Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீஸன் காலத்தில் ‘சாரல் திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

லோக்கல் போஸ்ட்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீஸன் காலத்தில் ‘சாரல் திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

‘லட்ச லட்சமாய்...’ விருதுநகர் புதிய பேருந்து நிலையம்!

1992-ம் ஆண்டு திறப்புவிழா கண்ட விருதுநகர் புதிய பேருந்து நிலையம், மிகவும் பரபரப்பாகச் செயல்பட்டது. இதனால், பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளுக்கு வியாபாரம் டல்லடித்துப்போனது. இதையடுத்து, ஆட்சியாளர்களின் காதில் வணிகர்கள் புலம்ப... அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுகளால், ‘ஆரம்ப ஜோரு... அப்புறம் பாரு...’ கதையாகப் புதிய பேருந்து நிலையம் மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள் அரவமற்ற வெற்று மைதானமாகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் 2005-2006 நிதியாண்டில், புதிய பேருந்து நிலைய சிமென்ட் சாலை சீரமைப்புப் பணிக்கு ரூ.44 லட்சம், 2011-ல் எம்.ஜி.ஆர் சிலை, சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கு 15 லட்சம், கொரோனாவுக்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளுக்குச் சில பல லட்சங்கள் என நிதி ஒதுக்கீட்டுக்கு மட்டும் புதிய பேருந்து நிலையத்தைப் பயன்படுத்திவருகின்றனர் அரசியல்வாதிகள்!

லோக்கல் போஸ்ட்

பழம் விற்கும் மூதாட்டிக்குப் பாராட்டு!

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில், கொய்யாப்பழம் வியாபாரம் செய்துவருகிறார் மூதாட்டி கவிதா. அண்மையில் வழக்கம்போல அங்கு அவர் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்தின் ஓரத்தில் போதையில் விழுந்து கிடந்திருக்கிறார் ஓர் இளைஞர். அருகிலேயே மஞ்சள் பை ஒன்றும் கிடந்திருக்கிறது. குடிமகனைத் தட்டியெழுப்ப முயன்ற மூதாட்டி, அருகில் கிடந்த மஞ்சள் பையைத் திறந்து பார்த்திருக்கிறார். அதில், 3 லட்சம் ரூபாய் இருந்திருக்கிறது. போதை மயக்கத்திலிருந்த இளைஞரின் நிலையை அறிந்த மூதாட்டி, உடனடியாக திருப்பத்தூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததோடு, பணத்தையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். வறுமையிலும் நேர்மையாகச் செயல்பட்ட மூதாட்டி கவிதாவை போலீஸாரும் பொதுமக்களும் பாராட்டிவருகின்றனர்.

குற்றாலத்தில் கும்மாளமிடும் குடிமகன்கள்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீஸன் காலத்தில் ‘சாரல் திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது. இந்த நிலையில், கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படாமலிருந்த ‘சாரல் திருவிழா’வை இந்த ஆண்டு நடத்திவிட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது. ஆனால், இரவு நேரங்களில் அருவிகளில் குளிக்க வரும் குடிமகன்களின் அட்ராசிட்டிகளால் பெண்கள் குளிக்கவே அஞ்சும் நிலைமை தொடர்கிறது. அரை குறை ஆடைகளில் ஆபாசம் காட்டுவது, தெளிந்தும் தெளியாத போதையில் அநாகரிகமான நிலையில் விழுந்துகிடப்பது என அருவருக்கவைக்கும் குடிமகன்களிடமிருந்து சுற்றுலாப்பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது!

லோக்கல் போஸ்ட்

வெயிலுக்குக் குடை பிடிக்கும்... பல கோடி ரூபாய் பாலம்!

‘அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், கோட்டைக்காடு டு சவுந்திரசோழபுரம் இடையே, வெள்ளாற்றில் சுமார் ரூ.11 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்’ என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ‘இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி போதாது’ எனக் கூறி, பாலம் கட்டும் பணி நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது. கடந்த ஆண்டே முழுமையாகப் பாலமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும், பாலத்தின் இரு புறத்தையும் சாலையுடன் இணைக்கும் வகையில், சாலை அமைக்கும் பணி இன்றைய தேதி வரையில் ஆரம்பிக்கப்படவே இல்லை. இதனால் வெயிலுக்குக் குடையாக நின்றுகொண்டிருக்கும் பாலத்தில், பயணிக்க வழியின்றி மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலையே இன்னும் தொடர்கிறது.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

சுற்றுலாப்பயணிகளை மிரட்டும் ஊட்டி நரக மாளிகை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கடினமான பணிகளைச் செய்ய அடிமைகளாக அழைத்துவரப்பட்ட 200 சீனக் கைதிகள், ஊட்டி நடுவட்டம் பகுதியிலுள்ள ‘சின்கோனா சிறைச்சாலைத் தோட்ட’த்தில் தங்கவைக்கப்பட்டனர். உடனடித் தீர்ப்பு வழங்க நீதியறை, தூக்கு மேடை ஆகியவற்றைக்கொண்ட பிரமாண்ட நரக மாளிகையான இந்தச் சிறைச்சாலை, 1865 முதல் 1869 வரை இயங்கிவந்தது. தற்போது, ‘தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக’த்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தச் சிறைச்சாலைத் தோட்டம், சில ஆண்டுகளுக்கு முன்புதான் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட வசதியாக ‘ஜெயில் மியூசியமாக’ மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாகச் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சீனக் கைதிகள், ஆங்கிலேயக் காவலர்கள், நீதிபதி என தத்ரூபச் சிலைகளுடன் பழங்கால நரக மாளிகையை அப்படியே கண்முன் நிறுத்தும்‌ வகையில், புதுப்பொலிவு பெற்றிருக்கும் ‘சின்கோனா சிறைச்சாலை’ விரைவில் சுற்றுலாப்பயணிகளை மிரட்டவிருக்கிறது!