Published:Updated:

Tamil News Today: `சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!’-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

30-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Jun 2021 1 PM

`சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!’

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்புக்குத் தகுந்தவாறு முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும். மக்கள் அதிக அளவில் மையங்களில் கூடி ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

 எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி!

பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் குறைப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கட்டுமானப் பொருள்கள் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தடையின்றி அம்மா சிமென்ட் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்" என்றார். சசிகலா குறித்த கேள்விக்கு, ``சசிகலாவுக்கும் அதிமுக-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

30 Jun 2021 11 AM

தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்றார்!

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: வீரப்பனுக்கு ஸ்கெட்ச் முதல் கோவை என்கவுன்ட்டர் வரை..! - மினி ஃப்ளாஷ்பேக்

தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், இன்று காலை தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்றார். ஓய்வுபெறும் டி.ஜி.பி திரிபாதிக்கு பாரம்பர்ய முறைபடி வழியனுப்பு விழாவும் நடைபெற்றது.

30 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,03,62,848 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 817. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,98,454 -ஆக உயர்ந்துள்ளது.

டெல்டா ப்ளஸ் கொரோனா
டெல்டா ப்ளஸ் கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,94,27,330-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,37,064 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 60,729 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 33,28,54,527 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

30 Jun 2021 7 AM

சசிகலாமீது காவல்துறையினர் வழக்கு பதிவு! - விழுப்புரம் மாவட்ட காவல்துறை

சசிகலா
சசிகலா

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம், சில நாள்களுக்கு முன்பு திண்டிவனம், ரோசனை காவல் நிலையத்தில் தனக்கு வந்த மிரட்டல்கள் தொடர்பாக புகார் செய்திருந்தார். சசிகலாவின் தூண்டுதலின் பேரில் சிலர் தொலைபேசி வாயிலாகத் தனக்கு கொலை மிரட்டல்விடுவதாகப் புகாரில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது 501(1), 507 r/w, 109 IPC and 67 IT Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு