Published:Updated:

லோக்கல் போஸ்ட்

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

‘ஐயா... வேகத்தடையைக் காணோம்!’’

நடிகர் வடிவேலின் ‘கிணத்தைக் காணோம்’ காமெடியைப்போல், குளித்தலை நகர இளைஞர்கள் ‘ஐயா... இங்கே இருந்த வேகத்தடையை மூணு வருஷமா காணோம்’ என்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். குளித்தலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறார் என்பதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகற்றினார்கள். இன்றுவரை மீண்டும் இங்கு வேகத்தடை அமைக்கப்படவே இல்லை. ‘‘அபாயகரமான வளைவு என்பதால், தினமும் விபத்துகள் நடந்தவண்னம் இருக்கின்றன. வேகத்தடை அமைக்கச் சொல்லி, நெடுஞ்சாலைத்துறையிடம் தொடர் மனு கொடுத்தும் பலனில்லை. ஆனால், வேகத்தடை அறிவிப்புப் பலகை மட்டும் அங்கு சோகமாக நின்றுகொண்டிருக்கிறது. அதனால்தான், கடைசி முயற்சியாக இப்படியொரு மனுவைக் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

லோக்கல் போஸ்ட்

‘‘15 ரூபாய் எதுக்கு?”

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில், புதுச்சேரியிலிருந்து காரைக்கால் செல்வதற்குப் பயணக் கட்டணமாக ரூ.110 வசூலிக்கப்படுகிறது. அதே அரசுப் பேருந்தில் காரைக்காலிலிருந்து புதுச்சேரி செல்வதற்குப் பயணக் கட்டணமாக ரூ.125 வசூல் செய்யப்படுகிறது, ‘‘எதற்காக இந்த 15 ரூபாய் வித்தியாசம்... இதைப் புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர.பிரியங்கா சரிசெய்வாரா?’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்!‘

அடுக்கடுக்கான புகார்கள்... தொடர்ந்து தப்பிக்கும் மருத்துவ அதிகாரி!

சென்னையின் குறிப்பிடத்தக்க இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கண்காணிப்பாளராக இருக்கும் அக்கட தேசத்து கடவுளின் பெயர்கொண்ட அதிகாரிமீது பல சர்ச்சைகள், புகார்கள் உள்ளன. ‘அவரைக்காட்டிலும் சீனியர்கள் இருந்தும், மேலதிகாரிகளின் அனுசரணையால் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டது; ஒரே மருத்துவமனையில் இரண்டு மேட்ரன்களை நியமித்தது; மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்தை கெஸ்ட் ஹவுஸாகப் பயன்படுத்தியது; மருத்துவமனைப் பெண் பணியாளரை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியது... எனக் குவிந்தன புகார்கள். ஆனால், முன்னாள் மாண்புமிகு மற்றும் உயரதிகாரிகளிடமிருந்த நெருக்கத்தால், அத்தனை புகார்களிலிருந்தும் தப்பினார். ஆட்சி மாறிய பிறகும் ஒரு நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில் பணியாளரைச் சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசிய புகாரையும் ஊற்றி மூடவைத்துவிட்டார். இந்நிலையில், அந்த அதிகாரி சட்டத்துக்கு முரணாகப் பதவி உயர்வு பெற்ற விவரத்தைக் கையிலெடுத்து, புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார்கள் மருத்துவமனைப் பணியாளர்கள். அதாவது ஒரே நாளில், ஒரே ரெஃபரன்ஸ் எண்ணில், சீனியர் சிவில் சர்ஜனாகவும், சீஃப் சிவில் சர்ஜனாகவும் அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான முறையான ஆதாரத்துடன் புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தப் புகாருக்காவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காத்திருக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்!

லோக்கல் போஸ்ட்

கப்பம் கட்டும் ஆவின் அதிகாரி!

கோவை ஆவின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிவரும் உயரதிகாரி ஒருவருக்கு, ஆவினில் நீண்ட நெடிய அனுபவம் உண்டு. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அதிகாரி அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறாராம். “ஆவின் தலைவர்களாக இருந்த அ.தி.மு.க-வினரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து, பல முறைகேடுகளில் ஈடுபட்டு அடைந்த வளர்ச்சிதான் அது!” என்கிறார்கள். இவர்மீது எழுந்த புகார்கள் அனைத்தும் புஸ்வாணம் ஆகின. அதற்குக் கைம்மாறாக ஆட்சி மாறியும்கூட அ.தி.மு.க-வினருக்குக் கப்பம் கட்டிவருகிறாராம். அவர்மீது நடவடிக்கை எடுத்தால்தான், கோவை ஆவினில் முறைகேடுகள் குறையும் என்று மேலிடத்துக்குப் புகார்கள் பறக்கின்றன. ஆவினின் நிலை ‘அந்தோ’ பரிதாபம் என்கிறார்கள்!

மாயமான இரண்டு மான்கள்!

தஞ்சை மக்களின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக சிவகங்கை பூங்கா விளங்கிவந்தது. அங்கு ஒட்டகம், முள்ளம்பன்றி, புனுகுப்பூனை, நரி, கரடி, குரங்கு, முயல், புள்ளிமான்கள் எனப் பல உயிரினங்கள் இருந்ததால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் அதிகமாக வந்து சென்றார்கள். தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தப் பூங்கா, சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டமைக்கப்படுகிறது. எனவே, அங்கிருந்த 43 புள்ளிமான்களையும் கோடியக்கரையிலுள்ள மான்கள் சரணாலயத்துக்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. ஆனால், ``41 மான்கள் மட்டுமே கோடியக்கரை சரணாலயத்துக்கு அனுப்பப்பட்டன. காணாமல்போன இரண்டு மான்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த மனோகரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, ‘‘அந்த இரண்டு மான்களும் உயிரிழந்துவிட்டன. அவற்றின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism