அரசியல்
அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

செத்து மடியும் காட்டுப்பன்றிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
செத்து மடியும் காட்டுப்பன்றிகள்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

செத்து மடியும் காட்டுப்பன்றிகள்... விலகாத மர்மம்!

நீலகிரி குடியிருப்புப் பகுதிகளில், உணவுக் கழிவுகளைக் கண்ட இடங்களில் மக்கள் கொட்டிச் செல்வதால், அவற்றை உண்பதற்காகக் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் படையெடுத்துவருகின்றன. இப்படி ஊருக்குள் வரும் பன்றிகள் தாக்கிப் பலர் காயமடைவதும், சிலர் இந்தப் பன்றிகளை வேட்டையாடிவருவதும் தொடர்கதையாகிவருகின்றன. இந்த நிலையில், குந்தா மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் திடீரெனப் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் செத்துமடிகின்றன. இவற்றை மீட்டுப் புதைப்பதே வனத்துறையினரின் முழுநேர வேலையாக மாறியிருக்கிறது. திடீரென இப்படிக் கூட்டமாகச் செத்துமடியும் பன்றிகள் குறித்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் என மொத்தப் பட்டாளமும் ஆய்வு நடத்தியும் இன்னும் மர்மம் விலகவில்லை. கூறாய்வு முடிவுகளில்கூட பன்றிகளின் இறப்புக்கான காரணம் புலப்படவில்லை என்பதால் விழிபிதுங்குகின்றனர் வனத்துறையினர்!

லோக்கல் போஸ்ட்

திண்டாட்டமாகிப்போன தீபாவளி!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகிலுள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல், மேலவாடி ஆகிய திட்டுக் கிராமங்களை, கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் சூழ்ந்திருப்பதால், அந்தக் கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி, அரசு ஏற்படுத்தியுள்ள ஒன்பது தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். ஆண்டாண்டுக் காலமாகத் தங்கள் கிராமங்களில், சொந்த வீடுகளில் குடும்பத்துடன் குதூகலமாகப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் செய்து தங்களுக்குள் பகிர்ந்தும் தித்திப்பாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த இந்த மக்கள், இந்த ஆண்டு முகாம்களில் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் வேதனையில் திண்டாடினர். மேலும், இந்தப் பகுதியில் சுமார் 15,000 ஏக்கருக்கும் மேல் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள், காய்கறிகள், மலர்ச்செடிகள் யாவும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் விவசாயிகளுக்கும் இந்த தீபாவளி பெரும் சோகத்தைத்தான் தந்திருக்கிறது.

லோக்கல் போஸ்ட்

சலங்கைகட்டும் சர்ச்சைகள்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையுடன் இணைந்து ரூ.24 கோடி மதிப்பீட்டில் ‘செவிலியர் பயிற்சிக் கல்லூரி’ தொடங்கப்படும் என முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இது குறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “55 கி.மீ தொலைவிலிருக்கும் மாவட்டத் தலைநகரான தூத்துக்குடியில் ஏற்கெனவே ஓர் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி செயல்பட்டுவருவதால், கோவில்பட்டியில் அமைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்” என்றார். ‘தனி மாவட்டமாக அறிவிக்கும் அளவுக்கு கோவில்பட்டி வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ஒரு முறைகூட தி.மு.க வெற்றிபெற்றதில்லை. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் திட்டத்தை முடக்குகிறது தி.மு.க அரசு’ என அரசியல் சர்ச்சைகள் சலங்கைகட்டியிருக்கின்றன.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

கமிஷனால ரோடு... கந்தரகோலம் ஆச்சு!

திருச்சி மாநகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. சமீபத்திய மழையில் இப்படியான சாலைகளெல்லாம் குளம்போல் ஆகிப்போனது தனிக்கதை. இதற்கிடையே, உறையூர், திருச்சி அரசு மருத்துவமனைப் பகுதி சாலைகள் சமீபத்தில்தான் புதிதாகப் போடப்பட்டன. ‘அப்பாடா...’ என மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்குள், புதிதாகப் போடப்பட்ட சாலைகள் தரமில்லாததால் பல இடங்களில் சுக்குநூறாக உடைந்துவருகின்றன. திருச்சி அரசு மருத்துவமனை அருகே மட்டும் 300 மீ தூரத்துக்குள்ளாகவே, 15 இடங்களில் சாலைகள் குழியாகிப் போக, அவசர அவசரமாக மாநகராட்சி அதிகாரிகள் அதைச் சரிசெய்திருக்கின்றனர். ‘கமிஷன் போக மீதிக் காசுல ரோடு போட்டா இப்படித்தான் ஆகும்...’ என மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

செடி வளர்ப்போர் சங்கம்!

தலைப்பைப் படித்தவுடன் சுற்றுச்சூழலுக்காக இயங்கும் ஓர் அமைப்பின் பெயர் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள். இது கோவை கஞ்சா நெட்வொர்க்கின் ஒரு கோட் வேர்டு. சமீபகாலமாகக் கோவை மாவட்டம் முழுவதும் ‘கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட்’ என்று புதுப் புது போதைப்பொருள்கள் களமிறங்கிவருகின்றன. இவற்றில் கஞ்சா நெட்வொர்க்தான் மிகவும் வலுவானது. முழுக்க முழுக்க கோட் வேர்டுகளில்தான் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு பொட்டலம் கஞ்சாவுக்கு ‘ஒரு கொண்டி’ என்பதுதான் கோட் வேர்டு. அதேபோல ஆங்காங்கே கஞ்சாச்செடியை வளர்ப்பவர்களை, ‘செடி வளர்ப்போர் சங்க உறுப்பினர்’ என்றுதான் அழைக்கிறார்களாம்!