Published:Updated:

ஜூ.வி ஆக்‌ஷன்... மீட்கப்பட்ட வக்பு வாரிய நிலம்!

வக்பு வாரிய நிலம்
பிரீமியம் ஸ்டோரி
வக்பு வாரிய நிலம்

மன்னார்குடி கீழ ராஜவீதி பள்ளிவாசல் வக்பு வாரியத்துக்கு பாத்தியப்பட்டது. முறையாகத் தேர்தல் நடத்தித்தான் கமிட்டியை அமைக்க வேண்டும்.

ஜூ.வி ஆக்‌ஷன்... மீட்கப்பட்ட வக்பு வாரிய நிலம்!

மன்னார்குடி கீழ ராஜவீதி பள்ளிவாசல் வக்பு வாரியத்துக்கு பாத்தியப்பட்டது. முறையாகத் தேர்தல் நடத்தித்தான் கமிட்டியை அமைக்க வேண்டும்.

Published:Updated:
வக்பு வாரிய நிலம்
பிரீமியம் ஸ்டோரி
வக்பு வாரிய நிலம்

இஸ்லாமிய மக்களுக்காக பண்டைய மன்னர்களாலும், செல்வந்தர்களாலும் வழங்கப்பட்ட நிலங்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் வக்பு வாரியம். இப்படி தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை, லே-அவுட் அமைத்து விற்க முயன்ற விவகாரத்தில் ஜூ.வி நேரடியாகக் களமிறங்கி மீட்டுக்கொடுத்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு வக்பு வாரிய சேர்மனும் உடந்தை என்கிற குற்றச்சாட்டுகளும் வரிசைகட்டுகின்றன.

திருச்சி மாவட்டம், தென்னூரில் தர்கா சார்பில் வக்பு வாரியத்துக்கு அளிக்கப்பட்ட நிலத்தை லேஅவுட் போட்டு விற்க முயல்வதாக நம்மிடம் புகாரளித்திருந்தார் அப்பகுதியைச் சேர்ந்த ஃபைசல்கான். “தென்னூர், ஒத்தமினார் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள ஃபர்ஷுல்ஷா தர்காவுக்காக ராணி மங்கம்மாவால் கொடுக்கப்பட்ட 2069 ஏக்கர் நிலத்தில், ஏழு ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதை வக்பு வாரியம், இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகம் என்ற அமைப்புக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தது. வக்பு நிலத்தை விற்கவோ, லேஅவுட் அமைக்கவோ முடியாது என்ற விதியை மீறி, அந்த ஏழு ஏக்கர் நிலத்தை 100-க்கும் மேற்பட்ட பிளாட்களாகப் பிரித்து விற்க முயல்கிறார்கள். இது பற்றி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன். நீங்களும் கொஞ்சம் விசாரித்தால் நல்லது” என்று நம்மிடம் கூறியிருந்தார் ஃபைசல்கான்.

ஜூ.வி ஆக்‌ஷன்... மீட்கப்பட்ட வக்பு வாரிய நிலம்!

இந்த விஷயத்தை நாம் மே 18-ம் தேதி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். நம் முன்னிலையிலேயே, வக்பு வாரிய சி.இ.ஓ-வுக்கு போன் செய்தவர், புகார் குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பிறகு மே 20-ம் அமைச்சர் தரப்பிலிருந்து நம்மை அழைத்து, “நீங்கள் சொன்ன தகவல் உண்மை என்பதையறிந்து, இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகத்துக்குக் கொடுக்கப்பட்ட ஏழு ஏக்கர் நிலத்தை வக்பு வாரியமே மீண்டும் எடுத்துக்கொண்டது” என்ற தகவலைத் தெரிவித்தனர். புகார் சொன்ன ஃபைசல் மீண்டும் நம்மை அழைத்து, “நாங்கள் பல காலமாகப் போராடியும் கிடைக்காத நீதி, தற்போது ஜூ.வி-யால் சாத்தியமாகியிருக்கிறது. நன்றி!” என்றார் மகிழ்ச்சி பொங்க.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு அதே திருச்சியிலிருந்து சையத் அமீனுதீன் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டார். “திருச்சி மையப் பகுதியிலிருக்கும் நத்தர்வலி தர்காவின் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி வக்பு வாரியம் செயல்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, வெவ்வேறு அறக்கட்டளைகளில் பதவியிலிருக்கும் இருவரை, இங்கு அறங்காவலர்களாக நியமித்துள்ளனர். இதன் பின்னால் வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான் இருக்கிறார்” என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

இதேபோல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் அப்துல் கரீம் நம்மைத் தொடர்புகொண்டு, “மன்னார்குடி கீழ ராஜவீதி பள்ளிவாசல் வக்பு வாரியத்துக்கு பாத்தியப்பட்டது. முறையாகத் தேர்தல் நடத்தித்தான் கமிட்டியை அமைக்க வேண்டும். ஆனால், சேர்மன் அப்துல் ரஹ்மான், தேர்தலை நடத்தாமல் புதிய கமிட்டியை அமைத்திருக்கிறார். புதிய நிர்வாகிகள் எங்களை அடித்து, மிரட்டி சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிவாசல் ஆவணங்களையெல்லாம் அள்ளிச் சென்றுவிட்டனர். அமைச்சர் மஸ்தானிடம் புகாரளித்து, அவரது பரிந்துரைக் கடிதத்துடன் சேர்மன் அப்துல் ரஹ்மானைச் சந்தித்தோம். அவர் எங்களை ஒருமையில் பேசியதுடன், தாக்கவும் செய்தார்” என்றார் வேதனையுடன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு லண்டனில் இருக்கும் வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மானை வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டோம். “அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள். நீதிமன்ற உத்தரவை ஒருபோதும் வாரியம் மீறியதில்லை. அவ்வாறு மீறியதாகச் சொல்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாமே... நத்தர்வலி தர்கா விவகாரத்தில் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்தும் அவர்கள் வெளியேறாமல் இருந்ததால்தான் நடவடிக்கை எடுத்தோம். மன்னார்குடி விவகாரத்தைப் பொறுத்தவரை நீண்ட நாள்களாக அங்கு தேர்தலே நடக்கவில்லை. அதனால், முதற்கட்டமாக குழு அமைத்திருக்கிறோம். மூன்று மாதங்களில் தேர்தல் நடத்திவிடுவோம். ஒருமையில் பேசினேன், முதியவரைத் தள்ளிவிட்டேன் என்பதற்கெல்லாம் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. என்மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள்தான் இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

சையத் அமீனுதீன், அப்துல் கரீம், அப்துல் ரஹ்மான்
சையத் அமீனுதீன், அப்துல் கரீம், அப்துல் ரஹ்மான்

தர்கா நிலம் லேஅவுட் போடப்பட்டதிலும் அப்துல் ரஹ்மான் பெயர் அடிபடுவதால் அது பற்றி அவரிடம் கேட்டோம். “ஃபர்ஷுல் ஷா தர்கா விவகாரத்தில், மதரஸா அமைப்பதற்காக வக்புக்குச் சொந்தமான நிலம் இஸ்லாமிய நல்வாழ்வுக் கழகத்துக்குக் கொடுக்கப்பட்டது. வாரியம் சார்பில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எவ்விதப் பணியும் செய்யவில்லையென்றால், அந்த நிலத்தை மீண்டும் வாரியம் எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்திருந்தோம். அதன்படி வாரியம் கைப்பற்றிவிட்டது. இதில் எவ்விதத்திலும் எனக்குத் தொடர்பில்லை” என்றார்.

நிறைவாக மீண்டும் வக்பு வாரியத்துறை அமைச்சரான மஸ்தானிடம் மற்ற இரண்டு விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது, “எனது பார்வைக்கு வந்த மனுக்களை வக்பு வாரிய சி.இ.ஓ-வுக்கு அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அங்கிருந்து பதில் வந்ததும், அதன் உண்மைத்தன்மையை வைத்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றார் உறுதியான குரலில்.

‘சிவன் சொத்து குல நாசம்’ என்பது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்... கனவான்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism