Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

ரயில் இன்ஜினுக்கும் சிறப்பு பூஜை!

சென்னை பாடிகாட் முனீஸ்வரர்போல, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயில் இருக்கிறது. திண்டுக்கல் - திருச்சி சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், ‘விபத்தில்லாமல் போய்ச்சேர வேண்டும்’ என இந்தக் கோயிலில் நின்று வழிபடுவது வழக்கம். வழக்கமாக கார், பைக், பஸ் போன்ற வாகனங்களுக்குத்தான் இங்கே பூஜை நடக்கும். இப்போது ரயிலுக்கும் பூஜை போட்டுவிட்டார்கள். சமீபத்தில், இன்ஜின் பராமரிப்புப் பணிக்காக ரயில்வே பராமரிப்பு ஊழியர்களால் திருச்சி நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட ரயில் இன்ஜினை கோயில் அருகே நிறுத்தி வழிபட்டுச் சென்றனர். ‘ரயில் இன்ஜினுக்கு’ நடந்த சிறப்பு பூஜையை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே குவிந்துவிட்டது.

லோக்கல் போஸ்ட்

எலைட் பகுதிக்கு அதீத கவனிப்பு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் சாலையைப் புனரமைப்பது, மாடல் ரோடாக மாற்றுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியின்போதே, ‘கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பண விரயம் செய்வதாக’ புகார் எழுந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலைதான் தொடர்கிறது. “சாலையைப் பெயர்த்து கான்கிரீட் போடுவது, சாலையை மறித்து அழகுக்காக பிரமாண்ட கூண்டு வைப்பது என எலைட் ஏரியாவான ரேஸ்கோர்ஸில் எதற்காக இத்தனை கோடிகளைக் கொட்ட வேண்டும்... கோவை மாநகர் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருக்கின்றன. அங்கெல்லாம் பணி செய்ய நிதி இல்லை என்று கைவிரிக்கும் அரசு, முன்னேறிய பகுதிகளில் இப்படிக் கோடிகளில் பணத்தைக் கொட்டித் திட்டங்களைச் செயல்படுத்துவது நியாயமாரே?” எனக் குமுறுகின்றனர் கோவை மக்கள்.

3 ஷட்டர்களும், 2 அமைச்சர்களும்...

விருதுநகர் தாலுகா, அர்ச்சுனா நதியின் குறுக்கே ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் 1989-ல் கட்டப்பட்டது. விருதுநகர் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும், 4,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாகவும் இருக்கிறது இந்த அணை. ஆனால், ஏழு ஷட்டர்கள் கொண்ட இந்த அணையில் மூன்று ஷட்டர்கள் அணை திறக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள்ளாகவே பழுதடைந்ததால், தொடர்ந்து அணையில் நீர்க்கசிவு இருக்கிறது. இதனால் முழுக்கொள்ளளவு இருந்தாலும், திறக்காமலேயே தண்ணீர் வீணாவது தொடர்கிறது. அணை பராமரிப்புக்கென உலக வங்கி நிதி உதவியுடன் இதுவரை 4 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிட்டும் இந்தப் பிரச்னை மட்டும் இன்னும் தீரவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்க்கசிவு தொடர்கிறது. ‘இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்... இப்போதாவது இந்தப் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா...’ என்று ஏங்கிக்கிடக்கிறார்கள் விருதுநகர் மக்கள்.

விபத்தைத் தடுக்கும் டீ!

கனரக வாகனங்கள் அதிகம் புழங்கும் நாமக்கல் மாவட்டத்தில், இரவு நேர விபத்துகளும் அதிக அளவில் நடக்கின்றன. இந்த விபத்துகளைத் தடுக்க நினைத்த ‘இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள்’ நலக் கூட்டமைப்பினர், குமாரபாளையத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் விழிப்புணர்வு பதாகையை வைத்திருப்பதோடு, இரவு நேரங்களில் சேலம், கோவை புறவழிச்சாலையில் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி, ஓட்டுநர்களுக்கு சுடச்சுட டீ கொடுத்துவருகின்றனர். ‘தேநீர் பருகும் இடைவேளையில், கொஞ்சம் ஓய்வு கிடைப்பதால், தூக்கக் கலக்கம் குறைந்து புத்துணர்ச்சியாகிவிடுகிறோம்’’ என்கிறார்கள் ஓட்டுநர்கள். நல்ல ஐடியா!

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

ராணுவ முகாம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு?!

நீலகிரி மாவட்டத்தில், காட்டுப்பன்றி வேட்டைக்காக வைக்கப்படும் நாட்டுவெடியைக் கடிக்கும் காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாய் சிதறி உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் துடிதுடித்துச் சாகும் கொடூரம் தொடர்கதையாகிவருகிறது. அண்மையில், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் நாட்டு வெடியைக் கடித்த‌ பசுமாடு ஒன்று வாய் சிதறி, ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்குப் போராடியது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி, வனத்துறை - காவல்துறைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸ், குன்னூர், சேலாஸ் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரைக் கைதுசெய்தது. இந்த இளைஞர் சிவகாசிக்குச் சென்று பட்டாசுக்கான வெடிபொருள்களை வாங்கி வந்து வீட்டிலேயே குடிசைத் தொழில்போல நாட்டுவெடியைத் தயாரித்து, விற்பனை செய்துவந்திருக்கிறார். இவரிடம் நாட்டுவெடியை வாங்கி விலங்குகளை வேட்டையாடியவர்களின் பட்டியலையும் திரட்டிவருகிறது காவல்துறை.