Published:Updated:

அவரைவிட்டால் வேறு ஆளே இல்லையா? - ‘தமிழ்நாடு கிரீன் க்ளைமேட்’ கம்பெனி நியமன சர்ச்சை!

ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்

வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவின் நெருங்கிய நண்பரான ஸ்ரீராம் சீனிவாசன் முன்னாள் விமானப்படை ஊழியர்.

அவரைவிட்டால் வேறு ஆளே இல்லையா? - ‘தமிழ்நாடு கிரீன் க்ளைமேட்’ கம்பெனி நியமன சர்ச்சை!

வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவின் நெருங்கிய நண்பரான ஸ்ரீராம் சீனிவாசன் முன்னாள் விமானப்படை ஊழியர்.

Published:Updated:
ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்

கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ-வாக மணிகண்டபூபதி நியமனம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சையைப்போலவே, வனத்துறையில் ஸ்ரீராம் சீனிவாசன் என்பவரை மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு முதன்மை திட்ட இயக்குநராக (CPD) நியமித்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு எந்தப் பொறுப்புக்குச் சென்றாலும், இவருக்கும் ஒரு பதவி கொடுத்துவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையைச் சுற்றிச் சுழலும் இந்தச் சர்ச்சையின் பின்னணி பற்றி அறிந்துகொள்ள, மூத்த ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளிடம் பேசினோம். “தமிழ்நாடு வனத்துறை சார்பில், ‘தமிழ்நாடு கிரீன் க்ளைமேட் கம்பெனி’ என்கிற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில்தான் ஸ்ரீராம் சீனிவாசன் என்பவரை மூன்று லட்சம் சம்பளத்துக்கு CPD-யாக நியமனம் செய்திருக்கிறார்கள். இந்த தமிழ்நாடு கிரீன் க்ளைமேட் கம்பெனி என்பது ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’, ‘க்ளைமேட் சேஞ்ச் மிஷன்’, ‘தமிழ்நாடு வெட் லேண்ட் மிஷன்’ ஆகிய மூன்று திட்டங் களையும் செயல்படுத்தும் நிறுவனம். தனியாரிடமிருந்து நிதி பெற்று மூன்று திட்டங்களையும் செயல்படுத்த, லாபமில்லா நோக்கத்தில் (NGO) தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், மாநில கணக்காயர் மற்றும் கருவூலத்துறைக்குக் கட்டுப்படாமல் கம்பெனி சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தால் ‘ஆடிட்’ செய்ய முடியாது. தனியார் ஆடிட்டர்தான் ‘ஆடிட்’ செய்வார்.

ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்
ஸ்ரீராம் சீனிவாசன், சுப்ரியா சாஹு, சிவ.வீ.மெய்யநாதன்

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழக அரசின் சார்பில் சுமார் இரண்டரை கோடி, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் இரண்டரை கோடி என சுமார் ஐந்து கோடி ரூபாயை ஆரம்ப நிதியாகப் போட்டு இந்த நிறுவனம் தொடங்கப் பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் நோக்கம் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’, ‘க்ளைமேட் சேஞ்ச் மிஷன்’, ‘தமிழ்நாடு வெட் லேண்ட் மிஷன்’ ஆகிய இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்காக என்று கூறப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு கோப்புகள் வரும். அந்தக் கோப்புகளைக் கையாளும்போது தடையில்லாச் சான்று வாங்குவதற்காகப் பல்வேறு தொழில் நிறுவனத்தினர் வருவார்கள். அவர்களிடம் லஞ்சம் என்று நேரடியாகக் கேட்காமல், தாலுகா அலுவலகங்களில் கொடிநாள் வசூல் செய்வதுபோல... இந்த Tamil Nadu Green Climate Company-க்கும் நிதி கேட்கிறார்கள். இவ்வாறாக நிறுவனம் ஆரம்பித்து ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.20 கோடிக்கு மேல் நன்கொடையாகப் பெறப் பட்டுள்ளது. அப்படி வாங்கும் நன்கொடை குறித்த கணக்குகள் எதுவும் அரசிடம் இல்லை.

யார் இந்த ஸ்ரீராம் சீனிவாசன்?

வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவின் நெருங்கிய நண்பரான ஸ்ரீராம் சீனிவாசன் முன்னாள் விமானப்படை ஊழியர். சுப்ரியா சாஹு எங்கெல்லாம் வேலைக்குச் செல்கிறாரோ அங்கெல்லாம் ஸ்ரீராம் சீனிவாசனுக்கும் நிச்சயம் ஒரு வேலை உண்டு. டெல்லி தூர்தர்ஷனில் இயக்குநராக சுப்ரியா சாஹு இருந்தபோது, கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார் ஸ்ரீராம் சீனிவாசன். பிரதமர் அலுவலகமே தலையிடும் அளவுக்கு இந்த நியமனம் சர்ச்சை ஆனது. அதைத் தொடர்ந்து அவர், INDCOSERVE தேயிலைக் கழக இயக்குநராகப் பணியாற்றிய போது, அங்கும் ஸ்ரீராம் சீனிவாசன் நியமிக்கப் பட்டார். அப்படித்தான் இப்போது வனத் துறைக்கும் வந்திருக்கிறார். ஆனால், இவருக்குத் தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் என இந்தத் துறை சம்பந்தமாக ஏதும் தெரியாது” என்கிறார்கள்.

இன்னும் சில அதிகாரிகளோ, “தொழில் நிறுவனங்களிடமிருந்து CSR Fund மூலமாகக் கோடிக்கணக்கான பணத்தை ‘தமிழ்நாடு கிரீன் க்ளைமேட் கம்பெனி’க்காக மடை மாற்றம் செய்வதால், அங்கு கோடிக்கணக்கான பணம் ஆடிட் செய்யாமலேயே வெளியேறுகிறது. இது குறித்து முதல்வருக்கு ‘நோட்’ போட்ட அதிகாரி களைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் சுப்ரியா சாஹு. இவரின் கணவர் நிதித்துறைச் செயலாளராக இருப்பதால் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்” என்கிறார்கள்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹுவைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி மூலம் விளக்கம் கேட்டபோது, “இது முற்றிலும் தவறான செய்தி” என்றதோடு, ‘இது குறித்தான ஆவணங்களை விரைவில் அனுப்பிவைப்பதாக’ குறுஞ்செய்தியிலேயே பதில் கொடுத்தார். புத்தகம் அச்சில் ஏறும்வரை ஆவணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. கொடுத்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

இந்தச் சர்ச்சை குறித்து சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனைத் தொடர்புகொண்டபோது, “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்காக இப்போதுதான் ஒரு நிறுவனத்தையே திறந்திருக் கிறோம். அதற்கான திட்டமிடுதலும் இப்போது தான் நடந்துகொண்டிருக்கிறது. CSR Fund என்று இதுவரை எங்கேயும் ஒரு ரூபாய்கூட வாங்க வில்லை. ஸ்ரீராம் சீனிவாசன் பணி நியமனம், எனக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது” என்றார் சுருக்கமாக.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தரப்போ, செயலாளர் சுப்ரியா சாஹு தன்னைக் காட்டிலும் அதிகாரம் படைத்தவராக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டுகிறது. எது உண்மை?!

- அன்னம் அரசு