Published:Updated:

“ஊழல் குற்றத்தையும் இனப்படுகொலையையும் ஒரே தராசில் வைக்க முடியாது!”

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

தமிழ் மக்களை அழிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அவர்களின் அடையாளத்தை நீக்குவதற்கும் செய்த, செய்துவருகிற ராணுவச் செலவினம் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியதொரு காரணியாகும்.

“ஊழல் குற்றத்தையும் இனப்படுகொலையையும் ஒரே தராசில் வைக்க முடியாது!”

தமிழ் மக்களை அழிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அவர்களின் அடையாளத்தை நீக்குவதற்கும் செய்த, செய்துவருகிற ராணுவச் செலவினம் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியதொரு காரணியாகும்.

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் போராட்டம் 100 நாள்களை எட்டித் தொடர்கிறது. நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கிறார், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே. இச்சூழலில் `போர்க்குற்றவாளியான கோத்தபயவை ஓட ஓட விரட்டுவோம்... நீதியின் முன் நிறுத்துவோம்...' என்ற முழக்கத்தோடு தமிழர் வாழும் நாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இதுகுறித்தும், இலங்கைச் சூழல் குறித்தும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரனிடம் இணையவழியில் உரையாடினேன்.

விசுவநாதன் உருத்திரகுமாரன்
விசுவநாதன் உருத்திரகுமாரன்

‘‘இலங்கையின் தற்போதைய மக்கள் தன்னெழுச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘சிங்கள மக்கள் சிங்கக் கொடியின் கீழ் ‘அறகள' என்ற முழக்கத்துடன் மேற்கொள்கிற கிளர்ச்சியைக் கூர்ந்து கவனித்துவருகிறோம். ஆட்சியாளர்களின் ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்ற விடயங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி கிளர்ச்சியாளர்கள் போராடுகிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியோ, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் பற்றியோ கிளர்ச்சியாளர்கள் எங்கும் பேசவில்லை.

தமிழ் மக்களை அழிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் அவர்களின் அடையாளத்தை நீக்குவதற்கும் செய்த, செய்துவருகிற ராணுவச் செலவினம் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியதொரு காரணியாகும். போர் முடிந்த பின்னர்கூட இலங்கையின் ராணுவச் செலவு, போர்க்காலத்தைவிட அதிகரித்தே உள்ளது. இலங்கைக் கடற்படை 38,000 வீரர்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையைவிட 64 மடங்கு அதிக சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 67,228 கடற்படை வீரர்களே உள்ளனர். இலங்கையின் அதிகரித்த ராணுவச் செலவினங்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் உள்ள தொடர்பை அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியன சுட்டிக்காட்டியுள்ளன. கூடவே சீனாவின் பாரிய கடன் பொறிக்குள் இலங்கை தன்னை அடகு வைத்தமையையும் காண்கின்றோம்.’’

‘‘கொழும்பை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்துகின்றன. வடக்கு கிழக்கின் பாதிப்புகள் பெரிதாகப் பேசப்படவில்லை. அப்பகுதிகளோடு தொடர்பில் இருக்கிறீர்களா?’’

‘‘தமிழர்கள் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இருட்டிப்பு செய்யப்படுவது இது முதல் தடவை அல்ல. 2009-ம் ஆண்டு 4 லட்சம் மக்கள் உணவின்றி, இருக்க இடமின்றி, மருந்தின்றி, பாதுகாப்பு தேடித் தேடி ஓடித்திரிந்தமையும் சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இலங்கை அரசாங்கத்தால் எமது அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாங்கள் மாற்று வழிகளில் எமது மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம். இலங்கைக்கான எந்தவொரு நாட்டின் உதவியும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்று இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம்.’’

“ஊழல் குற்றத்தையும் இனப்படுகொலையையும் ஒரே தராசில் வைக்க முடியாது!”

‘‘கோத்தபய மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?’’

‘‘சர்வதேச நாடுகள் ராஜபக்சே சகோதரர்களை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக உலகளாவிய நியாயத்தின்படி தங்கள் நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டும் எனக் கோருகிறோம். 2015-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர்கள், இலங்கை தொடர்பான தங்களுடைய தொடர்ச்சியான அறிக்கைகளில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இதனை சிங்கப்பூரிடமும் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.’’

‘‘இலங்கையை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் என்று யாரையெல்லாம் குற்றம் சாட்டுகிறீர்கள்?’’

‘‘இலங்கைத்தீவு முழுவதுமே சிங்களர்களுக்கு என்ற மனநிலையில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதமும், அதன் கட்டியெழுப்பப்பட்ட ராணுவச் செலவினங்களும், கூடவே ராஜபக்சே தரப்பினரின் ஊழலும், அவர்களது ஆட்சித்திறமையின்மையுமே இலங்கையை இந்த நிலைமைக்குத் தள்ளியுள்ளன. ராஜபக்சே சகோதரர்களை சிங்கள மக்களே கடுமையாக எதிர்க்கிறார்கள். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்ற சிலப்பதிகார வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால், சிங்கள மக்கள் ராஜபக்சேக்களை எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறு, தமிழ் மக்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறு. ஊழல் குற்றத்தையும், இனப்படுகொலைக் குற்றத்தையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்துவிட முடியாது. இந்த வேற்றுமையை சர்வதேச ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ முக்கியப்படுத்தவில்லை.’’

‘‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன?’’

‘‘தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு சுதந்திர தேசமே தீர்வு என்ற கருத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு எங்களுக்கு இருக்கிறது. இலங்கை அரசே அச்சப்படுகின்ற தமிழர்களுக்கான ஓர் அரசியல் வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இனப்படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்ற உலகளாவிய கருத்துருவாக்கத்தினை உருவாக்கியதில் எங்களுக்குப் பெரும் பங்குண்டு. 2015-ல் ஐ.நா நோக்கி இக்கோரிக்கையை முன்வைத்து நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 1.6 மில்லியன் மக்கள் ஒப்பமிட்டிருந்தனர். பொது வாக்கெடுப்பு ஒன்று தமிழர்களிடத்தில் நடத்தப்படவேண்டும் என 2012-ம் ஆண்டிலிருந்தே வலியுறுத்திவருகிறோம். இந்நிலைப்பாடும் தற்போது ஓர் உலகளாவிய கருத்தாகப் பரிணமித்துவருகிறது.’’

‘‘இலங்கையில் தற்போதுள்ள நிலையைத் தமிழர்கள் எப்படிக் கையாள வேண்டும்?’’

‘‘இலங்கையைப் போலவே 1998-ல் இந்தோனேசியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையின் ஜனாதிபதி பதவி துறந்தது போன்று இந்தோனேசியாவிலும் நிகழ்ந்தது. இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவிக்கு வருவது போன்று, இந்தோனேசியாவிலும் புதிய ஜனாதிபதி வந்திருந்தார். அவர் இந்தோனேசியாவை மறுசீரமைப்பு செய்து, நாட்டின் ஓர் அங்கமாக இருந்த கிழக்கு தீமோரின் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதையே நாமும் வலியுறுத்துகிறோம். ஆயினும் இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனநாயகம் இதற்கு சம்மதிக்காது.

சர்வதேசப் பார்வை இலங்கை நோக்கித் திரும்பியிருப்பதால் சர்வதேசத் தளத்தில் பொது வாக்கெடுப்புக்கான ஆதரவைத் திரட்ட இருக்கின்றோம். இனப்படுகொலையாளியும், அமெரிக்காவால் பயணத்தடைக்கு உள்ளாகியிருப்பவருமான சர்வேந்திர டி சில்வா, இப்போது இலங்கை அரசியலில் முக்கிய ஒருவராகக் காணப்படுகின்றார். இந்தச் சூழலில் உள்நாட்டுரீதியாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்போ வெளியோ இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.’’

“ஊழல் குற்றத்தையும் இனப்படுகொலையையும் ஒரே தராசில் வைக்க முடியாது!”

‘‘இந்தியாவின் செயல்பாடு, பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக, `இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவில் வட-கிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும். அதற்கு முதல்படியாக அங்கிருந்து ராணுவ வெளியேற்றத்துக்கான அழுத்தத்தையும் செயற்பாட்டையும் இந்தியா முன்னெடுக்க வேண்டும்.’’

‘‘அதிபர் தேர்தலில் ரணிலை கோத்தபய முன்னிறுத்துகின்றார். சஜித் பிரேமதாச, குமார திசநாயகே, சரத் பொன்சேகா என பலரும் அப்பதவியைக் குறிவைக்கின்றார்கள். இலங்கையின் மீட்புக்கு யார் அதிபராக வரவேண்டும்?’’

‘‘எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய நிலைமைக்குத் தனிமனிதர்கள் காரணிகள் அல்ல. இலங்கையில் புரையோடிப்போயுள்ள சிங்களப் பேரினவாதமே காரணம். அதனால் ஆளை மாற்றுதல், ஆட்சி மாறுதல் தீர்வைத் தரும் எனக் கருதவில்லை. ஐ.நா முன்னாள் பொதுச்செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அறிக்கையிலும் இது அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.’’

‘‘அண்மையில் சென்னையில் நடந்த உங்கள் கூட்டத்தைத் தடுத்தி நிறுத்தி, பங்கேற்றவர்களைக் கைதும் செய்துள்ளதே காவல்துறை?’’

‘‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைக்கெதிராக நாங்கள் இந்திய நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்போது, இந்திய அரசாங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயல்பாடுகளுக்கோ எந்தவிதமான தடையும் இல்லை' என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பின்னணியில் இந்தக்கூட்டம் நிறுத்தப்பட்டது, எமக்கு இன்றுவரை பெரும் புதிராகவே உள்ளது.’’