Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

வேலூர் மாநகரத்துக்குள் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விழித்துக்கொண்டு அதிரடி காட்டுகிறது மாவட்ட நிர்வாகம்

லோக்கல் போஸ்ட்

வேலூர் மாநகரத்துக்குள் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விழித்துக்கொண்டு அதிரடி காட்டுகிறது மாவட்ட நிர்வாகம்

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

பயனற்றுக் கிடக்கும் பழங்குடியினர் ஆய்வு நூலகம்!

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடிகளைக்கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பல லட்சம் ரூபாய் செலவில் ‘பழங்குடியினர் நூலகம்’ தொடங்கப்பட்டது. ஐடி கம்பெனியைப்போல அனைத்து வசதிகளுடன் பளபளப்பாகக் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில் பழங்குடிகளின் வாழ்வியல் குறித்த நூல்கள் முதல் கம்ப்யூட்டரில் பதிவேற்றிய மின்னணு தகவல்கள் வரை இருக்கின்றன. நீலகிரியில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கைமுறை குறித்த, டிஜிட்டல் வரைபடங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினர் குறித்த ஆய்வில் ஈடுபடுவோருக்குப் பெரிதும் பயன்படும் என்று சொல்லி கட்டப்பட்ட இந்த நூலகத்துக்கு யாரும் வருவதில்லை. புத்தகங்கள் அலமாரிகளில் அச்சுக் கலையாமல் அப்படியே இருக்கின்றன. பெரும்பாலான நேரம் ஆளின்றி கிடக்கும் இந்தப் பழங்குடி நூலகத்தைப் பயன்படுத்த யாரும் வர மாட்டார்களா என வழி மீது விழி வைத்து காத்துக்கிடக்கிறார்கள் நூலகர்கள். இந்தச் செய்தியை ஆய்வு மாணவர்களின் கவனத்துக்கு நீங்களாவது கொண்டு செல்லுங்கள் வாசகர்களே!

லோக்கல் போஸ்ட்

இதுக்கு மட்டும் நிதி இருக்குதா?

கோவை மாநகராட்சி, நிதிப்பற்றாக்குறையில் திண்டாடிவருகிறது. பல்வேறு அத்தியாவசியப் பணிகள் போதிய நிதி இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. “ஊர்ல மழை இல்லை, ஏழைகளெல்லாம் கஷ்டப்படறாங்க. ஆனா, நிம்பள்கிட்ட மட்டும் எப்பவும் துட்டு இருக்குதே?” என்ற சினிமா பட வசனம்போல, மாநகராட்சியை ஆள்பவர்கள் மட்டும் செழிப்பாக இருக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, புதிதாகப் பதவியேற்ற மேயருக்காக, மாநகராட்சியின் அதிகாரபூர்வ மேயர் வீட்டை அலங்கரிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் மேயர், ஆணையருக்கு மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் இரண்டு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை தவிர மாநகராட்சி மண்டல அலுவலகங்களைப் புனரமைக்கவும் கோடிகளை இறக்கியுள்ளனர். என்னங்க சார் உங்க சட்டம்?

லோக்கல் போஸ்ட்

உல்லாச சவாரியா... உயிர் பறிக்கும் சவாரியா?

புதுச்சேரி நோனாங்குப்பத்தில் சுற்றுலாத்துறையின் படகு இல்லம் இயங்கிவருகிறது. நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை, கட்டணத்தின் அடிப்படையில் குட்டித்தீவான பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் செல்கின்றன சுற்றுலாத்துறைப் படகுகள். குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர் என வார இறுதி நாள்களில் மட்டுமே சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் இந்தப் படகு சவாரியை மேற்கொள்கின்றனர். ஆனால், யாருக்கும் லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர் காக்கும் கவசம் வழங்கப்படுவதில்லை. அதேபோல தீவில் இருக்கும் பாரடைஸ் பீச்சிலும், பயணிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு, பயிற்சிபெற்ற லைஃப்கார்டுகள் நியமிக்கப்படாததால் அடிக்கடி பிரச்னையாகிறது. `சுற்றுலாப்பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டும் அரசு, அவர்களின் உயிரில் அலட்சியம் காட்டலாமா?’ என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நியாயம்தானே?

லோக்கல் போஸ்ட்

இலவச இணைப்பாக இன்னொரு மின்கம்பம்!

அ்ரியலூர் கீரைக்காரத் தெருவின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக நகராட்சி, மின்துறை அலுவலகங்களில் புகாரளித்தார்கள். நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டு புதிதாக இன்னோர் இரும்பு மின்கம்பத்தைக் கொண்டுவந்து, தெருவின் நடுவே நட்டுவிட்டுப் போய்விட்டார்கள் மின்வாரியத்தினர். இருசக்கர வாகனத்தைத் தவிர எந்த வாகனமும் நுழைய முடியாததால், அவதிக்குள்ளாகிவருகிறார்கள் மக்கள்!

லோக்கல் போஸ்ட்

மறுபடியும் முதல்ல இருந்தா?!

வேலூர் மாநகரத்துக்குள் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விழித்துக்கொண்டு அதிரடி காட்டுகிறது மாவட்ட நிர்வாகம். இந்த சம்பிரதாய நடவடிக்கையால் தற்காலிகத் தீர்வுகூட கிடைத்தபாடில்லை. இந்த முறை ‘டிராஃபிக் ராமசாமி’ ரேஞ்சுக்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். மையப்பகுதியான ‘கிரீன் சர்க்கிள்’ ரவுண்டானா அளவைக் குறைத்துவிட்டால், நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும் என ஐஐடி வல்லுநர் குழுவினரையெல்லாம் அழைத்துவந்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். கடந்த முறை நடத்திய ஆய்விலும் இதே முடிவைத்தான் எடுத்திருந்தார்கள். ‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்கிறார்கள் வேலூர்வாசிகள்.

- தேன்மொழி