அரசியல்
அலசல்
Published:Updated:

மாற்றுத்திறனாளிகள், முதியோரின் ஊன்றுகோலைப் பறிக்கிறதா அரசு?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

வருவாய்த்துறை மூலம் கொடுக்கப்படும் உதவித்தொகையை எந்த வகையான மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தாலும் கொடுக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி.

“ `மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி, இந்த அரசாங்கத்தின் மகிழ்ச்சி’ என்று ஜூன் மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இத்தனை காலமாக நாங்கள் வாங்கிக்கொண்டிருந்த உதவித்தொகையை முன்னறிவிப்பின்றி நிறுத்திவிட்டது இந்த அரசு” என்று புலம்புகிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

உதவித்தொகை

1962-ம் ஆண்டு முதல் வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை’ வழங்கப்பட்டுவருகிறது. மாதம் 20 ரூபாய் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2011 முதல் மாதம் ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் 3,74,132 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்தார்கள். இந்த நிலையில்தான், ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்படவேண்டிய மாதாந்தர உதவித்தொகையை அரசு நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவைச் சேர்ந்த ராமலட்சுமி நம்மிடம் கூறுகையில், “10 வருடங்களாக உதவித்தொகை பெற்றுவருகிறேன். ஒவ்வொரு மாதமும் 8-ம் தேதிக்குள் என்னுடைய வங்கிக் கணக்குக்கு ஆயிரம் ரூபாய் வந்துவிடும். ஆனால், ஜூன், ஜூலை மாதங்களுக்கான உதவித்தொகை இதுவரை வரவில்லை. இது குறித்து, கடலாடி தாலுகா அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தேன். உரிய பதில் கிடைக்கவில்லை. என்னுடைய சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவிய தொகை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது, நடக்க உதவிய ஊன்றுகோலைப் பறித்ததுபோல இருக்கிறது” என்றார் வருத்தத்துடன்.

மாற்றுத்திறனாளிகள், முதியோரின் ஊன்றுகோலைப் பறிக்கிறதா அரசு?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சரஸ்வதி கூறுகையில், “உதவித்தொகை வராதது குறித்து பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டேன். ‘இந்த மாதம் வராது, அடுத்த மாதம் வாங்க’ என்று கூறி அனுப்பிவிட்டனர். எதற்காக நிறுத்தப்பட்டது என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த ஆயிரம் ரூபாய் இருந்தால், மாதத்தின் பாதி நாள்களை நிம்மதியாகக் கழித்துவிடுவேன். எல்லாம் போய்விட்டது” என்றார்.

பிச்சை எடுக்கிறேன்...

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த குமாரோ, “எனக்கு உதவித்தொகை வரலைன்னு குன்றத்தூர் தாலுகா அலுவலகத்துல கேட்டேன். ‘அக்டோபர் மாதம் வரை உதவித்தொகை வராது’னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கும் காரணம் தெரியலை. அந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காததால கோயில் கோயிலா பிச்சை எடுக்கிறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு சார்” என்றார் கண்ணீர்மல்க.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜனிடம் பேசினோம். “வருவாய்த்துறை மூலம் கொடுக்கப்படும் உதவித்தொகையை எந்த வகையான மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தாலும் கொடுக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி. இரண்டு காஸ் சிலிண்டர் வாங்குபவர்கள், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், தன் பெயரில் சொத்துப் பட்டா வைத்திருக்கும் பயனாளிகளுக்கு உதவித்தொகையை நிறுத்திவைத்திருக்கிறது அரசு.

நம்புராஜன்
நம்புராஜன்

ஜூலை 13-ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில், உதவித்தொகை நிறுத்தப்பட்டது குறித்து முறையிட்டோம். ‘மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை நாங்கள் நிறுத்தச் சொல்ல வில்லை. இது தவறாக நடந்திருக்கிறது. எனவே, விதிமுறைப்படி பணம் வழங்கப்படும்’ என்றனர். ஆனால், இதுவரை உதவித்தொகை வரவில்லை” என்றார்.

இதேபோல முதியோர் உதவித்தொகையும் பலருக்கு நிறுத்தப்பட்டிருப்பதால், அவர்களும் கொதிப்பில் இருக்கிறார்கள். இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் கேட்க வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகரைத் தொடர்பு கொண்டோம். அவர் சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், ‘பெயர் வேண்டாம்’ என்ற நிபந்தனையுடன் நம்மிடம் விளக்கமாகப் பேசினார்.

“வருவாய்த்துறை வாயிலாக சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை வாங்கும் சிலர், பல ஆண்டுகளாக முறைகேடாக இரண்டு உதவித்தொகை வாங்குகிறார்கள். ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட உதவித் தொகை வாங்குபவர்கள் குறித்த விவரம், தமிழ்நாடு அரசின் மின்னாளுமை முகமை (TNeGA) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என்று வெவ்வேறு துறைகள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட உதவித்தொகை பெறுவோரின் விவரங்களை ஆதார் எண் மூலம் தொடர்ந்து கண்டறிந்துவருகிறோம். உண்மையான பயனாளிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில நேரங்களில் நாங்களே நேரடியாக ஆய்வுக்கும் செல்கிறோம்.

ராமலட்சுமி, சரஸ்வதி, குமார்
ராமலட்சுமி, சரஸ்வதி, குமார்

இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் யாருக்கும் நாங்கள் உதவித்தொகையை நிறுத்த வில்லை. அவர்களுடைய ஆண்டு வருவாய் 3 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே உதவித்தொகை நிறுத்தப்படும். அனைத்துத் தகுதிகளும் இருந்து, கடந்த இரண்டு மாதங்களாக உதவித்தொகை வரவில்லை என்றால் மறு ஆய்வு செய்து அவர்களுக்கு மொத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கடிதம் அளிக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அவர்களுக்குத் திரும்பவும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

களையெடுப்பு அவசியம்தான். அதேநேரத்தில், உண்மையான பயனாளிகளுக்கு ஒரு மாத உதவித்தொகைகூட நிறுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதும் அரசின் கடமை!