Published:Updated:

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு: டாஸ்மாக் திறப்பு; இ-பாஸ்,இ-பதிவு ரத்து! எதற்கெல்லாம் அனுமதி?

டாஸ்மாக்
டாஸ்மாக்

02-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Jul 2021 8 PM

தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு

ஜூலை -5 வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது 12 ஆம் தேதிவரை மேலும் சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

ஜூலை 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை எனவும், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் (Shopping Complex/ Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். ஜவுளிக் கடைகள், நகைக்க கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தளங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என தமிழக அரசு அறிவித்துள்ளது.

02 Jul 2021 12 PM

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி சந்தீப் குமார், சிவகுமார் ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

02 Jul 2021 12 PM

``கழக ஆட்சியில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் ராஜ மரியாதை!’’ - சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

திருமயம் அருகேயுள்ள குளி பிறை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ``நமது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ராஜமரியாதை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, தொகுதிக்குள் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் சுதந்திரமாகக் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்போது தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனாலும், தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அரசைக் குறைகூறி வருகின்றனர்’’ என்றார்.

02 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,04,58,251 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 853. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,00,312 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,09,637 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 59,384 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 34,00,76,232 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

02 Jul 2021 8 AM

தளர்வுகளுடன் ஊரடங்கு?! - இன்று ஆலோசனை 

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு குறையத் தொடங்கியது. தற்போதைய ஊரடங்கு ஜூலை மாதம் 5 -ம் தேதி காலைவரை அமலில் இருக்கும். இந்தநிலையில், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

02 Jul 2021 8 AM

சென்னையிலும் 100 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை!

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த நிலையில், இன்று தலைநகர் சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.13 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

02 Jul 2021 8 AM

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்?

மத்திய அமைச்சரவை கூட்டம்
மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு, கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின்னர், அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் இருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும் என்பதால், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். மேலும், விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு