Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

கவலைக்குள்ளாகும் காரைக்கால் நீராதாரம்!

“காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து விழிதியூரில், 2018-ல் பண்ணைக்குளம் அமைக்க 15 நாள்கள் அனுமதி பெற்று மணல் எடுத்தார் ஒருவர். அந்த பர்மிட் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அதே குளத்தில் கடந்த ஆறு மாத காலமாக நாள் ஒன்றுக்கு 20 லோடுகள் வரை மணல் கடத்தப்படுகிறது. இந்தப் பண்ணைக் குளத்தைச் சுற்றியுள்ள வயல்களும் விலைக்கு வாங்கப்பட்டு தோண்டப்படுகின்றன. `6 அடிக்கு மேல் தோண்டக் கூடாது’ என்ற அரசு உத்தரவை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக 30 அடி வரை மணல் எடுக்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

காரைக்காலின் பெருமளவு தண்ணீர்த் தேவையை விழிதியூர் பொதுப்பணித்துறை நீரேற்றும் நிலையங்கள் தீர்த்துவைத்துக்கொண்டிருக்கின்றன. இது அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தும், சம்பந்தப்பட்ட அனைவரும் ‘கவனிக்கப்படுவதால்’ யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி காரைக்கால் மாவட்ட மக்களின் நீராதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது காரைக்கால் மக்களின் கோரிக்கையாக உள்ளது!

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

அதிரடிகாட்டிய திருவாரூர் மாவட்ட நீதிமன்றம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இயங்கிவரும் டூ வீலர் ஷோரூம் ஒன்றில், சிவக்குமார் என்பவர் 2016-ம் ஆண்டு, பி.எஸ்-3 ரக இரு சக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார். அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து தராமல், டூ வீலர் ஷோரூம் காலதாமதம் செய்திருக்கிறது. ‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பி.எஸ்-3 ரக இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்வதற்கும், பதிவுசெய்வதற்கும் தடைவிதிப்பதாக’ 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், சிவக்குமாரின் இரு சக்கர வாகனத்தைப் பதிவுசெய்ய முடியாமலேயே போய்விட்டது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டு, நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்தார் சிவக்குமார். இந்த வழக்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ‘சிவக்குமாரிடம் விற்பனை செய்த இரு சக்கர வாகனத்தை, பெற்றுக்கொண்டு, அதற்குரிய விலையான 56,500 ரூபாயை, டூ வீலர் ஷோரூம் அவருக்கு வழங்க வேண்டும். அதற்கு 5 சதவிகித வட்டியையும் சேர்த்துத் தர வேண்டும். மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாயும், இந்த வழக்குக்கான செலவுத் தொகையாக 10,000 ரூபாயும் வழங்க வேண்டும்’ என நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது!

தொடரும் பெரம்பலூர் டவுசர் கொள்ளையர்கள் கைவரிசை!

பெரம்பலூர் மாவட்டத்தில் முகமூடி மற்றும் டவுசர் கொள்ளையர்களால் நிம்மதியிழந்து நிற்கிறார்கள் பொதுமக்கள். “சொந்தக்காரங்க வந்திருக்கிறோம்” என்றோ “பக்கத்துல ஒரு விபத்து நடந்துவிட்டது” என்றோ சொல்லிக் கதவைத் தட்டித் திறக்கவைத்து, வீட்டிலுள்ள பெண்களைத் தாக்கி, நகைகளைப் பறித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு, வடக்கு மாதவி சாலையிலுள்ள நான்கு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் வீட்டில் 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வாரத்துக்கு இரண்டு மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்துகொண்டிருப்பதால், நிம்மதியிழந்து நிற்கிறார்கள் பெரம்பலூர் மக்கள். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் திருடர்கள் இன்று வரையிலும் சிக்கவில்லை!

லோக்கல் போஸ்ட்

சர்ச்சையில் சிவகாசி மனமகிழ் மன்றம்!

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு, பராசக்தி காலனிப் பகுதியில், சுமார் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில், வீடொன்றில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுக்கூடம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மனமகிழ் மன்றம் அமையவிருக்கும் இடத்துக்கு அருகிலேயே பொது வழிபாட்டுத்தலம், பள்ளி ஆகியவை உள்ளன. கல்லூரிகளுக்கும், மேல்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்கள் அதைக் கடந்தே செல்ல வேண்டும். இது குறித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தும் எவ்விதப் பலனும் இல்லை எனச் சொல்கிறார்கள். எனவே, மனமகிழ் மன்றம் அமைக்கவிடாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லோக்கல் போஸ்ட்

டிஜிட்டலுக்கு மாறிய கொங்கு மண்டலச் சாமியார்கள்!

கொங்கு மண்டலத்தைச் சுற்றி பில்லி, சூனியத்தில் ஈடுபடும் மாந்திரீகச் சாமியார்கள் புற்றீசல்போலப் பெருகிவிட்டனர். லோக்கல் சேனலில் விளம்பரம் கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்ற மார்க்கெட்டிங் வித்தைகளையெல்லாம் கடந்து தற்போது, முழுக்க முழுக்க டிஜிட்டலில் மார்க்கெட்டிங் செய்துவருகின்றனர். வாடிக்கையாளர்களை நேரில் பார்த்தால் சில பிரச்னைகள் வருகின்றன என்பதால், சந்திப்பையும் டிஜிட்டலில் மாற்றிவிட்டனர். வி.வி.ஐ.பி-கள், அரசியல்புள்ளிகள் முக்கியமான விஷயங்களை வாட்ஸ்அப் காலில் பேசுவதுபோல, இந்த போலிச் சாமியார்களும் வாட்ஸ்அப் வீடியோ காலில் முகம் காட்டிப் பேசுபவர்களிடம்தான் டீலிங் வைக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism