Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

‘அன்பளிப்பு தர்றியா... அபராதம் கட்டுறியா?’

பயண அமைச்சரின் உதவியாளராக, சிறந்த இயக்குநர் பெயர்கொண்டவர் இருந்துவருகிறார். ‘அன்பளிப்பு’ பெறுவதில் கில்லாடியான உதவியாளர், அண்மையில் மத்திய அரசின் ஒப்பந்தப் பணியைச் செய்துவரும் கான்ட்ராக்டர் ஒருவரிடமும் அன்பளிப்பு கேட்டு கைநீட்டியிருக்கிறார். “இது சென்ட்ரல் கவர்மென்ட் வேலைங்க. எல்லாம் சரியா கட்டித்தான் இந்த வேலையை எடுத்திருக்கேன். உங்களுக்கு எதுக்குங்க பணம் கொடுக்கணும்?” என அந்த கான்ட்ராக்டர் எகிற... சத்தமில்லாமல் இடத்தை காலிசெய்த உதவியாளர், ஆர்.டி.ஓ-வின் காதில் கிசுகிசுத்தாராம். உடனே ஒப்பந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்ற ஆர்.டி.ஓ., ஜே.சி.பி மற்றும் லாரியைப் பறிமுதல் செய்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார். அபராதத் தொகை கட்டிய பிறகும், ஜே.சி.பி ஒப்படைக்கப்படாததால், நொந்து போயிருக்கிறார் கான்ட்ராக்டர்!

கான்ட்ராக்டுக்கு ஒரு லட்டு... கார் ஓட்டுநருக்கு 5 லட்டு!

‘அவார்டு’ நகராட்சிக்குப் புதிதாக இரண்டு கார்களைத் தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கிறது. இதுவரை அலுவலுக்காகவும், கட்சிப் பணிக்காகவும் நகராட்சி அதிகாரியின் காரையே பயன்படுத்திவந்த தலைமை, புது கார்களின் வரவால் படுகுஷியாகிவிட்டாராம். அது புதிய காரில் பயணம் செல்வதால் வந்த குஷியல்ல... புதிய கார்களின் ஓட்டுநர் பணிக்கு இரண்டு டிரைவர்களை நியமனம் செய்ததில், தலைக்கு ஐந்து லட்டுகளை வாங்கிப் பையை நிரப்பிக்கொண்டதில் வந்த குஷி என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நகராட்சியில் டெங்கு பரவல் தடுப்புப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர் நியமனத்திலும் தலைக்கு ஒரு லட்டு வசூல் செய்திருக்கிறாராம்!

கரைவேட்டி டாட் காம்

‘பணம் கேட்கிறார்... பாலியல் டார்ச்சர் செய்கிறார்!’

‘மொபைல் வழியாக பாலியல் டார்ச்சர் செய்கிறார்’ என்று ஒரு புகாரும், ‘அரசு உயரதிகாரி எனக் கூறிக்கொண்டு மொபைல் வழியே பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என்று ஒரு புகாரும் மதுரை மாநகர காவல்துறைக்குச் சென்றிருக்கிறது. சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ததில், இரண்டு புகார்களிலும் சம்பந்தப்பட்டவர் ஒரே நபர்; அவர் மாநகராட்சியில் படமெடுத்தாடும் கவுன்சிலர் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயாராக, ‘வழக்கு ஏதும் பதிவுசெய்ய வேண்டாம்’ என மாவட்ட அமைச்சரிடமிருந்து அழுத்தம் வர, தில்லாலங்கடி கவுன்சிலர் தற்காலிகமாகத் தப்பிவிட்டார். ஆனால், “டீசன்ட்டான அமைச்சரே, இந்த மாதிரி மோசமான ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணலாமா..?” என சொந்தக் கட்சியினரே குமுறுகிறார்கள்!

49-ன் காலில் விழுந்த 63!

உப்பு மாவட்டத்தில், அ.தி.மு.க-வின் 50-வது ஆண்டு பொன்விழா மற்றும் மாஜி மீசைக்காரரின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்தது. இதில், மற்றொரு மாஜியான இனிஷியல் பிரமுகரும் கலந்துகொண்டார். மீசைக்காரருக்கு சால்வை போர்த்தி, கேக் ஊட்டினார் இனிஷியல் மாஜி. மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட மீசைக்காரர், பொசுக்கென்று இனிஷியல் பிரமுகரின் காலில் விழுந்துவிட்டார். ஷாக்காகிப்போனவர்கள், “அண்ணனுக்கு 63 வயசாகுது. ஆனா, 49 வயதுக்காரர் காலில் இப்படி விழுந்துவிட்டாரே... கட்சித் தலைமையோட நெருக்கமா இருக்கிறவர்கிட்ட பணிவு காட்டி, பதவியைத் தக்கவெச்சுக்கிறதுக்காக இப்படியா பண்றது?” எனப் புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

அண்ணனின் அன்புக் கட்டளை!

இனிப்பு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான துறவி பெயர்கொண்டவர், தனது பிறந்தநாளைக் கொஞ்சம் தாமதமாகக் கொண்டாடினார். என்னவென்று விசாரித்தால்... ‘அண்ணன் புது வீடு கட்டிவருகிறார். புதிய வீட்டை அலங்காரப் பொருள்களால் அழகூட்டுவதற்காகத்தான் தனது பிறந்தநாளையே தாமதமாகக் கொண்டாடியிருக்கிறார்’ என்று புதிர் போட்டனர். விஷயம் இதுதான்... ‘பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வரும் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மரத்திலான வீட்டு அலங்காரப் பொருள்களைத்தான் கிஃப்ட்டாக வாங்கிவர வேண்டும்’ என்று அண்ணனே அன்புக் கட்டளை போட்டிருந்தாராம். அண்ணன் கட்டளையை மீற முடியுமா... யானை பொம்மை, குதிரை பொம்மை, விளக்குகள், சுவர் அலங்காரப் பொருள்கள் என அடுக்கடுக்கான அழகுப்பொருள்களைப் பரிசாகக் கொடுத்து அண்ணனைத் திணறடித்திருக்கிறார்கள் உ.பி-கள். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!