Published:Updated:

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!
பிரீமியம் ஸ்டோரி
புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

தனித் தீவுகளான கிராமங்கள்... தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

தனித் தீவுகளான கிராமங்கள்... தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

Published:Updated:
புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!
பிரீமியம் ஸ்டோரி
புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!
அதிக சேதங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்ட ‘நிவர்’ புயல், ஆர்ப்பாட்டமில்லாமல் கடந்ததில் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தமிழகத்தை, வெள்ளக்காடாக மாற்றி மிதக்கவிட்டிருக்கிறது ‘புரெவி’ புயல்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந் திருப்பதன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல், டிசம்பர் 1-ம் தேதி இரவு இலங்கையில் கரையைக் கடந்தது. ஆனாலும், முழுவதுமாக வலுவிழக்காமல் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டதால், தமிழகத்தில் எதிர்பாராத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சுமார் 30 மணி நேரம் அதே இடத்தில் நங்கூரமிட்டு, டெல்டா மாவட்டங்களை வெள்ளத்தில் தத்தளிக்கவைத்திருக்கிறது புரெவி.

பத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களையும், பல கால்நடைகளையும் பலிகொண்டு, லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை, மரங்களை, பொதுச் சொத்துகளையும் சிதைத்து கோரத் தாண்டவம் ஆடிச் சென்றிருக்கிறது புரெவி.

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

கடலூர்: டிசம்பர் 1-ம் தேதி தொடங்கிய மழை, 5-ம் தேதி நள்ளிரவு வரை நீடித்ததன் காரணமாக, கடலூர் மாவட்டத்திலுள்ள 218 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி வழிந்தன. பெரிய ஏரிகளான வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்டவை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதன் காரணமாக, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து தனித்தனித் தீவுகளாகின. 16 கிலோமீட்டர் நீளத்தைக்கொண்ட பெருமாள் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை எட்டியதால் 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 70,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு, 382 பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்த மாவட்ட நிர்வாகம், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் மின் மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வடியவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனாலும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால், கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், கடலூர்-சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்புப் படகு மூலம் மீட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்தது மாவட்ட நிர்வாகம்.

கடைமடைப் பகுதியான சிதம்பரத்தில், டிசம்பர் 4-ம் தேதி மட்டும் 34 செ.மீ மழை பதிவானது. அதனால் அண்ணாமலை நகர், எம்.ஜி.ஆர் நகர், தேவதாஸ் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகர்கள் வெள்ளக்காடாக மாறின. நடராஜர் கோயிலுக்குள் சித்சபை, உள் பிராகாரம், வெளி பிராகாரங்களில் மூன்றடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்து, சிவகங்கைத் தீர்த்தம் நிரம்பி வழிந்தது.

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்ததால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு இருண்டுகிடந்தது. இந்தநிலையில், ‘புரெவி’ புயலும் சேர்ந்து புரட்டியெடுத்ததால் நொந்துபோயிருக்கிறார்கள் மக்கள். தாழ்வான பகுதிகளிலிருக்கும் சுமார் 8,000 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திராகாந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், புஸ்ஸி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட இடங்களில் இரண்டடிக்கு மேல் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால், வாகனங்கள் நீந்தியே செல்கின்றன. நீர்வழிப் பாதைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியிருப்பதால்தான், கடல் அருகிலேயே இருந்தும் மழைநீர் இன்னும் வடியாமல் புதுச்சேரி தத்தளிக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள் பொதுமக்கள்.

விழுப்புரம்: விழுப்புரத்தின் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி என அனைத்தும் ஏரிகளைக் கூறுபோட்டே கட்டப்பட்டிருப்பதால், எப்போது கனமழை பெய்தாலும் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் ஸ்தம்பித்துவிடும். தற்போதும் அதுதான் நடந்திருக்கிறது. கணபதிப்பட்டி, அக்னிகுப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. மற்றொருபக்கம் நற்செய்தியாக, விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அணையான வீடூர் அணை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதால், அந்நீரைப் பயன்படுத்தும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தஞ்சாவூர்: 2018-ல் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே இன்னமும் முழுமையாக மீளாமல் இருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்ட மக்கள். ‘நிவர்’ புயலில் தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருந்த அவர்களை, நிலைகுலையவைத்திருக்கிறது ‘புரெவி.’ மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. வீடு இடிந்து விழுந்ததில் கும்பகோணத்தைச் சேர்ந்த வயதான தம்பதியர் குப்புசாமி - யசோதா, தஞ்சாவூரைச் சேர்ந்த மூதாட்டி சாரதாம்பாள் ஆகிய மூவர் உயிரிழந்தார்கள். நெல், வாழை, கரும்பு என மொத்தம் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.

