Published:Updated:

ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?

நினைவிடம்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவிடம்

ஓவியம் : பாரதிராஜா

நம்பர் 89, வேதா இல்லம், போயஸ் கார்டன்... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அச்சத்தைக் கொடுத்த அட்ரஸாக இருந்தது. நெடிதுயர்ந்து நிற்கும் இந்த வீட்டின் இரும்புக்கதவைத் தாண்டி உள்ளே செல்லும் பாக்கியத்துக்காக ஏங்கியவர்கள் உண்டு. ஜனவரி 28-ம் தேதி முதல் சாமானிய மக்களும் நுழையும் இடமாக இது மாறிவிட்டது. ஆம்! ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் நிறைவடைந்துவிட்டதால், பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பல அரசியல் நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதாவிற்கு மிகவும் சென்டிமென்டான ஒன்று. ஜெயலலிதாவும் அவர் அம்மா சந்தியாவும் இந்த இடத்தை 1967-ம் ஆண்டு ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கினர். வீடு கட்டும் போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மறைந்து விட்டார். அரசியல் வாழ்வு முழுக்க இந்த வீட்டையே தன் அடையாளமாகக் கருதினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?

24,000 சதுரடி இடத்தில் இரண்டு மாடிகள் கொண்ட வீடாக ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ளது. நெருக்கமானவர்களிடம் பேசும்போது, ‘மை ஹவுஸ்’ என்று பூரிப்புடன் சொல்வாராம் ஜெ. தன் ஆஸ்தான சமையல்காரரான ராஜம்மாளை அன்புடன் நடத்துவார் ஜெ. எங்காவது வெளியூர் சுற்றுப்பயணம் கிளம்பும்போது ராஜம்மாளை அழைத்து, ‘‘வீட்டைப் பார்த்துக்கங்க’’ என்று சொல்லிவிட்டே கார் ஏறுவார்.

ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?

வீடு கட்ட ஆரம்பிக்கும்போது வைத்த மரக்கன்று ஒன்று, பெரிய மாமரமாக வளர்ந்து நின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு அது பட்டுப் போனபோது பதறிவிட்டார் ஜெ. இதைத் தொடர்ந்து சில நிபுணர்களை வரவழைத்த சசிகலா, அந்த மாமரத்தை உயிர்ப்பிக்கச் செய்தார். வீட்டில் இருக்கும் கிணறு ஒன்று பயன்படாமலே போய்விட்ட பிறகும், சென்டிமென்ட் கருதி அதைத் தூர்ப்பதற்கு அனுமதிக்கவில்லையாம் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுக்க நினைவுபடுத்திப் பார்க்க ஏராளமான அம்சங்கள் போயஸ் இல்லத்தில் உண்டு.

நினைவிடம்
நினைவிடம்

தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சில மாற்றங்களை மட்டும் செய்து பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கவுள்ளனர்.

ஜெயலலிதாவின் வீடு எப்படி இருக்கும்? அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம். ‘‘வீட்டின் கீழ்த்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு விருந்தினர் அறை, ஒரு ஹால், பூஜை ரூம், கிச்சன், அதன் அருகிலேயே ஒரு டைனிங் ஹால் அமைந்துள்ளது. முதல் தளத்தில் ஜெயலலிதாவின் படுக்கையறை உள்ளது. அதன் அருகிலேயே மிகப்பெரிய நூலகமும் இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் சிறிய அளவில் கிச்சன் போன்ற அமைப்பு உள்ளது. அவசரத்தேவைக்கு டீ, காபி போட இந்த இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்புறத்தில் சசிகலாவின் அறையும், அதற்குப் பக்கத்தில் இளவரசியின் அறையும் இருக்கின்றன. மேல் தளத்தில் மொத்தம் ஐந்து அறைகள் உள்ளன. இதைத் தவிர சிறிய ஹால் போன்ற ஒரு பகுதியும் உள்ளது. ஜெயலலிதா டி.வி பார்க்கவும், சசிகலாவுடன் பேசவும் இந்த இடத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்துள்ளார். கீழ்த்தளத்தின் பின்பகுதியில் பணியாளர்கள் தங்கும் அறை உள்ளது” என்கிறார்கள் அவர்கள்.

போயஸ் கார்டன்
போயஸ் கார்டன்

முதல்வராக இருந்த நாள்களில் ஜெயலலிதாவை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், கீழ்த்தளத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர் மாடிக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டால், யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் பல நெருக்கடியான தருணங்களில், முக்கியமான தகவல்களை அவருக்குச் சொல்லமுடியாமல் அதிகாரிகள் தவித்ததும் உண்டு.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மட்டும் சில நாள்கள் போயஸ் இல்லத்தில் இருந்தார். அவரும் சிறைக்குச் சென்றபோது இந்த வீட்டின் சாவி இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவிடம் இருந்தது. அப்போது சசிகலாவிற்குச் சொந்தமான சில பொருள்களை மட்டும் வேதா இல்லத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். அரசு இந்த வீட்டைக் கையகப்படுத்த முடிவெடுத்தபிறகு, இந்த வீட்டில் இருந்த எந்தப் பொருளையும் வௌியே எடுக்கவில்லை. ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்கள், ஆடைகள், அவரது காலணிகள், பூஜையறையில் இருந்த சாமிபடங்கள் அனைத்தும் அப்படியே உள்ளன. இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் வேலையைச் சில மாதங்களாக மேற்கொண்டுவந்தனர். வீட்டின் உள்ளே செய்யப்படும் மாற்றங்கள் ஏதும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால், பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வீட்டின் உள்ளே செல்போனைக் கொண்டுசெல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை.

கீழ்த்தளத்தில் உள்ள சில அறைகளையும், ஜெயலலிதா பயன்படுத்திய சில பொருள்களையும் மட்டும் முதல்கட்டமாகக் காட்சிப்படுத்து கிறார்கள். ஜெயலலிதாவின் படுக்கை அறையில் உள்ள பொருள்களையும், அவரது உடைகளையும் என்ன செய்வது என இன்னும் முடிவெடுக்க வில்லை. மேலும் சசிகலாவின் பொருள்களும் மேல் தளத்தில் இருப்பதால் அந்த அறையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை என்கிறார்கள்.

மெரினாவில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடமும் இதே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஃபீனீக்ஸ் வடிவில் அமைந்த இதில், பறவை இறக்கை போன்ற மேல்தளம் அமைக்கவே பெரும் தாமதமானதாம். ஜெயலலிதாவின் மார்பளவு உருவச்சிலையும், அணையாவிளக்கும் இந்த நினைவிடத்தின் ஸ்பெஷல்ஸ்! ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தின் ஒரு பகுதியில் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. ‘‘இந்த அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்தப்பட உள்ளன” என்கிறார்கள் அதிகாரிகள்.

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகும் அதே நாளில் நினைவிடம் மற்றும் நினைவு இல்லத் திறப்பு விழாவை நடத்துவது நிச்சயம் தற்செயலானது அல்ல! அதேபோல, இந்த இரண்டையும் திறந்து வைக்க டெல்லி வரை சென்று அழைப்பு விடுத்ததும் அரைமனதோடுதானாம்! ‘‘இந்த இரண்டு கட்டடங்களிலும் வைக்கப்படும் கல்வெட்டில் தங்கள் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பினார்கள். அதேபோலவே அமைந்துவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே கல்வெட்டில் உள்ளன’’ என்கிறார்கள் அ.தி.மு.க சீனியர் தலைவர்கள்.