Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

டாஸ்மாக் கடைக்கு ஆதரவாகக் கடையடைப்புப் போராட்டம்!

ஊருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றச் சொல்லிப் போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்துவதுதான் வழக்கம். ஆனால், நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் ‘டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது’ எனக் கோரி, அந்த வீதியிலுள்ள மற்ற கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் ‘கடையடைப்பு போராட்டத்தில்’ இறங்கியிருக்கின்றனர். இந்தக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் ஏற்கெனவே ஆளுநர் வரை புகார் தட்டிவிட்டதால், வேறு வழியின்றி கடையை அகற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டது டாஸ்மாக் நிர்வாகம். ஆனால், டாஸ்மாக்குக்கு வரும் குடிமகன்களால் சாப்பாடு, நொறுக்குத்தீனி உள்ளிட்ட வியாபாரம் களைகட்டுவதால், டாஸ்மாக் கடையை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் லோக்கல் கடை உரிமையாளர்கள். வணிகர் சங்க நிர்வாகி ஒருவர், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்!

லோக்கல் போஸ்ட்

ஆளுயர புகார் மனு!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திலிருக்கும் செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ‘யோகா’ ரமேஷ், நான்குக்கு இரண்டரை சைஸில் ஒரு ஃப்ளெக்ஸ் பேனரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கைச் சந்தித்தார். ‘என்ன இது?’ என்று ஆட்சியர் விழிக்க, ‘`இது புகார் மனு. எங்க ஊர்ல நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை முறைகேடு நடந்திருக்கு. கடந்த எட்டு மாசமா வேலைக்கு வராதவங்க பெயர்கள்ல வேலை கொடுத்ததா கணக்கு காட்டி, பணத்தைச் சுருட்டுறாங்க. நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும்’’ என்று ரமேஷ் தெரிவித்தார். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளிக்க, அங்கிருந்து கிளம்பிய ரமேஷ், ‘`இதுக்கு நடவடிக்கை இல்லைன்னா, அடுத்து 20-க்கு 10 சைஸ்ல மெகா சைஸ் புகார் மனுவோடு வருவேன்’’ என்று சொல்லியிருக்கிறார்!

லோக்கல் போஸ்ட்

மதுப்பிரியர்களின் கூடாரமான அரசுக் கட்டடம்!

அரியலூர் டு திருச்சி சாலையில், கோட்டாட்சியருக்கு என ரூ.79.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2020 ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், அந்தக் குடியிருப்பில் கோட்டாட்சியர் குடியேறவில்லை. குடியிருப்புக் கட்டடம் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயன்படுத்தப்படாமல் பாழாகிக் கிடக்கிறது. வேறு அதிகாரிகளும்கூட இங்கு வருவதில்லை என்பதால், கட்டடத்தைச் சுற்றிக் கருவேல மரங்கள் வளர்ந்து, அடர்ந்த வனம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் மதுப்பிரியர்களுக்கு ஏற்ற இடமாகவும் மாறியிருக்கிறது. “அதிகாரிகள் வரவில்லையென்றாலும் பரவாயில்லை... கருவேல மரங்கள், குடிமகன்களிடமிருந்தாவது கட்டடத்தைப் பாதுகாக்க வேண்டாமா..?’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் பொதுமக்கள்!

லோக்கல் போஸ்ட்

கஞ்சா, மது புழங்கும் பேருந்து நிலையம்!

தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. வெறுமனே ஐந்து பேருந்துகள் மட்டுமே நிற்பதற்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. இதுவரை திறப்புவிழாகூட நடத்தப்படவில்லை. ‘ஓட்டப்பிடாரம்’ என்ற பெயர்ப்பலகைவைத்து வருகின்ற நகரப் பேருந்துகள், பஜாரிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன. ஆக, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், தற்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில், மின்விளக்குகள் எதுவும் இல்லாததால், இரவில் மது அருந்தும் இடமாகவும், கஞ்சா விற்கும் இடமாகவும் மாறியிருக்கிறது இந்தப் பேருந்து நிலையம். திறக்கப்படாத இந்தப் பேருந்து நிலையத்துக்கு ஊராட்சி நிர்வாகத்திலிருந்து ஆண்டுதோறும் பராமரிப்பு நிதி வேறு ஒதுக்கப்படுகிறது!

வேண்டும்... வேண்டும்... சுரங்கப் பாலம் வேண்டும்!

சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்த வழியே டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் வந்துசெல்வதால், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்தச் சாலையைப் பயன்படுத்தும் எழில் நகர், மணலி செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நெரிசலைக் குறைக்க, அந்தப் பாதையில் ஏற்கெனவே சிறிய சுரங்கப்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், சிலரின் முட்டுக்கட்டையால் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி தடைப்பட்டது. தற்போது, இந்த கேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருவதால், ஏற்கெனவே திட்டமிட்டபடி ‘சிறிய சுரங்கப்பாலத்தை விரைவாக அமைத்துத் தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவருகின்றனர் பகுதி பொதுமக்கள்!