Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

கொங்கு மண்டல தொகுதி ஒன்றில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த தி.மு.க நிர்வாகி அவர்.

‘‘இப்பவே இவ்வளவு அலப்பறையா!’’ - கோவை கலாட்டா...

ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், கோவை தி.மு.க புள்ளிகளின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. ‘அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கினேன்’, ‘திட்டப்பணிகளை ஆய்வுசெய்தேன்’ என்று தினமும் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள். இதையடுத்து, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்டதால் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தி.மு.க நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் முதலிடத்தில் இருப்பவர், கோவை மாநகராட்சி மேயர் கனவில் இருக்கும் மகளிரணி மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார்தான். தினமும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அரசுப் பணிகளை ஆய்வுசெய்வதாகப் பதிவிட்டுவருகிறார். கோவை கிழக்கு மாநகரப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக் அரசு விழாக்களில் கலந்துகொண்டு இன்னும் எம்.எல்.ஏ நினைப்பிலேயே வலம்வருகிறார். கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான டாக்டர் வரதராஜன், அரசுப் பணிகளில் ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று தலையிடுகிறார்” என்று புலம்புகிறார்கள் அரசு அதிகாரிகள்!

கரைவேட்டி டாட் காம்

சீட்டுக்கு கல்லாகட்டும் நகரப்புள்ளி! - வாணியம்பாடி வசூல் வேட்டை...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி தலைக்கு 3 லட்சம் ரூபாய் என ‘கல்லா’ கட்டிவருகிறார் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த ஆளுங் கட்சியின் நகரப்புள்ளி ஒருவர். மொத்தமுள்ள 36 வார்டுகளில், தானும் தன் தாயும் போட்டியிடும் இரண்டு வார்டுகளைத் தவிர மற்ற 34 வார்டுகளிலும் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். கட்சித் தலைமையின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பெயரைச் சொல்லி இவர் நடத்திவரும் வசூல் வேட்டையைப் பற்றிக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவருக்குச் சிலர் புகாராக அனுப்பியும் ரியாக்‌ஷன் எதுவும் இல்லையாம். வசூலாகும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸில் போட்டு இரட்டிப்பாக்கி லாபம் பார்க்கவும் திட்டம்வைத்திருக்கிறாராம் நகரப்புள்ளி.

‘‘ஊரையே வித்துடுவாரு!” - ஈரோடு குமுறல்...

அமைச்சர் முத்துசாமியின் நிழலாக வலம்வரும் ஈரோடு மாநகரத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி முக்கியப்புள்ளியின் ஆட்டம் தாங்க முடியவில்லை என்று உடன்பிறப்புகளே புலம்புகிறார்கள். ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்பது, டாஸ்மாக், ரியல் எஸ்டேட், சாயப்பட்டறை என்று கிடைத்த கேப்பிலெல்லாம் கரன்சியை வாரிக்குவிக்கிறாராம். இவை தவிர சாலைப் பணி, பூங்கா பராமரிப்பு என்று 20 கோடி ரூபாய் ஒப்பந்தத்தையும் கைப்பற்றியிருக்கிறார் அந்த நிழல் புள்ளி. இது போதாதென்று, ஈரோடு மேயர் பதவியையும் அந்தப் புள்ளி குறிவைத்திருப்பதால், ‘‘இப்பவே இந்த ஆட்டம் போடுறாரு. மேயரா வந்தா ஈரோட்டையே வித்துப்புடுவாருங்க’’ என்று அலறுகிறார்கள் உடன்பிறப்புகள்.

கரைவேட்டி டாட் காம்

‘‘இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!’’ - பட்டுக்கோட்டை புலம்பல்...

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஏரியா தி.மு.க புள்ளிகளின் புலம்பல் இது... ‘‘பட்டுக்கோட்டை யூனியன் சேர்மனா தி.மு.க-வைச் சேர்ந்த பழனிவேல் இருக்கார். துணைத்தலைவரும் தி.மு.க-தான். மொத்தம் இருக்குற 19 கவுன்சிலர்கள்ல 13 பேர் தி.மு.க-காரங்கதான். ஆனாலும், இங்க ஆதிக்கம் செய்யறது என்னவோ அ.தி.மு.க-வினரும், பா.ஜ.க-வினரும்தான். சேர்மனோட ரூம்ல எப்பவுமே இந்த ரெண்டு கட்சிகளைச் சேர்ந்தவங்கதான் இருக்காங்க. இது பத்தி சேர்மன்கிட்ட கேட்டா, ‘அ.தி.மு.க-காரங்களை நம்ம கட்சிக்கு இழுக்கத்தான் அன்பா பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கேன்’னு சொல்றார். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?’’ என்று புலம்புகிறார்கள்.

தங்கமணி இடங்களில் ரெய்டு! - வெயிட்டாகப் பதுக்கினாரா தி.மு.க புள்ளி?

கொங்கு மண்டல தொகுதி ஒன்றில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த தி.மு.க நிர்வாகி அவர். அவர் தோல்வியடைந்ததற்குக் காரணமே முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் அவருக்கு இருந்த தொழில் தொடர்புகள்தான் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டுகளுக்குப் பிறகு, “தங்கமணியோட சொந்தக்காரங்க, கட்சிக்காரங்க இடங்கள்ல சோதனை நடத்தி என்ன பிரயோஜனம்? அந்த தி.மு.க புள்ளிகிட்ட ரெய்டு நடத்தியிருந்தா வெயிட்டா கிடைச்சிருக்கும். கேஸும் ஸ்ட்ராங் ஆகியிருக்கும்” என்று முணுமுணுக்கிறார்கள் கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள்!