நாகை - மயிலாடுதுறை: ‘‘வெள்ள பாதிப்பில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒருவரும், திருமருகல் அருகே ஒரு பெண்மணியும் உயிரிழந்திருக்கிறார்கள். 321 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 24 ஓட்டு வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. 42 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 1,26,986 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன’’ என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம், வேட்டங்குடி, கடவாசல், மகாராஜபுரம், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, திருக்கருகாவூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்த கனமழையால், சுமார் 15,000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம்: தென்மாவட்ட கடலோரப் பகுதிகளை மிரட்டிவந்த ‘புரெவி’ புயல் வலுவிழந்து கரை கடந்ததால், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரத் தென்மாவட்டங்கள் பெரும் சேதத்திலிருந்து தப்பின. பலத்த காற்று மற்றும் தொடர்மழையால் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சில படகுகள் சேதமடைந்தன. தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் கடல் சீற்றத்தால் தடுப்புச் சுவர்கள் மற்றும் போலீஸ் புறக்காவல் கட்டடம் சேதமடைந்தன. தனுஷ்கோடி சாலையின் தடுப்புச் சுவர், புறக்காவல் நிலைய கட்டடம், பழைய புயலின் சாட்சியான சிதிலமடைந்த பழைமையான தேவாலயம் ஆகியவையும் கடல் சீற்றத்தால் சேதமடைந்தன. ராமநாதபுரத்தை அடுத்துள்ள நயினார்கோவில் பகுதியில், 40 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, வைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் பெருமளவில் மானாவாரிச் சாகுபடி நடந்துவருகிறது. ஆறு நாள்களாகப் பெய்த மழையால், பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மழைநீர் வெளியேறிச் செல்வதுடன், ஓடைகளிலும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால், சுமார் 80,000 ஏக்கரில் வளர்ந்த நிலையிலான பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் வேதனைக் குரலைக் காதுகொடுத்துக் கேட்க இயலவில்லை!

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகேயுள்ள புது கல்பாக்கம் மீனவர் பகுதியில், கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 150 மீட்டர் தூரத்துக்குக் கடல் முன்னோக்கி வந்தது. அதனால் உருவான ராட்சத அலை தாக்கியதில், கடலோரம் அமைக்கப்பட்டிருந்த இறால் பண்ணை பாதிக்கப்பட்டது. கடல் அரிப்பு ஏற்பட்டு இறால் குஞ்சு வளர்ப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டது. படகு, வலை, மோட்டார் உள்ளிட்ட மீன்பிடிச் சாதனங்களைப் பாதுகாப்பாகக் கரையில் வைப்பதற்கு இடமில்லாமல் மீனவர்கள் பரிதவித்தார்கள். ‘‘குடியிருப்புகளில் கடல்நீர் புகாதவாறு கற்களைக் கொட்டியும், தூண்டில் வளைவு அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவேயில்லை” என்று மீனவர்கள் வேதனை தெரிவித்தார்கள்.

செய்யூர் வட்டாரத்தில் ‘புரெவி’ புயலையொட்டி விடிய விடியப் பெய்த கனமழையால் ஆற்காடு, போரூர், சின்னகாயப்பாக்கம், வன்னியநல்லூர், கடுக்கலூர் ஆகிய பகுதிகளில் பல குடிசைகள் இடிந்து விழுந்தன.

திருவள்ளூர்: காற்றுடன் பெய்த கனமழையால், திருவாலங்காடு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஒரத்தூர், பெரிய களக்காட்டூர் பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு சின்னேரி நிரம்பியது. அதனால், ஏரியின் கரை உடைந்து மாநெல்லூர் ஊராட்சிப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பழவேற்காடு ஏரியின் வழியாக வெளியேறிய கடல்நீர், கள்ளூர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால், 300 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கும்மிடிப்பூண்டியை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை டி.ஆர்.பி.நகரில், கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக லாரி ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த லாரியின் ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கயிறு மூலமாகப் பொதுமக்கள் மீட்டார்கள்.

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்!

சென்னை: சென்னையில் கே.கே.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், தண்டையார்பேட்டை, கிண்டி, பெரம்பூர், புரசைவாக்கம், திருவொற்றியூர், ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பூந்தமல்லி, வானகரம், தாம்பரம், முடிச்சூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கோடம்பாக்கம், அண்ணாநகர், ஆலந்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. சென்னை நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மட்டுமல்லாமல், வெள்ளநீர் பிரச்னையால் சென்னையில் இரண்டு பெண்கள் விபத்துக்குள்ளாகி இறந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘கொரோனா’ தொடங்கி ‘புரெவி’ வரை இந்த ஆண்டு முழுவதுமே இயற்கையோடு நாம் போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். `இயற்கையின்மீது மனிதர்கள் நிகழ்த்திய வன்முறைக்குப் பழி தீர்க்கிறது’ என்கிறார்கள் சிலர். இயற்கை அவ்வளவு வன்மம் மிகுந்தது அல்ல. நாம், நம் கவனக்குறைவுகளை, தவறுகளை உணர்ந்து இயற்கையை இயல்புக்கு மீட்பதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்!

`தலைநகரான சென்னைக்கு ஓர் ஆபத்து என்றதும் பதறுகிற அரசு, அதேயளவு எச்சரிக்கையை, கவனத்தை, நிவாரணப் பணிகளை மற்ற மாவட்டங்களில் மேற்கொள்வதில்லை’ என்கிற குற்றச்சாட்டு பெருமளவில் உள்ளது. முதல்வரே உங்கள் முதன்மையான கவனத்தை ‘புரெவி’ பாதித்த பகுதிகளை நோக்கித் திருப்புங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism