அலசல்
Published:Updated:

விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!

மழை வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
News
மழை வெள்ளம்

வேலூர் மாவட்டத்தில், அக்டோபர் 1-ம்தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரையிலான 38 நாள்களில், மழைக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மட்டுமல்ல... தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளியே வர முடியாமலும், பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்தும் தவிக்கிறார்கள். ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். மழைக்கு நடுவே, தமிழகம் முழுவதும் ஜூ.வி குழு கள ஆய்வுக்குச் சென்று திரட்டிய லைவ் ரிப்போர்ட் இங்கே...

தூத்துக்குடி

நான்கு நாள்களாகப் பெய்த மழையில் எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. இந்தப் பகுதியில் வடிகால்கள், தரைப்பாலங்கள் இல்லாததால் தேங்கிய மழை நீரில் மக்காச்சோளம், பாசி, உளுந்து, கம்பு, பருத்திப் பயிர்கள் மிதக்கின்றன. ஏற்கெனவே இந்த ஆண்டு ரபி பருவத்தின் தொடக்கத்தில் விதைத்தபோதும் இதேபோல மழையால் பயிர்கள் அழிந்துபோயின. விவசாயிகளுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது அடி இது. “இருக்கன்குடி அணைக்கட்டு கால்வாய்களையும், தரைப்பாலத்தையும் சீரமைச்சா மட்டும்தான் இதுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். பலமுறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை” என்று கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!

திருநெல்வேலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் களக்காடு தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆட்டோவால் பாலத்தைக் கடக்க முடியாததால், பயணிகள் சிலர் இறங்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது ஸ்ரீலேகா என்ற கர்ப்பிணி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் நடந்திருக்கிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில், அக்டோபர் 1-ம்தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரையிலான 38 நாள்களில், மழைக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று கால்நடைகள் இறந்துள்ளன. 75 வீடுகள் சேதமடைந்துள்ளன. 27 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருப்பதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகாவில் தில்லையாடி, சேத்தூர், கீழ்மாத்தூர், திருவிடைக்கழி, நல்லாடை உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன. குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

புதுச்சேரி

புதுச்சேரியில் கிருஷ்ணா நகர், எழில் நகர், ரெயின்போ நகர், பாரதி நகர், சோலை நகர், குமரகுருபாளையம், வானரப்பேட்டை, சுதானா நகர், அரவிந்தர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 வீடுகளுக்கு மேல் மழைநீர் புகுந்துவிட்டது. நகரப் பகுதியில் பாரதி வீதி, மிஷன் வீதி, சின்ன சுப்பராயலு வீதி, நீடராஜப்பர் வீதி, அரவிந்தர் வீதி உள்ளிட்ட வீதிகளும் மிதக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணை திறந்துவிடப் பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணலிபட்டு, செட்டிப்பட்டு, கைக்கிளபட்டு, வம்புபட்டு வில்லியனூர் வழியாகச் செல்லும் சங்கராபரணி ஆற்றுக்கு அருகே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை ஏற்கெனவே உடைந்துள்ள நிலையில், தற்போதுவரை சரிசெய்யப்படாததால் தண்ணீர் வெளியேறிவருகிறது. இந்தத் தடுப்பணைக்கு முன்பாக அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழைமையான எல்லீஸ் சத்திரம் தடுப்பணையின் அடித்தளம் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. அங்கு 51 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 105 குடிசைகள், 12 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணைக்குப்பம், செவலப்புரை ஆகிய இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கிவிட்டன.

விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!

கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலையில் பெய்துவரும் தொடர்மழையால் அங்கு வசிக்கும் பழங்குடியினர் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். தொரடிப்பட்டு ஆற்றின் தரைப்பாலம் மூழ்கிவிட்டதால் ஆற்றை ஒட்டியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும், மருத்துவச் சேவைகளுக்கும் உயிரைப் பணயம் வைத்து இடுப்பளவு வெள்ள நீரில் கடந்து செல்கிறார்கள்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழையால் பெரியகுளம்-அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. முன்னதாக இந்தச் சாலையில் கார் கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அடுக்கம் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல், பூம்பாறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஆத்தூர் தாலுகா சித்தரேவு அருகே கருங்குளம் கண்மாய் நிரம்பி, ஷட்டர் உடைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறிய மழைநீர் விளைநிலங்களில் புகுந்ததால், பயிர்கள் மூழ்கியுள்ளன.

தேனி

வராக நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்த்த மதுரையைச் சேர்ந்த சுந்தரநாராயணன் (20), மணிகண்டன் (20) ஆகியோர் தவறி விழுந்து உயிரிழந்தனர். மூல வைகை, கொட்டக்குடி ஆறு, வராகநதி, முல்லைப்பெரியாறு, வரட்டாறு, சுருளியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வைகை அணையின் நீர்மட்டம் 67.63 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் மூன்றடி மட்டுமே இருக்கும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

தொடர் மழை காரணமாக காட்டேரி அணைப் பகுதியில் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் ராட்சதப் பாறைகள், மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளாக 84 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நாகப்பட்டினம்

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழைப் பொழிவு இருந்துவந்தது. கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால் கீழ்வேளூர் வட்டத்தில் வடக்குவெளி, கர்ணாவெளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.

கடலூர்

கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டத்திலிருக்கும் 97 ஏரிகளும் நிரம்பிவழிகின்றன. விருத்தாசலத்தை அடுத்த தே.பவழங்குடி மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்களுக்கு இடையே ஓடும் வெள்ளாறு கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெள்ளாற்று தடுப்பணையில் ஆபத்தை உணராமல் மார்பளவு தண்ணீரில் மக்கள் ஆற்றைக் கடக்கிறார்கள். விபரீதம் நடப்பதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் கட்டப்பட்டுவரும் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!

திருவாரூர்

கடந்த பத்து நாள்களாகப் பெய்த தொடர் கனமழையால் நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வடுவூர், நீடாமங்கலம், கோயில்வெண்ணி, கொராடாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. இதையடுத்து, ஏக்கருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தஞ்சாவூர்

அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணியின்போது, வடிகால் வாய்க்கால்கள் சேதமடைந்ததால், மழை நீர் வயல்களுக்குள் புகுந்து 100 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் மூழ்கிவிட்டன. பேராவூரணிப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் மழை பெய்வதால் பூக்கொல்லை, செல்வ விநாயகபுரம், சித்தாத்திக்காடு உள்ளிட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கிவிட்டன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை

நவம்பர் 6-ம் தேதி, விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது முஸ்தபா, சாப்டூர் கேணி அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்தப் பகுதியின் அருகிலேயே ராஜசேகர் என்பவர், நொண்டியாற்று ஓடையைக் கடந்து செல்ல முயன்றபோது, அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. அதேநாளில், திருப்பூரைச் சேர்ந்த விஸ்வநாதன், அருண்வசந்த் ஆகியோர் பரவைப் பாலத்தின் கீழே வைகை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இரண்டு நாள்களுக்கு மேலாக அவர்களின் உடல்களை மீட்புப் படையினர் தேடிவருகிறார்கள். வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மதுரை நகருக்குள் குருவிக்காரன் சாலையின் தற்காலிகத் தரைப்பாலம், யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியுள்ளன.

மிதக்கும் தமிழகத்தை மீட்க கரம் கோப்போம்!