Published:Updated:

லஞ்சத்துக்கு ரேட் கார்டு... என்ன நடக்கிறது தமிழகக் காவல்துறையில்?

போலீஸாரின் ரேட் கார்டு’ என்ற பட்டியலுடன் ஒரு ஃபைல் அனைத்து மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் சென்றது ஒட்டுமொத்த போலீஸாரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

பிரீமியம் ஸ்டோரி

‘போலீஸாரின் லஞ்சப் பட்டியல்’ என்று சமீபத்தில் காவல்துறை உயரதிகாரிகளாலேயே வெளியிடப்பட்ட ரேட் கார்டு, காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தயாரிக்கப்பட்டது இந்த லஞ்சப் பட்டியல்?

தமிழக போலீஸின் உளவுத்துறை தரப்பில் அண்மையில் ஒரு ரகசிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காவல் நிலைய ரைட்டர், தனிப்பிரிவு அதிகாரிகள், ரோந்து காவலர்கள், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்... என்று வெவ்வேறு பதவிகளில் உள்ளவர்கள் ஒவ்வொரு விவகாரத்துக்கும் எவ்வளவு லஞ்சத்தொகை ஃபிக்ஸ் செய்திருக்கி றார்கள் என்ற வசூல் பட்டியலைத் தயார் செய்தார்கள். இந்தப் பட்டியலோடு, வாங்குபவர்கள் பற்றிய விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லத் திட்டமிட்டார்கள். ஆனால், லஞ்சம் வாங்குகிறவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு தரலாம் என்று, வசூல் பட்டியலை இணைத்து எச்சரிக்கை செய்து சுற்றறிக்கையைத் தயாரித்து, மண்டல ஐ.ஜி-க்கள், சரக டி.ஐ.ஜி-கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள்... என அனைவருக்கும் அனுப்பியது டி.ஜி.பி அலுவலகம். கீழ்மட்ட போலீஸார் வரை விஷயத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. சேலம் மாவட்ட எஸ்.பி-யான  அபிநவ், அவரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய பட்டியல் லீக் ஆகி மீடியாக்களில் வெளியாக... ‘என்ன நடக்கிறது தமிழக போலீஸில்?’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

லஞ்சத்துக்கு ரேட் கார்டு... என்ன நடக்கிறது தமிழகக் காவல்துறையில்?

தமிழகம் முழுவதுமுள்ள காவல்துறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களின் மாதச் சம்பளத்தை வங்கியிலிருந்து எடுப்பதில்லை என்ற ஒரு தகவலை உளவுத்துறை போலீஸார், டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுதான் இந்த ரகசிய ஆய்வுக்கு முதல்புள்ளி. காவல்துறையில் இப்படிப் பல ரகசிய ஃபைல்கள் அனுப்பப்பட்டு விசாரணை நடப்பது வழக்கம்தான். ஆனால், ‘போலீஸாரின் ரேட் கார்டு’ என்ற பட்டியலுடன் ஒரு ஃபைல் அனைத்து மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் சென்றது ஒட்டுமொத்த போலீஸாரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சரி, அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகைகள்தான் லஞ்சமாகப் பெறப்படுகின்றனவா? விசாரித்தால், ‘அதைவிட அதிக அளவில் கலெக்‌ஷன் நடந்துவருகிறது’ என்கிறார்கள் காவல் நிலைய வட்டாரத்தைக் கரைத்துக் குடித்தவர்கள்.

லஞ்சத்துக்கு ரேட் கார்டு... என்ன நடக்கிறது தமிழகக் காவல்துறையில்?

அவர்களிடம் பேசியபோது, சில உதாரணச் சம்பவங்களுடன் விவரித்தார்கள்... ‘‘பெரும்பாலான காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக் கூடாரங்களாக மாறியிருக்கின்றன. அதிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில், பெரிய அளவில் டீலிங் நடத்தப்பட்டுவருகிறது. சென்னை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிவில் புகார் ஒன்றுக்கு உடனடியாக சி.எஸ்.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிவில் புகாருக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் போடப்பட்ட ரிப்போர்ட், உளவுத்துறை மூலம் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதும், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குப் புகார் மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு வைத்து இரு தரப்புக்கும் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. சிவில் புகாரின் பின்னணியில் பல கோடிகள் இருப்பதன் அடிப்படையிலேயே காவல் நிலைய அதிகாரிகள் ஆர்வமாக விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். இதுபோலவே, வளசரவாக்கம் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு இடம் தொடர்பான பிரச்னையில், சில ஸ்வீட் பாக்ஸ்கள் உயரதிகாரிகள் வரை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகம் முழுவதுமுள்ள ஸ்பா-க்கள், கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் மதுபானங்கள் உள்ளிட்ட இரண்டாம்ரக பிசினஸ் களைக் கண்டுகொள்ளாமல் இருக்க, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை காவல் நிலையங்களுக்கு மாமூலாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், செல்போனுக்காகக் கைக்குழந்தையை விற்ற குற்றவாளிகள் இதுவரை போலீஸாரால் கைதுசெய்யப்படவில்லை. குழந்தையை விற்ற பணத்தைக் காவல்துறையைச் சேர்ந்த சிலர், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறித்து, லஞ்சமாக வைத்துக்கொண்டார்கள் என்ற தகவல், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. அதன் பிறகே குழந்தை மீட்கப்பட்டதோடு, குழந்தையை வாங்கியவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் விற்றவர்களைக் கைது செய்யாததற்குப் பின்னால் இருப்பது, லஞ்சம் மட்டுமே. இதுபோல தமிழகம் முழுவதும் பல சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டிருக்கின்றன.

காவல் நிலையங்களின் செயல்பாடுகளை கவனித்து ரிப்போர்ட் அளிக்கவேண்டிய உளவுத்துறையினரில் சிலர் கையூட்டு பெறுவதால்தான், பல தகவல்கள் டி.ஜி.பி அலுவலகத்தின் கவனத்துக்குச் செல்வதில்லை. காவல் நிலையங்களிலேயே சி.எஸ்.ஆர் மட்டும் பதிவு செய்யப்பட்டு, அதற்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் டீலிங் பேசி முடித்து வைக்கப்பட்டுவிடுகிறது. இன்னும் சில காவல் நிலையங்களில் சி.எஸ்.ஆர் கூட பதிவுசெய்யப் படுவதில்லை. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட புரோக்கர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் மூலம்தான் காவல் நிலையங்களில் டீலிங் நடந்துவருகிறது’’ என்றார்கள் விரிவாக.

இந்த லஞ்சப் பட்டியல் அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல அவலத்துக்குரியது!

‘‘உயரதிகாரிகள் மட்டும் பரிசுத்தமானவர்களா?’’

‘‘அரசுத்துறைகளில் ஒருசிலர் லஞ்சம் வாங்குவதுபோலத்தான் காவல்துறையிலும் நடக்கிறது. பொத்தாம் பொதுவாக, அனைவர்மீதும் புழுதியை வாரி இறைப்பதுபோல் போலீஸ் மேலிடமே இப்படியொரு லஞ்சப் பட்டியலைப் பகிரங்கமாக ஏன் வெளியிட வேண்டும்... பட்டியல் போடும் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும் பரிசுத்தமானவர்களா... உங்களுக்கு எத்தனை பங்களாக்கள், எத்தனை ஆர்டர்லிகள், வாகனங்கள், எத்தனை பேர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறீர்கள்... இதையெல்லாம் லிஸ்ட் எடுத்து கீழ்மட்ட அதிகாரிகள் வெளியிட்டால் உங்களால் தாங்க முடியுமா? பட்டியல் தயாரித்த அதிகாரி, வெளியிட்ட அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வசூல் பட்டியலால் கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகள் மனம் நோந்துபோயிருக்கிறார்கள். இதை முதல்வர் உடனடியாக கவனத்திலெடுத்து சரிசெய்ய வேண்டும்!’’

- பாலதண்டாயுதபாணி, ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு