Published:Updated:

தமிழக மீனவர்கள் VS இலங்கைத் தமிழ் மீனவர்கள் - பின்னணியில் இலங்கை ராணுவமா?

அக்டோபர் 4-ம் தேதி தமிழக மீனவர் படகு ஒன்று தவறுதலாக இலங்கைத் தமிழ் மீனவர்களின் படகு ஒன்றில் மோதிவிட்டது.

பிரீமியம் ஸ்டோரி

இலங்கைக் கடற்படையால் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் இலங்கைக்கு ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரித்துவருகிறது. மறுபுறம் தனது கடற்படையைவைத்து தமிழக மீனவர்களைத் தாக்குவது, படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற அராஜகச் செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், இந்திய - இலங்கை கடல் எல்லையில் இலங்கை அரசு செய்துவரும் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் தடுக்காவிட்டால் பல்வேறு அபாயங் களைச் சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் மீனவப் பிரதிநிதிகள்!

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினத்திலிருந்து, 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்டோபர் 18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களின் ரோந்துக் கப்பல் மூலம் விசைப்படகை மோதி உடைத்திருக்கிறார்கள். படகு கவிழ்ந்து, அதில் இருந்த சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்திருக்கிறார்கள். அவர்களில் ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் அடுத்தநாள் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்குத் திருமணம் ஆகி 40 நாட்களே ஆகின்றன என்பதுதான் சோகம். மற்ற இருவரும் கடற்படையினரால் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதமும் இதே ஊரிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதில், நான்கு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதேபோல, ஆகஸ்ட் 2-ம் தேதி வேதாரண்யம் அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அதே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், அக்டோபர் 13-ம் தேதி, கோடியக்கரையின் தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைதுசெய்தது இலங்கை கடற்படை. இன்னும் அவர்களையே விடுவிக்கவில்லை. அதற்குள்ளாக, அடுத்த தாக்குதலில் இறங்கிவிட்டது இலங்கை கடற்படை.

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் இது குறித்து நம்மிடம் பேசினார்... ‘‘அக்டோபர் 4-ம் தேதி தமிழக மீனவர் படகு ஒன்று தவறுதலாக இலங்கைத் தமிழ் மீனவர்களின் படகு ஒன்றில் மோதிவிட்டது. அப்போது படகு உடைந்து அதில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்துவிட்டார்கள். நம் மீனவர்கள் உடனடியாகக் கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள். படகுக்கும் நஷ்டஈடு கொடுக்கிறோம் என உத்தரவாதம் அளித்தோம். அந்தச் சம்பவத்தின் பொருட்டு தார்மிக அடிப்படையில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில்கூட ஈடுபட்டோம். ஆனால், அந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு தற்போது கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நம் மீனவர் ஒருவரைக் கொலை செய்திருக்கிறது இலங்கை கடற்படை. இதற்கு முன்பாக நாகப்பட்டினத்தில் 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்ததும் இதனால்தான். தெரியாமல் நிகழ்ந்த ஒரு தவற்றுக்காகத் தொடர்ந்து தாக்குவது, படகுகளைப் பறிமுதல் செய்வது என்பது சரியல்ல.

என்.ஜே.போஸ் - ராம ஸ்ரீனிவாசன்
என்.ஜே.போஸ் - ராம ஸ்ரீனிவாசன்

அதுமட்டுமல்லாமல், இலங்கைத் தமிழ் மீனவர்களும் எங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவது வருத்தத்துக் குரிய விஷயம். ஒருகாலத்தில் கடலில் மாமன் - மச்சானாக இருந்த உறவுகள் இன்று பிரிந்து நிற்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்களும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக, வன்முறை என்பது தீர்வாகாது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்றார்.

இந்த நிலையில், ‘‘தமிழக மீனவர்களுக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பின்னால் இலங்கை அரசின் சதி வேலைகள் இருக்கின்றன’’ என்கிறார் இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர். அவர் பேசும்போது, ‘‘சிங்கள இனவெறி, இலங்கைத் தீவைத் தாண்டி தமிழ்நாட்டுத் தமிழர்கள்வரை நீள்வதன் வெளிப்பாடே இது. ஈழத்து மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை மோதவிடுவது என்ற சூழ்ச்சியை சிங்கள அரசு தொடங்கியுள்ளது. தமிழ்த் தலைவர்களில் சிங்கள அரசிடம் விலைபோன சிலர், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராகத் தமிழீழ மீனவர்களைப் போராடத் தூண்டும் வேலைகளைச் செய்கிறார்கள். அதற்கு ஈழத்து மீனவர்கள் பலியாகிவிடக் கூடாது’’ என்றார்.

தமிழக மீனவர்கள் VS இலங்கைத் தமிழ் மீனவர்கள் - பின்னணியில் இலங்கை ராணுவமா?

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசினோம். ‘‘தமிழக முதல்வர், ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதம் எழுதியிருக்கிறார். துறையிலிருந்தும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்’’ என்றார்.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

இந்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது? தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். ‘‘இலங்கை ராணுவம் இந்திய மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதை, படகுகளைப் பறிமுதல் செய்வதை, தமிழக பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை ராணுவம் தனது அத்துமீறல் செயல்களை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சமும் சந்தேகமும் வருகிறது. இதை வெளியுறவுத்துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம். மிகவிரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும். அதேவேளையில், இலங்கை ராணுவத்துக்குச் செய்துவரும் உதவிகள் என்பது ராஜ்ஜிய உறவுகள் தொடர்பானவை. எல்லையில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளையும் அதையும் முடிச்சுப்போட்டு யாரும் அரசியல் செய்யக் கூடாது’’ என்றார்.

தமிழ் மீனவர் துயரத்துக்குத் தீர்வே இல்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு