Published:Updated:

தாயார் மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் அஞ்சலி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து கிளம்பி வந்து, தன் தாயாருக்கு கண்ணீரோடு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள்
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள்

தவுசாயம்மாள் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய கணவர் பெயர் கருப்பகவுண்டர். இவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ரஞ்சிதம் (எ) விஜயலட்சுமி என்கிற மகளும், கோவிந்தராஜ், பழனிசாமி என்ற மகன்களும் இருக்கிறார்கள். தவுசாயம்மாள் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சேலம் லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 12-ம் தேதி இரவு 12:10 மணிக்கு மரணமடைந்தார்.

இத்தகவல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இன்று நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, நள்ளிரவு 1:00 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் கிளம்பி விடியற்காலை 5:30 மணிக்கு வீட்டிற்கு வந்தார். கண்ணீரோடு தன் தாயார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த வி.ஐ.பிகளும், கட்சியினரும் வந்திருப்பதால் போலீஸ் பலபடுத்தப்பட்டுள்ளது.

'மேன் ஆஃப் தி சீரிஸ்' எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி

தவுசாயம்மாள் மூத்த மகள் விஜயலட்சுமி, மருமகன் ஈஸ்வரமூர்த்தி ஈரோட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஜோதி என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் இருக்கிறார்கள். தவுசாயம்மாள் மூத்த மகன் கோவிந்தராஜ் மருமகள் பானுமதி (உடல்நலக் குறைவால் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்). இவர்களுக்கு ரதிப்பிரியா என்ற மகளும், நவீன் என்ற மகனும் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தவுசாயம்மாளின் கடைக்குட்டி மகன் எடப்பாடி பழனிசாமி. மருமகள் ராதா. இவர்களுக்கு மிதுன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மனைவி வித்யா. தவுசாயம்மாள் மரணமடைந்ததை அடுத்து சொந்தங்கள் அனைவரும் சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் குழுமி இருக்கிறார்கள். தவுசாயம்மாளின் உடல் இன்று காலை 8:30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு