Published:Updated:

எளிமையான ஆளுநர்... ஆடம்பர அதிகாரிகள்!

பொங்கல் விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பொங்கல் விழாவில்...

ரகளை கூட்டணியில் ராஜ்பவன்

‘எளிமையாக வாழுங்கள். அது ஊழலை ஒழித்துவிடும். இதுவே என் செய்தி’ என்று தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் உரையாடுகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆனால், ``ராஜ்பவனுக்குள் நடக்கும் விஷயங்கள் அப்படி இல்லை’’ என்று சொல்கிறார்கள் அங்கு உள்ள ஊழியர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்படி அங்கே என்னதான் நடக்கிறது... விவரிக்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத பணியாளர்கள்.

பொங்கல் விழாவில்...
பொங்கல் விழாவில்...

‘‘ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொறுப்புக்கு வந்தது முதல், சிக்கன நடவடிக்கையை எடுத்து வருகிறார். அவர் வருவதற்கு முன்பு, ராஜ்பவனில் பாட்டில் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டது. ‘நீங்கள் என்ன தண்ணீர் குடிக்கிறீர்கள்?’ என்று பணியாளர்களிடம் கேட்டார் ஆளுநர். ‘கார்ப்பரேஷன் தண்ணீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறோம்’ என்று பணியாளர்கள் சொல்லவும், ‘எனக்கும் அந்தக் குடிநீரையே கொடுங்கள்’ என்றார். இதனால் இப்போது வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப் படுவதில்லை. இப்படித்தான் மின்சார சிக்கனத்தையும் மேற்கொண்டார். இதற்கெல்லாம் மேலாக, சாப்பிடும் உணவுக்கே அவர் பில் செலுத்துகிறார். எல்லாவற்றுக்கும்மேலாக இதுபோன்ற சிக்கன நடவடிக்கையால் ஏற்பட்ட நிதி சேமிப்பையும் ஆண்டுதோறும் வெளியிடுகிறார். ஆனால், அவருக்குத் தெரியாமல் அதிகாரிகள் ஆடம்பர செலவுகளைச் செய்து அரசுப் பணத்தை விரயமாக்குகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜ்பவன் கேன்டீன் பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு நாளைக்கு இங்கே 30 பேர்கூட சாப்பிடுவதில்லை. இதற்கு மூன்று சமையல்காரர்கள், ஐந்து பராமரிப்பாளர்கள் இருக்கின்றனர். உணவுப்பொருள்கள் கடுமையாக விரயமாகின்றன. உணவுப்பொருள் களை வாங்கி வருவதற்காக வாகனம் தனியாக இருக்கிறது. அதற்கு டிரைவர் உள்ளிட்ட பணியாளர்கள் இருக்கின் றனர். இந்த கேன்டீனுக்கு மிகப்பெரிய கட்டடம் இருப்பதுடன், அதற்காக மின்சார வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

கேன்டீன்
கேன்டீன்

ஆளுநர் மாளிகையின் நிதி நிர்வாகத்தைக் கவனிக்க கம்ப்ட்ரோலர் செங்கோட்டையன் தலைமையில் ஆறு அதிகாரிகள் கொண்ட குழு செயல்படுகிறது. ராஜ்பவனுக்குள்ளேயே பணியாளர் குடியிருப்பு இருப்பதால், கேன்டீனை யாரும் பயன்படுத்து வதில்லை. ஒரு டீ குடித்தால்கூட பில் தரும் ஆளுநருக்கு, நஷ்டத்தில் இயங்கும் கேன்டீன் பற்றிய தகவலை மறைத்துவிட்டனர்.

இப்படித்தான் ராஜ்பவனில் சுற்றுலா மேம்பாட்டுக்குரிய பணமும் மனித உழைப்பும் விரயமாகின்றன. தேவையில்லாத இடங்களில் பணியாளர்களை நியமித்துவிட்டு, ஆட்கள் பற்றாக் குறை எனச் சொல்லி ஊட்டி ராஜ்பவனிலிருந்து சென்னைக்குப் பணியாளர்கள் வரவழைக்கப் பட்டனர். இதற்கு, பயணப்படி வேறு செலவாகிறது.

இன்னொரு பக்கம் `பனிஷ்மென்ட் டூட்டி’ என்ற பெயரில், சென்னை ராஜ்பவனில் பணியாற்றி வந்த ஆறு அலுவலர்களையும் இரண்டு அலுவலக உதவியாளர்களையும் ஊட்டிக்கு மாற்றினார்கள். ஊட்டியில் வேலையே இல்லாமல் அவர்களுக்கு சம்பளம் அளித்துவருகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்காமல், ஓய்வுபெற்ற பணியாளர்களை நியமிக்கின்றனர்’’ என்றனர்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அரசு பொதுத்துறை வட்டாரத்தில் பேசினோம். ‘‘ராஜ்பவனில் முன்பு நடைபெற்றுவந்த இஃப்தார் விருந்து ரத்துசெய்யப்பட்டது. மற்ற விழாக்களும் நடப்பதில்லை. ஆனால், கடந்த பொங்கல் பண்டிகையின்போது திடீரென விழா எடுத்தார்கள். 2,000 பேருக்கு அழைப்புவிடுத்தார்கள். கலாசார நிகழ்ச்சி, மேடை, பூ மற்றும் மின்சார விளக்கு அலங்காரம், ‘ஹை டீ’ எனப்படும் உயர்தர தேநீர் விருந்து என்று செலவழித்தார்கள். ராஜ்பவனில் திறந்தவெளி திரையரங்கம் கட்டி பயனில்லாமல் இருக்கிறது. அங்கு இருக்கும் சிலைகளை மாற்றியமைத்து புதிய சிலைகளைத் திறக்கின்றனர். இவைதான் சிக்கன நடவடிக்கைகளா?’’ என்றனர்.

கம்ப்ட்ரோலர் செங்கோட்டையனிடம் பேசினோம். ‘‘தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் எதுவும் செய்துவிட முடியாது. ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுசென்ற பிறகே செயல்படுத்த முடியும். அவரது அறிவுறுத்தலின்படிதான் ஆளுநர் மாளிகையில் விழாக்கள் நடைபெறுகின்றன. சிக்கன நடவடிக்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். தேவையில்லாத செலவுகளைச் செய்யவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்வதில் உண்மையில்லை’’ என்றார்.