Published:Updated:

லோக்கல் போஸ்ட்

யானை
பிரீமியம் ஸ்டோரி
News
யானை

லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவியும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் மது விற்பனை சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.

லோக்கல் போஸ்ட்

மக்களை மூச்சுத்திணற வைக்கலாமா?

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரில், நகரின் குப்பைகளை அள்ளிவந்து கொட்டி நகராட்சி ஊழியர்கள் எரிப்பது வழக்கம். ‘‘கொரோனா இரண்டாம் அலையில் நோய்த்தொற்று கடுமையாகப் பரவி பல உயிர்களை பலிவாங்கிவரும் காலத்தில், இப்படி இரவு நேரத்தில் குப்பையைக் கொளுத்துவதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உட்பட கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன’’ என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ‘‘கொரோனா நோய்த்தொற்றால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து வருகிற நிலையில், குப்பைகளை எரித்து நகராட்சி மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாமா?’’ என்பது அவர்களின் வேதனையாக இருக்கிறது.

லோக்கல் போஸ்ட்

வனத்துறை அதிகாரியின் திடீர் உத்தரவு!

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழப்பதும், அது தொடர்பான சர்ச்சைச் செய்திகள் ஊடகங்களில் இடம்பிடிப்பதும் வழக்கம். புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் ‘இனி அது போன்ற சர்ச்சை ஏதும் வெடிக்கக் கூடாது’ என முடிவெடுத்த மலைக்கடவுள் பெயரைக்கொண்ட கோவை உயரதிகாரி ஒருவர், வேட்டைத்தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வனவிலங்குகளின் இறப்பைத் தடுப்பதற்கு பதிலாக, வித்தியாசமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ‘‘வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்களில் தொடங்கி அதிகாரிகள் வரை யாரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகத்தினருடன் தொடர்பில் இருக்கக் கூடாது. அவர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் அங்கம்வகிக்கக் கூடாது’’ என உத்தரவிட்டுள்ளாராம். ‘‘மீறி வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தாலோ, தகவலைப் பரிமாறினாலோ துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் எச்சரித்துள்ளாராம். ‘‘இப்படி ஒரு அதிகாரிகிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே’’ என்று நொந்தபடியே வனத்துறை ஊழியர்கள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலிருந்தும் வெளியேறிவருகிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

அலர்ட் ஆன மதுவிலக்குத்துறை!

லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவியும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் மது விற்பனை சற்றுத் தூக்கலாகவே இருக்கும். ஆனால், இந்த முறை சுற்றுலாப் பயணிகளே இல்லாத நிலையில் உள்ளூர் மக்கள் சரக்குகளை வாங்கிக் குவித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளார்கள். மே 8-ம் தேதி ரூ.3.57 கோடி, மே 9-ம் தேதி ரூ.5.03 கோடி என இரண்டு நாள்களில் ரூ.8.60 கோடி என நீலகிரி டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் விற்பனையாகியுள்ளன. மக்கள்தொகை குறைவாகவுள்ள இந்த மாவட்டத்தில் இந்த இமாலய விற்பனையைக் கண்டு திகைத்துப்போன டாஸ்மாக் நிர்வாகம், மதுவிலக்கு போலீஸார் மூலம் விற்பனை அளவு குறித்து ரகசிய சர்வேயொன்றை நடத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து, வழக்கத்தைவிட அதிக அளவு விற்பனை நடந்த ஏரியாக்களில் கள்ளச்சந்தை விற்பனையைக் கண்காணிக்க ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டுள்ளது.

லோக்கல் போஸ்ட்

இலவச இசைக் கச்சேரி!

கொரோனா சிகிச்சை மையத்தின் அருகில் செல்வதற்கே பலரும் அச்சப்படும் நிலையில், தஞ்சையைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஃபிராங்க்ளின், வாரம் ஒரு முறை வல்லம் பகுதியிலுள்ள கொரோனா மையத்துக்குச் சென்று, இசைக்கச்சேரி நடத்தி அசத்திவருகிறார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு இசைக்கச்சேரி நடத்தும் ஃபிராங்க்ளின், இதற்குக் கட்டணம் வாங்குவதில்லை. இவரது பாடலைக் கேட்டு கொரோனா நோயாளிகள் உற்சாகமடைகிறார்கள். தனிமையில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் குறைவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

‘‘இவனுகளுக்கெல்லாம் ஊரடங்கு இல்லையா?’’

தமிழகம் முழுவதுமே ‘குழுக்கடன்’ என்ற பெயரில், பல தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுத்து வருகின்றன. அவர்கள் கடனை வசூலிப்பதில் கடுமை காட்டுகிறார்கள் என்று அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வாடிக்கை. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பகீர் புகார் கிளம்பியிருக்கிறது. திருவரங்குளம் பகுதியில் மகளிர் குழுவினர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் குழுக்கடன் வாங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திவந்த மகளிருக்கு, ஊரடங்கால் தற்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை. திருப்பிச் செலுத்தாத மகளிரின் வீடுகளுக்கு வந்த அந்த நிதி நிறுவன ஊழியர்கள், ‘கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை கிளம்பப்போவதில்லை’ என்று கூறி அவர்களின் வீட்டின் முன்பு பாய் விரிந்து அமர்ந்து வசூல் நடத்திவருகிறார்கள். ‘‘ஊடரங்கு காலத்துல வருமானம் இல்லாம, சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிக்கிற எங்ககிட்ட கெடுபிடியா வசூல் செய்யுறானுங்களே... இவனுகளுக்கெல்லாம் ஊரடங்கு இல்லையா?’’ என்று புலம்புகிறார்கள்.