Published:Updated:

காலண்டர் முதல் சொகுசுக் கப்பல் வரை... தனியார்மயமாகிறதா தமிழ்நாடு சுற்றுலாத்துறை?

சுற்றுலாத்துறை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத்துறை

தனியார் புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் நவீன கேமரா, தொழில்நுட்பங்கள் அரசிடம் இல்லை

காலண்டர் முதல் சொகுசுக் கப்பல் வரை... தனியார்மயமாகிறதா தமிழ்நாடு சுற்றுலாத்துறை?

தனியார் புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் நவீன கேமரா, தொழில்நுட்பங்கள் அரசிடம் இல்லை

Published:Updated:
சுற்றுலாத்துறை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத்துறை

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் தி.மு.க அரசே, தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தனியாரை அனுமதித்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

‘அரசின் காலண்டர் முதல் சொகுசுக் கப்பல் வரை பல தனியார் நிறுவனங்களை, சுற்றுலாத்துறை தனக்குள் முழுமையாக அனுமதித்துவருகிறது’ என்று ‘லீட்’ கொடுத்துப் பேசுகிற சுற்றுலாத்துறையின் மூத்த அதிகாரிகள் சிலர், ‘‘கோர்டிலியா குரூஸ் எனும் தனியார் நிறுவனம் தனது சொகுசுக் கப்பலை, சென்னையில் இயக்க முன்வந்தது. சென்னை துறைமுகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எந்த வருவாயும் கிடையாது. ஆனாலும்கூட இதற்கான முழு ஏற்பாட்டையும் சுற்றுலாத்துறைதான் மேற்கொண்டது.

இதேபோல், பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை நிதியளிப்பு செய்துவருகிறது. அண்மையில், ‘வாவ் தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில் சென்னையில், புகைப்பட விருது நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை நிதியுதவி வழங்கியது. சுற்றுலாத்துறை சார்பில், புகைப்படம் எடுப்பதற்கென்றே அரசுப் பணியாளர்கள் இருக்கும்போது, பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் ஒருவரின் புகைப்படங்களை விலைக்கு வாங்கி, சுற்றுலாத்துறையின் 2022-ம் ஆண்டுக்கான காலண்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சுற்றுலாத் தலங்களைப் பிரதிபலிக்கும் 75 குறு வீடியோக்களையும் ஆறு தனியார் நிறுவனங்களிடமிருந்து லட்சக்கணக்கில் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். இதேபோல், துறை சார்ந்த பணிகளைச் செய்வதற்கென்று அரசுப் பணியாளர்கள் இருக்கும்போது, சமூக வலைதளத்தில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியாட்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்’’ என்றனர் ஆதங்கத்துடன்.

காலண்டர் முதல் சொகுசுக் கப்பல் வரை... தனியார்மயமாகிறதா தமிழ்நாடு சுற்றுலாத்துறை?

“சைக்கிளிங், கோடைக் கொண்டாட்டம், வாவ் தமிழ்நாடு, பயணம், சுற்றுலா கண்காட்சி என்று சமீபகாலமாக சுற்றுலாத்துறை நடத்திய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனியாரின் தலையீடு மிக அதிகம். தேக்கடியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாப் படகான ‘தமிழன்னை’ இயக்கப்படாமல் கிடக்கிறது. கேரளப் படகுகளே கல்லாகட்டுகின்றன. ராமேஸ்வரம் - தலைமன்னார், சென்னை - தூத்துக்குடி போன்ற கப்பல் அறிவிப்பும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதிலெல்லாம் ஆர்வம் காட்டாமல் தனியார் கப்பல் சேவையில் சுற்றுலாத்துறை ஆர்வம் காட்டுகிறது” என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தனியார்மய புகார்களுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் மதிவேந்தனைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, சுற்றுலாத்துறையின் இயக்குநர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம்.

‘‘சொகுசுக் கப்பல் திட்டத்தின் மூலம் அரசுக்கு நேரடி வருவாய் இல்லைதான். ஆனால், கப்பலுக்கு வந்து செல்லும் எலைட் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள், அவர்கள் பயன்படுத்துகிற வாடகை கார்கள் மற்றும் ஜி.எஸ்.டி வரி என மறைமுகமாக மத்திய, மாநில அரசுகளுக்கு நிறைய வருவாய் கிடைக்கும். தனியார் புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் நவீன கேமரா, தொழில்நுட்பங்கள் அரசிடம் இல்லை. எனவே, திறமையான வெளிநபர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொள்கிறோம். ‘வாவ் தமிழ்நாடு’ அமைப்பின் நிகழ்ச்சிக்கு நிதி வழங்கி, அதில் தேர்வுபெற்ற சிறந்த புகைப்படங்களை நாமே வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறோம். இது நமக்கு லாபம்தானே’’ என்றார்.

நம் அரசு ஊழியர்களுக்குத் திறமை போதவில்லையா அல்லது அவர்களில் திறமையானவர்களைப் பயன்படுத்திக்கொள்ள அரசுக்குத் தெரியவில்லையா?