந்நாட்டிலிருந்து திடீரென வெளியேறியது. தற்போது, ஆப்கானிஸ்தான்மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதுடன், ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வங்கியின் 9.5 பில்லியன் அமெரிக்க டாலரை முடக்கிவைத்திருக்கிறது அமெரிக்கா. இதனால், ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நொறுங்கிப்போய், அந்த தேசம் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. காபூல், ஹெராட், மஸர் இ ஷரீஃப் உள்ளிட்ட வர்த்தக நகரங்கள் ஸ்தம்பித்துப்போயுள்ளன. அங்குள்ள வர்த்தகர்களால் சர்வதேச அளவில் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. இதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டு மக்கள் தங்கள் சேமிப்புகளை வங்கிக் கணக்கில் வைத்திருப்பது வழக்கம். ஆனால், மக்களின் வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கிவைக்கப் பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் 70 லட்சம் பேர் முதல் 90 லட்சம் பேர் வரை அங்கு வேலையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ கூறுகிறது.

காபூலைக் கைப்பற்றியபோது ``நாங்கள் மக்கள் சேவகர்கள், யாரையும் கொல்ல மாட்டோம். ஆப்கன் மக்களுக்கு அமைதியான ஆட்சியைத் தருவோம்’’ என்ற தாலிபன்கள், ஆட்சி அதிகாரம் முழுவதுமாகக் கைக்கு வந்ததும் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இசை மற்றும் திரைப்படங்களுக்குத் தடைவிதித்தார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தார்கள். `விளம்பரங்களில் பெண்கள் தலைகாட்டக் கூடாது’ என்றார்கள். பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டுதான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும். ஆண்களின் அனுமதி இல்லாமல் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே செல்லக் கூடாது. தெருக்களில் தனியாகப் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் மூடப்பட்டன. பெண்கள் அமைச்சகம் மூடப்பட்டது. இப்படியான அடக்குமுறைகளால் பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்கள். ‘ஆப்கனை ஒரு நரகமாக மாற்றிவைத்திருக்கிறது தாலிபன்’ என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

தாலிபன் ஆட்சி எனும் நரகம்... கொடூரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் மக்கள்!

அமெரிக்கா மற்றும் தாலிபன்களுடன் சேர்ந்து இயற்கையும் அந்த மக்களை வதைத்துவருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வறட்சி அங்கு நிலவுகிறது. கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் ஆபத்தான சூழலில் இருக்கிறார்கள். குடிநீர், ஊட்டச்சத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பான இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் போதுமான அளவுக்கு இல்லாமல் குழந்தைகள் தவிக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு அபாயக் கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. போலியோ, தட்டம்மை போன்ற தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்களும், ஊடகத்தினரும் ஆப்கனின் நிலை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து, கவலை தெரிவித்துவருகின்றனர்.

இப்படியான சூழலில், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கும் தாலிபன்கள், அமெரிக்காவுக்குக் கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதிக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மக்களோ செய்வதறியாது திகைத்துப்போயிருக்கிறார்கள். மத அடிப்படைவாதிகளிடம் சிக்கிய தேசத்தின் மக்கள், என்ன கதிக்கு ஆளாவார்கள் என்பதற்கு ஆப்கானிஸ்தான் ஒரு பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism