Published:Updated:

Tamil News Today: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது என்.டி.ஏ!

01-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Nov 2021 7 PM

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது என்.டி.ஏ!

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் தற்போது (National Testing Agency) என்.டி.ஏ-யில் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், அந்தத் தடை உத்தரவை அண்மையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை என்.டி.ஏ மீண்டும் தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், அண்மையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை என்.டி.ஏ-வின் அதிகாரபூர்வ தளமான Neet.nta.nic.in-வில் காணலாம் என்றும், தேர்வு முடிவுகளுடன் கட் ஆஃப் விகிதம், தரவரிசைப் பட்டியல் ஆகியவற்றையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. `தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும்’ என்று தேர்வு முகமை அறிவித்திருந்ததால், மாணவர்கள் காலை முதலே நீட் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

நீட்
நீட்

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தற்போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவுகளை மாணவர்களின் மின்னஞ்சலுக்கு நேரடியாக அனுப்பியிருக்கும் தேசிய தேர்வு முகமை, விரைவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் பதிவிடப்படும் என்று தெரிவித்திருக்கிறது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவதற்கு முன்பு, நீட் தேர்வு 2021-ன் விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை குறிப்பிட்டிருக்கிறது.

01 Nov 2021 11 AM

வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வேளச்சேரியில் ரூ.67 கோடி செலவிலும், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ரூ.93 கோடி செலவிலும் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வேளச்சேரி, விஜயநகர் சந்திப்பில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. அதில், தரமணி இணைப்பு சாலையையும் வேளச்சேரி புறவழிச்சாலையையும் இணைக்கும் மேல்தட்டு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எதிரே 100 அடி சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை நேரில் சென்று திறந்துவைத்தார்.

01 Nov 2021 11 AM

`வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து' - மதுரை உயர் நீதிமன்றக் கிளை

வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சாதிரீதியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தற்போது மதுரைக் கிளை உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் விளக்கம் போதுமானதாக இல்லையென்று கூறி 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.

01 Nov 2021 8 AM

தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக மாநிலத்திலுள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பிவருகின்றன. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் மேலும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்
ரா.ராம்குமார்

தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக, வேலூர், நெல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு