Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

கொடுக்கும் மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காதில் பூ சுற்றிவருகின்றனர்.

லோக்கல் போஸ்ட்

கொடுக்கும் மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காதில் பூ சுற்றிவருகின்றனர்.

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

பள்ளிக்கூடம் அருகிலேயே மதுக்கூடம்!

திண்டிவனம் நெடுஞ்சாலையிலுள்ள ரவுண்டானாவுக்கு, ‘சென்னை பேருந்து நிறுத்தம்’ என்றும் பெயருண்டு. சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளிக் குழந்தைகள் வந்து செல்லும் பரபரப்பான பகுதி இது. ஆனால், இதைச் சுற்றி மட்டும் ஐந்து டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகின்றன. எங்கிருந்தெல்லாமோ வருகிற மதுப்பிரியர்கள், அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு, சாலையோரம் சுய நினைவின்றி ‘கண் கூசும்’ வகையில் விழுந்து கிடக்கின்றனர். குறிப்பாக, காவல் நிலையம் எதிரில் இயங்கிவரும் மதுபானக் கடையிலேயே மூச்சு முட்டக் குடிக்கும் மதுப்பிரியர்கள், காவல்நிலையக் காம்பவுண்ட் அருகிலேயே மட்டையாகிவிடும் அவலமும் நடக்கின்றன. இது போதாதென்று காந்திசிலை அருகிலேயே, ‘புதுச்சேரி சரக்கு’ வேறு சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்படுகிறதாம். பள்ளியிலிருந்து 150 மீட்டருக்கு உள்ளாகவே டாஸ்மாக் ஒன்றும் இயங்கிவருவது கொடுமையின் உச்சகட்டம். பள்ளி மாணவிகளும், பெண்களும் தினம்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் கன்னித்தீவு கதையாக நீள்கின்றன.

லோக்கல் போஸ்ட்

பிரச்னைகளைத் தீர்க்க தினம் ஓர் அவதாரம்!

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கணேஷ்பாபு. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இவரைத் தெரியாத அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம், இதுவரை மக்கள் பிரச்னைக்காக 675 மனுக்கள் அளித்திருக்கிறார். ஒவ்வொரு முறை மனு அளிக்கும்போதும் ஒவ்வொரு கெட்டப்பில் வருவது இவரது வாடிக்கை. யானைகள் நடமாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்போது யானைபோல வேடமிட்டு வந்தது, வாயில் பிளாஸ்திரி ஒட்டிய நிலையில் வந்து புகார் மனு அளித்தது, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பிணம்போல படுத்திருந்து மனு அளித்தது... என கணேஷ்பாபுவின் அரிதார அட்ராசிட்டிகள் ஆயிரம். கடந்த வாரம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்ட முகாமில் காதில் பூ சுற்றியவாறு வந்து மனு அளித்தார். ஏனென்று கேட்டால், ‘‘கொடுக்கும் மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காதில் பூ சுற்றிவருகின்றனர். அதற்காகத்தான் இந்தக் கெட்டப்’’ என்றார் அசராமல்.

லோக்கல் போஸ்ட்

என்னடா இது.... குட்டி ஜப்பானுக்கு வந்த சோதனை!

சிவகாசி மாநகராட்சியில், எரியாமலிருக்கும் கோபுர மின் விளக்குகளைப் பழுது பார்க்க கடந்த ஏப்ரல் மாதம் 12.1 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மாமன்றக்கூட்டத்தில் ஒப்புதலும் வாங்கப்பட்டது. ஆனால், மாதங்கள் கடந்தும் மின்விளக்குகள் சீரமைக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இருட்டில் முட்டி மோதி பயணம் செய்யும் பரிதாபநிலை தொடர்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சமூகவிரோதிகளும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ‘நிதி ஒதுக்கப்பட்டும், விளக்குகள் பழுது பார்க்கப்படாமலிருப்பதன் பின்னணியில் இருப்பது... ஊழியர்களின் அலட்சியமா அல்லது நிதிக் கையாடலா’ என்று மாமன்ற உறுப்பினர்களே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

``காளையைக் கட்டினால், சாமி கண்ணைக் குத்தும்!’’

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள அ.கோவில்பட்டியில், நன்றாக விளைந்து நின்ற நெற்பயிரை கிராமத்துக் கோயில் காளை மேய்ந்து சேதப்படுத்தவே.... காளையைப் பாய்ந்து பிடித்துக் கட்டிப்போட்ட விவசாயிகள் அதற்கான தீவனங்களையும் தின்னக் கொடுத்தனர். ஆனாலும் ஊரிலுள்ள பெரியவர்களோ, ‘‘கோயில் காளையை கட்டிவைப்பது சாமி குத்தமாகிடும்... காளையை அவிழ்த்துவிடுங்கள்’’ எனச் சொல்ல, விவசாயிகளோ ‘‘காளையை அவிழ்த்துவிட்டால், பயிரெல்லாம் பாழாகிவிடும்’’ என்று மல்லுக்கட்ட... பிரச்னை பெரிதாகி, கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் புகாரானது. பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காததால், விவகாரம் கலெக்டர் காதுக்கும் செல்ல, ‘விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு’ வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணை நடத்திவரும் அதிகாரிகளும் ‘காளையை அவிழ்த்துவிடுவதா, கட்டிப்போடுவதா’ என்று முடிவெடுக்கமுடியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

- தேன்மொழி